கவிதை:
587
மரணம் நிச்சயம்!

வாழ்வின் சுவர்களில்
கொட்டை எழுத்தில்
எழுதப் படுகிறது மரணம்;
படிக்க மட்டுமே நாளாகிறது!
---------
எத்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்;
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது -
தனக்கான மரணம்!
---------
யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டா செல்கிறது மரணம்?
விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்;
பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை -
நிறைய பேரின் வாழ்க்கை!
---------
என்ன தான் மனிதன்
செய்தாலும் - மனிதனை
செத்து தொலை என்று
சொல்ல விடுவதேயில்லை மரணம்;
மீறி சிலர் சொல்கிறார்கள்
ஏன்; கொலை கூட செய்கிறார்கள்
மனிதரற்றோர்;
மரணம் அவர்களை
மன்னிப்பதேயில்லை, மாறாக
தினம் தினம் கொள்கிறது,
கடைசி ஓர்நாளில்
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் நாளில்
அவர்களை இறந்ததாக -
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!
---------
பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பென்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;
ஆனால் -
நெருங்கும் முன்
நன்றாகப் பார்த்துக் கொள்கிறது!
-வித்யாசாகர்.
|
|