கவிதை: 649
கோபம் எனும் கொடுமை!

கோபத்தின்
உச்சத்தில்
வாழ்வின் அவலங்களே
கைகொட்டிச் சிரிக்கின்றன.
நரநரவென்று மென்ற
பற்களின் நசுக்களில்
இரத்த உறவுகளே
சிக்கித் தவிக்கின்றன.
உணர்ச்சிப் பொருக்கா
நரம்புப் புடைப்பில்
உறங்கா இரவுகளே கோபத்தின்
சாபங்களாகின்றன.
கோபம் ஒரு ஆயுதமென்று
ஏந்தப்பட்ட கைகளில் - கூட
வாளாய் வீசி அறுக்கப்பட்ட இதயங்கள் தான்
கொட்டிக் கிடக்கின்றன.
இளமை தொலைந்தும்
முதுமை கடந்தும்
மரணத்தின் உச்சம்வரை
கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன.
நட்பு மறந்து, நன்றி துறந்து
கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை
மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில்
கோபம் முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை.
கைகொட்டி சிரித்த
நான்கு பேர் சிரிப்பிற்கு,
காலம் முழுதிற்காய் வீழும்
ஒற்றை பழிச்சொல்லிற்கு,
நிறைய வீடுகளின் காரணம் -
வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே.
இதயங்கள் அறுபடாத
கோபமும்,
உணர்ச்சிப் பெருக்கலில்
புரிதலும்,
நன்மை பிறப்பிக்கும்
நோக்கும் கொண்டு -
தனக்குள் தானென்னும் செருக்கும் விடுப்பின்
அதையும் கடந்து வரும்...கோபமே
சமுகத்தின் மீப்பெறு ஆயுதமென்று கொள்க!!
-வித்யாசாகர்.
|
|