|
கவிதை: 658
தமிழ்க் கொடியேற்றிட...?

அயல்நாட்டு நவநாகரிகத்தில் சிக்கி
தமிழ் மறந்த நச்சரவங்களே!
தாய்ப்பாலில்லை என்பதால்
தாயைக் கொல்வதா?
சொத்தில்லை என்பதால்
தந்தயைத் தள்ளுவதா?
தமிழால் பயனில்லை என்று
தரையில் போட்டு மிதிப்பதா?
நிலையாப் பொருள் தேடி
நிலையான தமிழ் மறந்தீர்
தொலையும் பொருள்தேடி
தொலையா தொல்தமிழ் தொலைத்தீர்!
வறுமயுற்ற போதும் - நான்
வருந்தவில்லை - தமிழ்
சிறுமையடையும் போது
து டிக்கிறேன்
பெருமைக்கு சொல்லவில்லை - மக்கள்
ஒருமைப்பாட்டுக்குச் சொல்கிறேன்!
கான்வென்ட் கல்வி கற்க
கற்பக விருட்சத்தைச் சாய்ப்பதா?
ஆங்கிலம் பயில வேண்டி
ஆலமரத்தை அறுப்பதா?
அன்புத் தமிழை இகழ்ந்து
அயல்மொழிக்கு
அச்சாரம் கொடுப்பதா!
அற்பவாழ்வு பெறுவதற்கு
அற்புதத்தை இழப்பதா!
வாழவைக்கும் தமிழகத்துக்கு
ஒண்ட வந்த பிடாரியே ஒதுங்கிப்போ!
அண்ட வந்த பிடாரியே - நீ
அடங்கிப்போ!
தமிழ் சிங்கங்களே - உங்கள்
மனம் என்ன விளையா நிலமா
கலையாத கருமேகமா
கம்பீரமில்லாத பூதமா
கரையா ஒளிவீசும் கற்பூரத்தமிழைக்
குறையாக நினத்தீரோ!
மறவனே தொங்கவிட்ட
முகத்தைத் தூக்கி நிறுத்தி
தொடைதட்டி தமிழ்க்கொடியேற்ற
நற்றமிழ் புகழ் பரப்ப
நாளிரண்டு திசையும் புறப்படுவீர்!
-விஷ்ணுதாசன்.
|