கவிதை: 696
உணர்ந்திட முடிகிறதா...?

மகிழ்பூத்த மாலையொன்றில்தான் நம்
தோழமையும் முகிழ்த்திற்று
இருவரலைவரிசையும்
ஒரேவரிசையானதால்தானோ?
உணர்வுகளும் மிக ஒன்றிற்று
உனதாளுமைக்கும் ஆற்றலுக்குமப்பாலெனை
ஈரத்துநின்றதெல்லாமுன்
பனிபடர்ந்த பசுமை செறிந்த
நேசப்பார்வையொன்றுதான்.
உறவுத்தளைகளுக்குள் மிகச்சராசரியாய்
குறுகிக்கரைந்த என்பொழுதுகளை
வண்ணப்பூக்களின் பெருங்குவியல்களாலும்
நேர்த்திநிறை நறுமணங்களாலும்
நறுந்தேனின் ஈரலிப்பாலும் மிகப்பிரமாண்டமாய்
நிரப்பிவைத்தாயுன் நட்பினால்...
என்னசைபேசியின் கண்ணாடிக்குறுந்திரைக்குள்
ஜொலிக்கும் நட்சத்திரக்கோர்வையாயுன் பெயர்
ரீங்காரமிடும் கணங்களுள்ளே…
என் கேவல்களில் ததும்பும் துளிகளின்
அன்னைமடியாகுவாய்….. !
திசைப்படுத்தியே
தந்தைமொழியாகுவாய்….!
துறைகடக்கையிலே விரல்பிடிக்கும்
உடன்பிறப்பாகுவாய்….!
இன்னமும்….உன்
நலனை மட்டுமே மையமிட்ட ஒரு
நெடியபிரார்த்தனைக்காய்
வான்பார்த்த என் விரல்களுக்குள்ளே
என்மடி வளரும் சேயாகுவாய்……..!
இப்படியாய்…….
ஒரு வண்ணப்பூச்சியின்
வாழ்வியல்வளையலாய்
உருமாறலுறும் நம்
எல்லைதாண்டாத் தோழமையின் விரிகைக்குள்ளே
அந்தக் கோடிச்சூரியரும் கோடிகோடிச்சந்திரரும்
சிறுபுள்ளியாய் தேய்ந்தழிவதைஉன்னாலும்
உணர்ந்திட முடிகிறதா…….?
-எஸ். பாயிஸா அலி.
|