கவிதை: 734
இயற்கை இறையானது!

இயற்கை!
இறைவன் மறைந்து கொடுத்த கொடை!!
இயற்கை!
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை!!
விடையின் விளக்கம் சொல்கிறேன்
சற்று காது கொடுப்பீர்களா?
வெளிச்சம் தந்ததால் இயற்கை
சூரியக் கடவுளானது!!
தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை
மழைதேவன்... கடல்தேவியானது!!
பூமியின் இருப்பினால் விளைச்சளால்
இயற்கை! பூமித் தாயானது!!
காற்றின் சுவாசத்தால் இயற்கை
வாயுதேவன் ஆனது!!
பணத்தின் ஆளுமையால் மரம் கூட
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது!!
படிக்கும் படிப்பு! அறிவு! பகிர்தல்! கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது!!
வாழவைத்த இயற்கைக்கு
வாஞ்சையாக நன்றி சொன்னால்
கேடுகளும் தீருமென நம்பினோம்!
நம்பிக்கை பக்தியானது!!
மரங்களின் பலனால்
மண்ணின் உடைமையால்
கற்களின் உரசலால், மறைப்பினால்,
இயற்கை!
மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,
நெருப்பிலும் கூட கடவுளானது!!
இவ்வளவு ஏன் -
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன் -
என் எழுத்து கூட கவிதையானது!!
ஆயினும்,
கடவுளை போற்ற மதத்தைப் படைத்து
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்.
கடைசியில் -
கடவுள் பேராலேயே
இன்று மனிதம் அழிகிறது.
மனிதனிலிருந்து விலங்குவரை
அழிக்கப்படுகின்றன.
அழிவைத் திருத்தி
மனிதன் உயிர்களை காக்க! மனிதம் காப்போம்!!
இயற்கையை -
வெறியின்றி வணங்குவோம்!
வெறியில்லா மனிதத்தில்
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்!!
-வித்யாசாகர்.
|
|