........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:94 

ஏட்டிக்குப் போட்டி

சொற்களிலே சர்க்கரையைச்
சேர்த்துப் பேச மாட்டாய்...
தேகத்தில் மட்டும்
தேவைக்கு மேலே
தேக்கி வைத்துச்
சோகக் கடலில்
மூழ்கிடுவாய்...

உயர்ந்த சிந்தனைகளிலே
உயர் அழுத்தம்
உட்காரும்படி
உதவிட மாட்டாய்...
ஓடும் இரத்தத்தில் மட்டும்
உயர் அழுத்தம்
கூடும்படி-மனம்
வாடும்படி-பல
காரியங்கள் ஆற்றிடுவாய்...

நல்லவற்றைச் செய்வதிலே
முந்தி வந்து
நிற்க மாட்டாய்-உன்
வயிறு மட்டும்-உன்னையும்
முந்தி வந்து
முகம் காட்டி நிற்கும்படி
வஞ்சனை இன்றி
வாரிப் போட்டு
வயிற்றை நிரப்பிடுவாய்...

உடலுக்குள்ளே திரண்டிருக்கும்
ஊறு செய்யும் கொழுப்பதனைக்
கரைப்பதற்கும் குறைப்பதற்கும்
மருத்துவமனைகளுக்கு-நீ
நடையாய் நடந்து-பல
படிகளைத் தேய்த்திடுவாய்...
விரட்டி அடித்து
வீழ்த்த வேண்டிய-அந்த
வாய்க்கொழுப்பை மட்டும்
வரவேற்று உபசரித்து
வாழ்க்கை கொடுத்து
விழாக்களும் எடுத்திடுவாய்...

மூச்சினை உள்ளே இழுத்து
வாங்கி நிறுத்தி-வெளியே
மெல்ல விடுகின்ற-அந்த
நல்ல பயிற்சிதனை
மேற்கொள்ள மாட்டாய்-
வெட்டிப் பேச்சினை மட்டும்
வேகமாக உள்ளே இழுத்து
வாங்கி நிரப்பி வைத்து-அதை
வெளியில் எடுத்துப்
பிறர்மேல் ஏவிவிட்டுப்
பெருந்துயரைத் தந்திடுவாய்...

-கவிஞர் வெ. அரங்கராசன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,

கோவில்பட்டி.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.