கவிதை:97
மலராத மொட்டின் பாடாத சங்கீதம்?

இருளாடையைக் களைந்து விட்டு
இனிதாக பகல் தனது பயணத்தை
இதோ இப்போதே தொடங்கி விட்டது
வாழ்க்கை என்னும் தாராசில்
வாடிக்கையான தனது
வேடிக்கைகளைக் காட்டி நிற்கிறது
வேண்டாத இந்தக் காலம்
இருக்கும் பணத்தை விரைவாக
இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன்
இதயத் துடிப்புடன் ஓடுகிறான்
இரக்கம் விற்று வசதி பெருக்கிய
இதயம் இல்லாத பெரிய மனிதன்
காளைப்பருவத்து கவர்ச்சியுடன்
கன்னியரின் வனப்பை அள்ளிப்பருக
கட்டவிழ்ந்து ஓடும் வாலிபக் கூட்டம்
கொடுக்கும் சீதனத்தைக் கொஞ்சம்
குறைத்தே கொடுக்கவென
குதித்துப் பட்டம் வாங்க ஓடும்
குமரிப் பென்கள் ஒருபுறம்
காசைக் கரைக்க வழியில்லாமல்
கலத்தை விரயமாக்க அவசரமாய்
கல்லூரி வந்து சேரும் மாணவர் ஒரு புறம்
கைவண்டி இழுத்துக் களைத்துக்
காய்த்துப் போன தன் கைகளை
கைலியில் துடைத்தபடி
கால்வயிற்றுக் கஞ்சிக்கு வண்டியோடு
காலமெல்லாம் போராட்டம் நடத்தும் கூட்டம்
பள்ளிக்கு போக வழியில்லாமல்
பாவம் அதன் வாயிலில் ஆவலுடன் காத்திருந்து
பசியைப் புசித்து விட்டு
பட்டினியை நாளாந்த வேதமாகக் கொண்டு
பரிதவிக்கும் பாலகர்கள் கூட்டம்
பெண்ணாகப் பிறக்கும் போதே தம்மோடு
பணம் கொஞ்சம் வைத்திருந்தால்
கனவில் காணும் அந்த வர்ண வாழ்க்கையை
கையில் பிடித்து விடலாம் என ஏங்கும்
கல்யாணமாகாத கன்னியரும் அவர்களைக்
கண்ணீரோடு நோக்கும் பெற்றோரும்
மேடையிலே முழங்கும் அரசியல்வாதி
மேதாவி நானுமக்கு தவறாமல்
மேலான வாழ்க்கையன்று தந்திடுவேன்
முழங்கிடும் வெற்றுவேட்டு வாக்குறுதிகள்
அனைத்தும் பார்த்துக் கொண்டே
அமைதியாக அந்தத் தோட்டத்தில்
மலாராத மொட்டொன்று நிலத்தில் இருந்து
மண்ணோடு மருகியிருந்த
மூங்கில் குச்சியை பார்த்து
"நான் மலராததும், நீ பாடாததும் "
நான் மலர்வதும், நீ இசைப்பதும்
இதயமற்ற வீணர்களுக்காக என்றால்
இப்படியே எப்போதும்......
இருந்து விட வரம் வேண்டும் " என்றது
பகலை மீண்டும் இருள் அணைக்க
பொழுது விடியும் வேளை.....
அது யாருக்காக ?
-சக்தி சக்திதாசன், லண்டன்.
|