குறுந்தகவல்-105
முட்டையிட்டுப் பாலூட்டும் உயிரினம்

சிறிய வவ்வால்
ஆஸ்திரேலியன் ஈஸ்ட் கோஸ்ட் பிரீடெய்ல் மைக்ரோபேட் எனப்படும் வவ்வால் இனம்தான்
உலகின் மிகச் சிறிய வவ்வால் இனம். மூன்று செண்டி மீட்டர் நீளமும், எட்டு கிராம்
எடையும் கொண்ட இந்த வவ்வால் இனத்தின் பிடித்த உணவு புழுக்களே. இவை பறக்கும் போது
மோத் என்கிற வண்ணத்துப் பூச்சி போலிருப்பதால் இதை மோத் என்றும் சிலர்
அழைக்கின்றனர்.
பெரிய முட்டையிடும் பறவை
பறவை இனங்களில் மிகப்பெரிய முட்டையிடுவது நெருப்புக் கோழிதான். இதன் முட்டையின்
அளவு 7 x 6 அங்குலம். 1400 கிராம் வரை எடையிருக்கும். கிவி பறவை நெருப்புக்
கோழிக்கு அடுத்தபடியாக பெரிய முட்டையிடக் கூடியது. மிகச் சிறிய முட்டையிடும்
பறவை ஹம்மிங் பேர்ட்.
ராஜநாகம்
பாம்புகளில் மிகவும் பயங்கரமானது ராஜநாகம்தான். இது இருக்கும் இடத்தில் வேறு
குட்டிப் பாம்புகள் எதுவும் வசிக்க முடியாது. அவற்றைப் பிடித்து விழுங்கிவிடும்.
பெண் ராஜநாகம் இலைகளைப் பரப்பி அதன் மீது முட்டையிட்டு அடை காக்கும். அப்படி
அடைகாக்கும் சூழ்நிலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயிரினத்தை
அப்பகுதிக்குள் நுழைய விடாது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை
பொறிக்கும். அவை பிறக்கும் போதே விசத்தன்மையுடன்தான் பிறக்கின்றன. நன்றாக
வளர்ந்த ராஜநாகத்தின் விசம் எடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவு குதிரையின்
உடலுக்குள் செலுத்தப்படுவதன் மூலம் குதிரைகள் ஆண்டிபயாடீஸ் எனும் எதிர்ப்பு
சக்தியைத் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும். பின்னர் அந்த குதிரைகளிடமிருந்து
சிறிதளவு பிளாஸ்மா எடுத்து விசமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.
பாண்டா கரடி
சீனாவின் தென்கிழக்கு மாகாணமான சிசூயானில் உள்ள மூங்கில் காடுகளில்தான் பாண்டா
இனக் கரடிகள் வாழ்ந்து வந்தன. பாண்டா இனக் கரடிகளின் முக்கிய உணவு மூங்கில்தான்.
இங்கு மூங்கில் காடுகள் அழிந்து வருவதால் உணவில்லாமல் பாண்டா இனக்கரடிகளும்
அழிந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவற்றை பாதுகாக்க சீனா அதற்கென ஒரு ஆய்வு
மையம் அமைத்து அங்கு அவைகளை வளர்த்து வருகின்றன.
முட்டையிட்டு பாலூட்டும் உயிரினம்
முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துப் பின் பாலூட்டும் இரண்டு அபூர்வ உயிரினங்களில்
ஒன்று பிளாடிபஸ். இது வாத்து போன்ற மூக்கும், பீவர் பிராணியின் உடல் வால்
அமைப்பின் கலவையான பிளாடிபஸ் 12 முதல் 18 அடி நீளம் வரி வலரும். நீர் நிறைந்த
பகுதிகளில் வசிக்கும் பிளாடிபஸ்ஸின் விருப்பமான உணவு பூச்சிகளும் சிறு
மீன்களும்தான்.
கோலா கரடி
கோலா கரடிகள் யூகலிப்டஸ் மர இலைகளின் நீர்ச்சத்தை எடுத்துக் கொள்வதால்
அவற்றிற்குத் தாகம் எடுப்பதில்லை. அதனால் அவை நீரும் அருந்துவதில்லை. கங்காரு
தன் குட்டிகளைச் சுமப்பது போல் கோலா கரடியும் வயிற்றுப் பையுள்ள ஒரு பிராணி.
பிறந்த ஏழு மாதத்திற்குக் கோலா கரடிகள் தன் குட்டிகளை வயிற்றிலேயே சுமக்கின்றன.
காட் மீன்
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் காட் எனும் மீன் இனம் உள்ளது. இந்த மீன் இனம்
ஒரு தடவைக்கு சுமார் அறுபது லட்சம் முட்டைகள் வரை இடுமென்றாலும் முட்டை பொறிந்து
மீன் குஞ்சாகி உயிர் வாழ்வது நான்கு அல்லது ஐந்துதான். மீன் இடும் அத்தனை
முட்டைகளும் மீன்களானால் அட்லாண்டிக் சமுத்திரமே மீன் மயமாகி கடல் நீர்
நிலத்தில் புகுந்துவிடும்.
கடற்குதிரை
கடலில் வாழும் உயிரினங்களில் கடற்குதிரைகள் மட்டுமே நிற்கும் போது தன் வாலையே
பற்றிக் கொண்டு நிற்கின்றன. ஆண் கடற்குதிரைகளுக்குத் தனியாக அதன் வயிற்றில் ஒரு
பை உண்டு. அதன் மூலம் பெண் கடற்குதிரைகள் இடும் முட்டையை இந்த ஆண் கடற்குதிரைகள்
அடைகாக்கின்றன. கடற்குதிரைகள் நீண்ட நாக்கை ஒரு ஸ்ட்ரா போல் பயன்படுத்தி கடல்
நீரை உறிஞ்சுகின்றன. இப்படி உறிஞ்சும் கடல்நீரிலுள்ள மெல்லிய நுண்செடிகள்
உயிரினங்களை மட்டுமே உட்கொண்டு விட்டு கடல்நீரைத் துப்பி விடுகின்றன.
வெட்டுக்கிளி
பாம்புகள் தங்கள் மேல்தோலை உரித்து புதுத் தோலை உருவாக்கிக் கொள்வது போல்
வெட்டுக்கிளிகள் தங்கள் உடல் கூட்டை அடிக்கடி உடைத்துக் கொள்ளும். அவைகள் தங்கள்
உடல் கூட்டை உடைத்துக் கொண்டால்தான் அவைகளால் வளர முடியும். அவைகளின் பழைய
கூடுகள் உடைந்தவுடன் புதிய கூடுகள் வளர ஆரம்பித்து விடும். பழைய கூட்டினால்
எந்தப் பயனுமில்லாததால் அவற்றை உதறி விடும்.
-தொகுப்பு:
கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய குறுந்தகவல் காண

|