........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-120

தாடிக்காகச் சிறைக்குச் சென்றவர்

தமிழ்நாட்டில் தாடி வைத்திருப்பவர்கள் காதலில் தோல்வியுற்றவர்கள் என்பதான கருத்தே பெரும்பான்மையாக இருக்கிறது. இதில் சற்று ஆன்மிக ஈடுபாடுடையவர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாகக் குறிப்பிட்ட காலம் தலை முடி, தாடி, மீசை என வளர்த்து கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து தாடி, மீசை அனைத்தையும் நீக்கி விட்டு வருவதுண்டு. சில இளைஞர்கள் தாடியை குறிப்பிட்ட அளவு மட்டும் வளர்த்து அதற்கு மேல் வளர்வதை சரிசெய்து கொள்வதும் உண்டு. இப்படி தமிழ்நாட்டில் தாடிக்குப் பின்னால் பல தகவல்கள் உண்டு.

வித்தியாசமான சில தாடிக்காரர்கள்

  • பழங்காலத்தில் இந்தியாவில் தாடி வைத்திருப்பது என்பது மரியாதை மற்றும் அறிவின் சின்னமாகக் கருதப்பட்டது. கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானப் பகுதியில் உயர்சாதி வகுப்பினர்கள் மட்டுமே தாடி, மீசை வைத்துக் கொள்ள முடியும். ஒடுக்கப்பட்ட 18 சாதி வகுப்பினர் தாடி, மீசை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி அவர்கள் வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கென தனியாக வரி செலுத்த வேண்டும்.

  • உலகின் சில பகுதிகளில் தாடி வைத்துக் கொள்வது வேண்டப்படாத ஒன்றாக இருந்தது. மாமன்னர் அலெக்சாண்டர் தனது வீரர்கள் அனைவரும் தாடியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். வீரர்களின் தாடியை எதிரி வீரர்கள் சுலபமாகப் பிடித்து இழுத்துக் கொன்று விடுவார்கள் என்று கருதினார்.

  • அமெரிக்காவில் 1700 ஆம் ஆண்டுகளில் தாடி ஒரு மரியாதைக்குரிய விசயமாகக் கருதப்படவில்லை. தாடி வைத்திருப்பவர்கள் ரவுடிகளாக இருப்பர் என்கிற கருத்து அப்போது நிலவியது. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பிரமுகர்களில் ஒருவர் கூட தாடி வைத்திருக்கவில்லை.

  • 1830 ஆண்டில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த ஜோசப் பால்மர் என்பவர் இந்த நிலை பற்றிக் கவலைப்படாமல் மிக அடர்த்தியாகத் தாடி வளர்த்திருந்தார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரைப் பார்த்துச் சிரித்தனர். சிறுவர்கள் அவர் மீது கற்களைக் கூட வீசினார்களாம். அவருடைய பக்கத்து வீட்டினர் ஒரு நாள் அவருடைய தாடியை எடுக்க முயற்சித்தனர். அதற்கு விடாமல் அவர்களை அவர் விரட்டியடித்தார். ஆனால் காவல்துறை அவரைக் கைது செய்தது. சிறையில் அடைத்தது. நீதிமன்றமும் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. தாடிக்காக சிறைக்குச் சென்றவர் இவர் ஒருவர்தான்.

  • ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள இசேசகி நகர நிர்வாகம், ஊழியர்கள் தாடி வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. ஜப்பானில் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. ‘கூல் பிஸ்’ என்ற வருடாந்திர அலுவலக ஆடை விதிகளின் ஒரு பகுதியாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆண் ஊழியர்கள் கோடைகாலத்தில் மேலாடை இல்லாமல் பணிபுரியலாம். இதன்மூலம் ஏசி பயன்பாடு குறைந்து பூமி வெப்பமயமாவது குறையும் என ஜப்பான் அரசு கருதுகிறது. “தாடி வைத்துள்ள ஊழியர்களை பார்க்க அறுவறுப்பாக உள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழியர்கள் முகத்தில் மீசை, தாடி வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளோம். இது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரமாக இருந்தாலும் அரசு ஊழியர்கள் மிடுக்காக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என கன்மா மாகாண உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொகுப்பு: தேனி. பொன். கணேஷ்.

  தேனி. பொன். கணேஷ் அவர்களின் மற்ற படைப்புகள்

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு