........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-11

            தமிழ் மொழி காப்போம்...

                                                                                                - தூத்துக்குடி பாலு.

உலகில் உள்ள மூத்த மொழிகளில் முதன்மையான மொழி நம் தமிழ் மொழி . செம்மொழியான தமிழ் மொழியினை பைந்தமிழ்ப் பாவலன் பாரதியார்,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல
இனிதாவதெங்கும் காணோம் "

-என்று பல்வேறு மொழிகளைப் படித்த பின்புதான் பாடினார்.

இன்று ஆங்கிலம் கலந்து பேசுகிறோம். ஏற்கனவே ஆரியம் கலந்து மணிப்பிரவாள நடை வந்தது. இப்போது அத்துடன் ஆங்கிலமும் கலந்து புதிய நடை புறப்பட்டிருக்கிறது. இதனால் வெல்லத் தமிழ் மெல்ல இனிச் சாகுமோ என்பது சான்றோர்களின் கவலை.

மும்மொழிப் போதனை என்ற பெயரில் இம்மொழிக்குச் சோதனை வந்த போது இந்தி மொழியால் இன்னல் வந்து விடுமோ என்று அஞ்சி மொழிப் போராட்டம் நடத்தினோம். இந்தியால் வரும் இன்னல் தவிர்க்க "ஆங்கிலம்" பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கருதினோம்.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டிய கதையாக, இன்று இந்தியை விரட்டி விட்டு அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டது. ஏற்கனவே ஆரியம் கலந்ததால் இன்று எது ஆரியம்? எது தமிழ்? என்று தமிழறிஞர்கள் ஒரு பக்கம் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆங்கிலமும் கலந்து எதிர் காலத்தில் எது தமிழ்? எது ஆங்கிலம்? என்று நமக்குப் பின்னால் வருபவர்கள் போராட வேண்டியிருக்கும்.

இப்போதே சில ஆங்கிலச் சொற்கள் தமிழோடு கலந்து, தமிழ் போலவே தெரிந்து , தமிழாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, "வில்லன்" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இது அப்பட்டமான ஆங்கிலச் சொல். "ஹீரோ" என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு எதிர்மறைச் சொல். ஹீரோவை தமிழில் "நாயகன்" என்று அழைக்கிறோம். அப்படியானால் வில்லனுக்குத் தமிழ்ச்சொல் என்ன? பன்மொழிப்புலவர் அப்பாத்துரை "கதாபாதகன்" என்று குறிப்பிடுகிறார். இதுவும் சரியன்று. கதையில் வரும் நாயகனுக்கு எதிராக எல்லாக் கேடுகளையும் விளைவிக்கும் கெட்டவனாக இருப்பதால் "கேடன்" என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

இதேபோல் வில்லனுக்குப் பெண்பால் "வில்லி" என்பதும் தவறானதே. கேடனுக்கு பெண்பாலாக "கேடி" என்ற புதிய சொல் உருவாக்குவோம். புதிய சூழலுக்கேற்றவாறு "புதிய இலக்கணம்" படைக்கலாம். "கிரைண்டர்" என்ற சொல்லுக்கு "அரைப்பான்" என்று அப்படியே மொழி பெயர்க்கிறார்கள். இதற்கு உரல் என்று உரித்தான சொல் இருப்பதால் மின்சாரத்தால் இயங்குவதை அடிப்படையாகக் கொண்டு "மின் உரல்" என்று அழைத்தால் என்ன தவறு?

"பைலட்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "விமானி" என்று கூறிக் கொண்டிருக்கிறோம். கம்ப இராமாயணத்தில் "வலவன் ஏவா வானூர்தி" என்று வருகிறதே. வானூர்தியை ஏற்றுக் கொண்டோம். வலவனை ஏற்பதில் மட்டும் ஏன் தயக்கம்?

"கார்" என்பதற்கு அகராதியில் "இரதம்" அல்லது "தேர்" என்று குறிப்பிட்டுள்ளது. முன்பு இதை "பிளசர்கள்" என்று அழைத்தார்கள். அப்படியே நேரடியாக மொழி பெயர்த்து "மகிழுந்து" என்று அழைக்கின்றோம். தவறில்லை. "இருசக்கர வாகனம்" என்று தமிழில் கூறிக் கொண்டிருக்கிறோம். "வாகனம்" என்பது வடமொழியாக இருப்பதால் "டுவீலர்" என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு "ஈருருளி" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்குப் பின்னரே தமிழில் மாற்றமும் தமிழுக்கு ஏற்றமும் வந்தது. அதுவரை தமிழ் கற்ற புலவர்களையும், தமிழறிஞர்களையும் "பண்டிதர்கள்" என்று வேற்று மொழியில்தானே அழைத்தோம். இன்றும் கூட இந்த பண்டிதர்கள் புத்தம்புதுச் சொற்களை உருவாக்கினால் இலக்கணத்தில் இது இல்லை என்று கூறிப் புறக்கணிக்கிறார்கள்.

இதுவும் தவறு. மொழி தோன்றிய பின்னரே இலக்கணம் தோன்றியது. எந்த மொழியும் இந்த விதிக்கு விதி விலக்கு அல்ல. மொழி தோன்றிய பின்பு எல்லோரும் எளிதாகத் தெரிந்து கொள்ளவே அதற்கு இலக்கணத்தை உருவாக்குகிறோம். இதற்கு முன்னுதாரணம் வேண்டுமா? மலையாள மொழியே இதற்கு அடையாளம். மலையாளம் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டுகளே ஆகிறது. எண்ணூறு ஆண்டுகளுக்குள்தான் மலையாள இலக்கண,இலக்கியங்கள் இருக்கிறது.

சேரநாட்டு செந்தமிழாக இருந்த நம் தமிழ் இன்று மலையாளமாக மருவியும், மாறியும் உள்ளது. இன்று அதற்கென தனி இலக்கணம், தனி எழுத்துக்கள் உருவாகியுள்ளது. பிற மொழிச் சொற்கள் கலப்பதால் "மொழி அழியும்" அல்லது "திரிபு அடையும்". அதன் விளைவாக புதிய மொழிகள் தோன்றும். மலையாளம் இதற்கு ஒரு அடையாளம். எனவே ஒரு மொழியைக் காப்பது நமது கடமை என்பதை உணர்ந்து நம் தமிழ் மொழியாம் செம்மொழியோடு எம்மொழியும் கலவாது காத்து நம் தமிழ் மொழி காக்கப் புறப்படுவோம்.

_______________

தூத்துக்குடி பாலு அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.