........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-17.

தமிழில் பேசக் கூச்சப்படும் தமிழர்கள்...?

                                                                                                  -ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா.

ஆற்றலுடைய மொழி ஆங்கிலம்; இனிமையான மொழி இத்தாலி; நயமான மொழி பிரெஞ்சு; சாந்தமான மொழி பாரசீகம்; மென்மையான மொழி கன்னடம்; ஓசை மிக்க மொழி தெலுங்கு; கவர்ச்சியான மொழி மலையாளம்; இத்தனை இனிமையான பண்புகளையும் ஒரு சேரக்கொண்ட மொழி தமிழ் மொழி! ம்...ம்...இப்போது தமிழகத்திலேயே தமிழ்.... தமிங்கிலம் என்ற திமிங்கிலமாக வலம் வருவது வேதனையே என்றாலும் இந்தக் கதி தமிழ் மொழிக்கு மட்டுமில்லை; உலகில் ஆங்கிலத்தை இணைத்து தங்கள் மொழிகளோடு உரையாடி உறவாடுவது உலக நாடுகளில் அந்தந்த மொழிகளுக்கு ஏற்பட்ட துயரங்கள்! நம் இன்பத் தமிழுக்கும் வந்து விட்டது, இல்லையில்லை வாய்த்து விட்டது!

மலேசிய வானொலி, தொலைக்காட்சியில் பாட்டுப் போடும் அறிவிப்பாளர்களை மொழிக் கலப்படம் செய்யும் வேலையை நிறுத்தும்படி மலேசிய அரசு கட்டளையிட்டுள்ளது. அந்நாட்டுத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றும் அறிவிப்பாளர்கள் பல மொழிகளையும் கலந்து பேசுவதை நாகரிகமாக்கி இளம் சமுதாயத்தினர்க்குப் பிழையான உதாரணமாக இருக்கிறார்களென்று கூறி அரசு அடுத்த அறுபது நாட்களுக்குள் முறையான, கலப்படமில்லாத மொழியைப் அவர்கள் நிகழ்ச்சிகளிற் பயன்படுத்த வேண்டும் என்று அவகாசம் கொடுத்துள்ளது. இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் போட்டால்தான் தமிழ், தமிழ்நாட்டிலும் வாழும்....உலக நாடுகளிலும் வாழும்! கடைகள், வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பெயர்ப் பலகை தமிழில் எழுதாவிட்டால் போராட்டம் என்றும், சினிமாவில் தமிழ்பெயர் வைக்கக் கோரி நடிகர்களோடு முட்டி மோதுபவர்கள் இதற்காகப் போராடினால் என்ன? அமெரிக்காவில் தமிழ் எந்தவிதத்தில் இதனால் வளரும்? என்று யாரோ கேட்பது என் காதுகளில் விழுகிறது. வளருதோ இல்லையோ பாழாகமாலாவது இருக்கும் இல்லையா? அதுக்காகத்தான்! (தமிழக சின்னத் திரைகள் எல்லாம்தான் இப்போது அமெரிக்காவில் அரைகுறையாய் தமிழ் பேசும் இல்லங்களில் எல்லாம் தவறாமல் கதிரொளி வீசுகிறதே.)

இந்தியப் பிரதமர் தமிழகத்துக்கு வருகை தரும்போது பொதுக் கூட்டங்களிலோ, விழாக்களிலோ கலந்து கொண்டு பேசும்போது உரையின் துவக்கத்தில் வணக்கம் என்றோ முடிவில் நன்றி என்றோ தமிழில் சொல்லும் போது பார்வையாளர்களின் முகத்தில் புன்முறுவல் பூக்காமலிருக்காது! கைகள் கரவொலி எழுப்பாமலிருக்காது. காரணம், வேற்று மொழிக்காரர் நம் மொழியில் இரண்டு வார்த்தை சொல்லுவதுதான் காரணம். அது போலத்தான் அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் தமிழர்களிடம் பேசுவார்கள்! நம்ம ஊரில் பிரதமர் மொழி தெரியாமல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்; இவர்கள் மொழி தெரிந்தும் பேச விரும்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.

தாய்த் தமிழகத்தில் இனி குப்பை கொட்டி நம் வாழ்க்கைத் தரம் உயராது என்ற முடிவுடன் பல்வேறு சூழலில் அமெரிக்கக் கூட்டுநாடுகளில் குடியேறிகளாய் இருக்கும் தமிழர்களிடம் தமிழ் எப்படித் தவழ்கிறது! புத்தகமே எழுதவேண்டிய விடயத்தைக் கட்டுரையாக வாசகர்களுக்குத் தருவது சாத்தியமா? குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது என்பது இதுதானோ! இதோ எனது குதிரை இலாயத்தை விட்டுக் கிளம்பி விட்டது, உங்களையும் உடன் அழைத்துக் கொண்டு....!

இன்றுவரை எனக்குப் புரியாத புதிர் இது. ஒரு தெலுங்கரும் இன்னொரு தெலுங்கரும் சந்தித்துக் கொண்டால் தெலுங்கிலேயே பேசுகிறார்கள்; ஒரு மலையாளியும் இன்னொரு மலையாளியும் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள்; இதுமட்டுமில்லை, சீனரும் சீனரும் சந்தித்துக் கொண்டால் சீனமொழியிலும், சப்பானியர்கள் அவர்கள் மொழியிலும் பேசிக் கொள்ளும் போது தமிழர்கள் மட்டும் பொது இடங்களில் ஆங்கிலத்திலேயே பேச முனைவது ஏன்?

அமெரிக்காவிற்கு நான் வந்த புதிதில் தமிழ் முகங்கள் தட்டுப்படாதா என்று கடைகளில், வெளியிடங்- களில் போகும்போது கண்கள் தானாகத் தேடத் துவங்கும்; தமிழர்கள் எங்காவது தட்டுப்பட்டால் ஆசையாகப் பேச முற்படும் போது இரண்டொரு வார்த்தைகளை உதிர்த்து விட்டு வேண்டாதவனைச் சந்தித்து விட்டது போன்று ஒதுங்கி விடுவார்கள். முன்பின் அறிமுகம் இல்லையென்றால் கூட எதிரும் புதிருமாகச் சந்திக்கும்போது அமெரிக்கர்கள், ஹாய், ஹெள ஆர் யூ? நைஸ் வெதர்...என்று எதையாவது சொல்வது வழக்கம். ஆனால், நம்மவர்களோ, நம்மை தூரத்திலேயே பார்க்க நேர்ந்து விட்டால் சட்டென்று வேறுபக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள்!

முதன் முதல் ஒரு தமிழ் சங்கத்தைத் தேடிப் பிடித்து என் மனைவி, மகள் சகிதமாகப் போனேன். உள்ளே நுழைந்ததும் முன் அறையில் நின்று  கொண்டிருந்த ஒருவர், "ஹாய்..லீவ் யுவர் கோட்ஸ்...ஹியர்..." என்றார். துவக்கமே இப்படியா என்று உள்ளே போய் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்தோம். எனக்கு அருகில் இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். வணக்கங்க..... என்றேன். அவரோ ஹலோ என்றதோடு தலையை மேலும் கீழும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டு அந்தப் பக்கம் திரும்பியவர்தான். நிகழ்ச்சி முடியும் வரை என் பக்கம் திரும்பவே இல்லை. அறிவிப்பாளர் நிகழ்ச்சி நிரலை ஆங்கிலத்தில் படித்தார். அதன் பின்னும் அவரது உரை ஆங்கிலத்திலேயே இருந்தது. நெக்ஸ்ட், டான்ஸ்.... நெக்ஸ்ட் சினி சாங் என்றும் உச்சகட்டமாக அவரது வருணணை எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தது. வேற்று மொழிக்காரர்களோ அமெரிக்கர்களோ இல்லாத விழாவில் எதற்கு ஆங்கிலம்? மனசு வெறுத்துப் போய் வெளியேறினேன் அன்று!

ஒரு கட்டத்தில் நம்மவர்கள் சிலர் அலோ...என்று சொல்லி முடிக்கும் முன்னே அவசரமாக அலோ சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிய அனுபவமும் உண்டு! ஒரு வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு இளம் தம்பதியர் வந்து அலோ, நீங்கள் இந்தியாவா? என்றார்கள். ஆமாம். என்றேன். இந்த ஏரியாவில் இந்தியன் மளிகைக் கடை எங்கிருக்கிறது தெரியுமா? என்று ஆரம்பித்தார். சொன்னேன். மெதுவா, நீங்கள் மெட்ராசா? என்றார். நான் பெங்களூர்தான். எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பத்தரை மணி இருக்கும். அப்போதுதான் அப்பாடா என்று படுக்கையில் விழுந்த நேரம். தொலைபேசி அலற...எதிர் முனையில்...சார்.. நான்.. அன்னைக்கு உங்களைக் கடையில் பார்த்தேனே என்று ஆரம்பித்து அரைமணி நேரம் சம்பந்தமேயில்லாமல் பேசினார். இந்த வாரம் சனி ஞாயிறில் ஒரு கெட்-டு-கெதர் வச்சிருக்கோம் வாங்களேன், என்றார். பரவாயில்லையே என்று, சரி சொன்னேன். அங்கு போன பிறகுதான் தெரிந்தது; அது ஒரு "ஆம்வே" வணிகம் பற்றியது என்று அறிய, அவசர அலுவல் என்று பாதியில் எழுந்து வந்தோம், பின்னர் தொலைபேசியில் அழைத்து ஒரே அர்ச்சனை; நானும் மனைவியும் பாதியில் வந்து விட்டோம் என்று. இதுபோல சில சம்பவங்கள் அடுத்தடுத்து அறிமுகம் அப்புறம் தொலைபேசி அழைப்பு, பிசினஸ் மீட்டிங் என்று அழைக்க நேரிட இந்திய முகங்களைக் கண்டாலே கண்டும் காணாமல் நழுவி ஓட வைத்தது.

அமெரிக்காவில் சில இடங்களில் உள்ள தமிழ் சங்கங்கள் தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். இருப்பவர்களில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட கலைஞர்களை வைத்து நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்று அமர்க்களமாய் நடத்துபவர்களும் உண்டு. நியூஜெர்சி, வாசிங்டன் டி.சி., அட்லாண்ட்டா, சிகாகோ, போன்ற தமிழ் சங்கங்கள் இதில் அடிக்கடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். வாசிங்டன் தமிழ் சங்கம் வயது அடிப்படையில் மூன்று நான்கு பிரிவாகப் பிரித்து கோடை காலத் தமிழ் வகுப்புக்கள் என்று தங்கும் வசதியோடு குறைந்த கட்டணத்தில் சில வாரங்கள் நடத்தி சான்றுகள் வழங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது போன்று குறைந்த பட்சம் பிற தமிழ் சங்கங்கள் அல்லது ஆர்வலர்கள் ஏற்படுத்தி நடத்தினால் தமிழ் எதிர்கால வாரிசுகளிடம் வளரும், வாழும்!

கலிபோர்னியாவில் வளைகுடா தமிழ் மன்றத்தில் பாஞ்சாலி சபதத்தை அப்படியே தூய தமிழ் சொற்களிலேயே நடத்தி வெற்றி கண்டார். என்ன குறை நம்மிடம்? ஏன் எல்லாவற்றுக்கும் தமிழகத்திலிருந்தே நாடகம் போட வருவார்களா? என்று எதிர்பார்க்கவேண்டும். நண்பர்களிடம் தம் ஆதங்கத்தைச் சொன்னார். நண்பர்கள் கைகொடுத்தனர். செந்தமிழில் பாஞ்சாலிசபதத்தை நடத்த சபதம் எடுத்துக்கொண்டார், வெற்றிகண்டார். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் தலைவர் மணி. மணிவண்ணன். இப்படி சில விதி விலக்கான தமிழ் சங்கங்களும் இருக்கத்தான் செய்கிறது.

 தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாடக நடிகர்கள், திரைப்படக் குழுவினர், பட்டிமன்றப் புகழ் பேச்சாளர்கள் போன்றோர் வந்து வருடம் ஒருமுறை தரிசனம் செய்து விட்டுப் போவது வாடிக்கை. கலிபோர்னியாவிலிருந்து நியூயார்க்கை நோக்கியோ அல்லது நியூயார்க்கிலிருந்து கலி·போர்னியாவை நோக்கியோ ஒவ்வொரு மாநில தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்கிற இடங்களில் இந்தக் குழுவினர் நிகழ்ச்சிகள் தந்து செல்வது வழக்கம். அமெரிக்காவில் 50 மாநிலங்கள்! ஏறக்குறைய அனைத்திலும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஆங்காங்கே தமிழ் சங்கங்கள்; பெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புடன் பதிவு செய்துகொண்ட சங்கங்கள் மட்டும் 25. பதிவுறாமல் பல சங்கங்கள் ஒரே மாநிலத்தில் இரண்டு, மூன்று, நான்கு என்று இயங்கிக் கொண்டிருக்கிறது. (சிகாகோவில் மட்டும் நான்கு தமிழ் சங்கங்கள்) கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒன்றிலிருந்து பிளவுபட்டு இன்னொன்று என்று தமிழ் சங்கங்கள் ஒரு பக்கம் பெருகினாலும் தமிழ் வளர இவை பாடுபடுகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான்.

இத்தாலியர் தங்களுக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் கீழ் இயங்குகிறார்கள். ஐரிஷ்.....இப்படி எந்த நாட்டினரானாலும் ஏன், தெலுங்கர், மலையாளி, கன்னடர்..என்று ஒரே ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள். தமிழர்கள் மட்டும் தனித்தனியாக பிரிந்து சங்கங்களைத் தொடங்கி நடத்துகிறார்கள். தமிழனை யாராலும் அழிக்க முடியாது; தமிழனைத் தமிழனே அழித்துக் கொண்டாலே தவிர...என்ற நம் பெரியவர்கள் அனுபவித்துச் சொல்லிச் சென்ற வரிகள் எனக்குள் எழுகிறது!

பெரும்பாலான தமிழ் சங்கங்கள் பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப்பிறப்பு போன்றவற்றை அந்த வார இறுதியில் வரும் சனி, ஞாயிறுகளில் அவரவர் வீடுகளில் தயாராகும் சிறப்பு உணவு வகைகளை எடுத்து வந்து சினிமாப் பாடல்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை ஆட வைத்து ரசித்து விட்டு, ஆங்கிலத் திலேயே அதற்கான வர்ணணையும் கொடுத்து விட்டு பரிசுகளை வழங்கி ஆடற்கலைஞர்களை கெளரவப்படுத்தி விட்டு விதவிதமான கலவைச் சாதங்களை ஒருகை பார்த்துவிட்டுக் கூடிக்கலையும் தமிழ் சங்கங்களை மிக அதிகமாகப் பார்க்கலாம். இதுதவிர வருடத்தில் ஓரிரு சிற்றுலாக்கள் தப்பித் தவறி தமிழகத்திலிருந்து குச்சுப்பிடி நடன நிகழ்ச்சியோ பரத நாட்டிய நிகழ்ச்சியோ பக்கத்து நகரத்து தமிழ் சங்கத்தில் நடந்தால் இவர்களும் வரவழைத்து அதுவும் தமிழ் சங்க நிகழ்ச்சியாக நடைபெறும். தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவருக்கு தாம் தமிழில் பேசுவதா? ஆங்கிலத்தில் பேசுவதா? என்ற குழப்பம் நிகழ்ச்சி துவங்கும்போது ஏற்படும்; ஆனால் தலைவர், வரவேற்புரை நிகழ்த்துபவர்கள் எல்லாம் மருந்துக்குக்கூட தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலத்தில் நளினமாகப் பேசியதிலிருந்தே தாமும் ஆங்கிலத்தில் பேச முடிவு செய்து வணக்கம் என்றோ நன்றி என்றோ இரண்டு வார்த்தைகளை தமிழில் அட்டகாசமாய்ச் சொல்லி அமர்ந்து விடுவார்கள்.

தன்னார்வலர்கள் தமிழாசிரியர்களாக (ஆசிரியர்கள் அல்ல) ஆங்காங்கே உள்ள தமிழ் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு வார விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ் கற்பித்து வருகின்றார்கள். (நானும் கூட அப்படித்தான் வலியக் கூப்பிட்டு என் வீட்டில் வைத்தே சொல்லிக் குடுத்தேன்.) துவக்கத்தில் சிறுவர் சிறுமியர் காட்டும் அக்கறை போகப்போக காட்டுவதில்லை. இதற்குக் காரணம், பெற்றோர்களே! வட அமெரிக்கத் தமிழ் சங்கத்தின் தகவல் தொடர்பு இயக்குனரான வி.ஜே.பாபு கடந்த 3 வருடங்களாக தாய்த் தமிழ் பள்ளிகளைத் துவங்கி சில மாநிலங்களில் நடத்திவருவது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் தாய்த்தமிழ் பள்ளிகள் நடத்தி வரும் தியாகுவிடமிருந்து தமிழ் புத்தகங்களை வாங்கி இந்தப் பள்ளிகளுக்கு அளித்து ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. இந்தப் பள்ளிகளூக்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்று திரு.பாபு அவர்களிடம் கேட்ட போது, "இல்லிநாய்ஸிலும் (சிகாகோவில்) விஸ்கான்சினிலுமாக ஏழு தமிழ்ப் பள்ளிகள் வாரந்தோறும் சனி அல்லது ஞாயிறு நாட்களில் நடந்து வருகிறது. ஏழு பள்ளிகளில் பள்ளிக்கு குறைந்தது 40 பிள்ளைகள் என்ற அளவில் படிக்கின்றனர். சின்சிநாட்டியிலும் மிசவுரியிலும் அடுத்த ஆண்டு துவங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். மெல்ல மெல்லத்தான் ஆர்வமுள்ளவர்களை உள்ளிழுத்து இதைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று அதன் சிரமங்களைச் சிலாகித்தார். தமிழர்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபட வைப்பது என்ன சாமான்ய விடயமா? என்ன?

நாளும் பெருகிவரும் அமெரிக்கா வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தைப் போதிக்க வேண்டியது மிக அவசியமான அத்தியாவசிய தேவையாகும். பெட்னா என்றழைக்கப்படும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு இதற்காக தொலை நோக்குப் பார்வையோடு திட்டமிட்டு ஒரு தமிழப் பல்கலைக் கழகத்தையும் கலாச்சார மையம் ஒன்றினையும் அமெரிக்காவின் மையப்பகுதியில் துவங்க வேண்டுமென்று திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மையம் அமெரிக்க வாழ் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் தமிழ் பண்பாட்டு மையமாகத் திகழும் சாத்தியம் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு ஒரு உறவுப் பாலமாக இந்த மையம் அமைந்தால் அமெரிக்கத் தமிழர்களுக்குக் குறிப்பாக அவர்தம் மழலைச் செல்வங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலி·போர்னியாவில் உள்ள தமிழ் அகாதெமி நடாத்திவரும் ஒருவரை தலைவராகக் கொண்டு அமெரிக்காவில் தமிழ் வளர்க்க ஒரு ஒப்பந்தம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலமாக நடந்த இந்த ஒப்பந்தம் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் முடங்கிக் கிடக்கிறது. இணையத்தில் தமிழ் ஆர்வலர்களாய் செயல்படும் எவ்வளவோ பேர்கள் மூலம் இதனை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இன்றைக்கு அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இது காலூன்றி கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் வாழ வளர வழி கிட்டியிருக்கும்! இதன் நிர்வாக இயக்குனராக ஒரு கல்வி வணிகம் செய்யும் ஒரு பெண்மணி! அதுவும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்! அவர் எப்படி இதன் வளர்ச்சிக்கு முன்னெடுப்பார் என்று கருதிப் போட்டார்களோ என்று தெரியவில்லை; அவருடைய கல்வி வணிக நிறுவனத்தைக் கவனிப்பாரா? இது போன்ற பொதுநலப் பணிகளில் கவனம் செலுத்த அவருக்கு நேரம் இருக்குமா? இவருடைய பள்ளியில் இந்திய மொழிகள் பலவற்றைக் கற்பிக்கிறதில் தமிழும் ஒன்று; பெற்றோர் ஒருவரை விசாரித்ததில், கட்டணம் வாங்குகிற அளவுக்கு கவனமெடுத்துத் தமிழைச் சொல்லிக் கொடுக்க பயிற்சி பெற்ற ஆசிரியர் என்று எவரும் இல்லை. குறுவட்டைக் கொடுத்து வீட்டில் படித்து வாருங்கள் என்று அனுப்பி விடுவதால் எங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டோம் என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார். நியூயார்க்கில் அவரைப் போட்டது கூட பரவாயில்லை! அவரையே கனடாவிற்கும் ஏகபோக வாரிசாக நியமித்து அறிவித்தார்கள்! கனடாவில் எவருமே தமிழர்களோ அல்லது தமிழ் ஆர்வலர்களோ இல்லையா? இதனால்தான் அரசுத் திட்டங்கள் அதன் நோக்கம் நிறைவேறாமல் பாழ்பட்டுப் போகக் காரணமாகி விடுகிறது. (Mrs. Brahashitha Gupta, Exec. Dir. Sishyaa Education Center (USA)School of India, Tamil School in New York, 40, Hillside Ave, Williston ParkNew York, USA. & Mrs. Brahashitha Gupta Exec. Dir. Sishyaa Education Center (CAN)School of India, Tamil School in Canada, Canada.) இன்று வரை எந்த முன்னேற்றமும் காணாமல் கிடப்பில் கிடக்கிறது கொடுமையான வேதனை! இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அதை வைத்து தங்களை தமிழகத்தோடு தொடர்புடைய ஒரு முக்கியஸ்தர் என்று விளம்பரித்துக் கொள்ள இயலும்.

 தமிங்கிலச் சங்கங்கள்.....

சில பெற்றோர்கள் என் பிள்ளை இங்கே தமிழ் படித்து என்ன செய்யப் போகிறான்? என் பிள்ளைக்கு வீட்டில் தமிழ் பேசினாலே பிடிப்பதில்லை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் அருமைப் பெற்றோர்கள்! இதில் வெட்கக்கேடு என்னவென்றால் அப்படி சொல்பவர் ஒரு தமிழ் சங்கத்தின் செயலர்!? அதற்கு காரணம் அவர் தமிழர் அல்ல. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு சென்னையில் குடியேறியவர். அதனால்தான் அவருடைய தமிழ் பற்று அப்படி இருக்கிறது. சில தமிழ் சங்கங்களில் பொறுப்பாளர்களைப் பார்த்தால் தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் பொறுப்பாளர்களாக இருப்பார்கள்; அவர்கள் பெயரைப் பார்த்தாலே அவர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்று தெரியும்? சரி. இவர்களுக்கு எதற்கு தமிழ் சங்கம் என்ற போர்வை? கொஞ்சம் ஊன்றிக் கவனிக்கும் போது அப்படிப் பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்குச் சுய தேவை இருப்பதை அறிய முடிந்தது.

ஒருவர் பொறுப்புக்கு வந்தவுடன் இலவச திரைப்படம் காட்டுகிறோம் என்ற சுற்றறிக்கையை அனுப்பினார். அமைப்பில் உள்ளவர்கள் அகமகிழ்ந்து போனார்கள். அடுத்த இலவசத்தில், சோடா, தின்பண்டங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று சிறு வியாபாரம். அடுத்து, திரைப்படங்கள் திரையரங்கில் கட்டணத்துடன் என்ற சுற்றறிக்கை. அதுதான் அவரது தொழில்! பொறுப்புக்கு வந்தாச்சு; பொறுப்பா பொருளும் சம்பாதிச்சாச்சா?

இன்னொரு பொறுப்பாளர் அவர் பெயரே வடமொழி வாடையோடு; குழந்தைகளுக்கு வாயில் வரா வடநாட்டுப் பெயர்கள்; இவர் தமிழ்ச் சங்க நிர்வாகி! இரண்டு மூன்று கூட்டங்கள் சத்தமில்லாமல் வந்து போனார். அடுத்த கூட்டத்தில் வாய்க்கு ருசியான தென்னிந்திய உணவுவகைகள்; இன்னின்ன உணவு இவ்வளவு விலை என்று ஒரு சுற்றறிக்கை. ஆக...அடுத்த கட்டமாக உங்கள் வீட்டுக்குத் தேவையான உணவு வகைத் தேவைகளுக்கு எங்களிடம் சொன்னால் உங்கள் இல்லத்திலேயே கொண்டு வந்து தருவோம் என்று! இவர் வீட்டிலேயே உணவு தயாரித்து சுயமாக தொழில் செய்யும் கனவுக்கு பாலம் அமைத்துக் கொடுத்திருப்பது தமிழ் சங்கம் என்ற உண்மை தெரிய வந்தது. சரி, இது தலைவருக்குத் தெரியாதா? தலைவருக்கு தொலைபேசினால் தமிழ் பேச வராது; ஆங்கிலம்தான்! என்ன செய்யிறது பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில்! அப்புறம் நேரே யு.எஸ். வந்துட்டோம். எதோ வீட்டில் எங்க அப்பா, அம்மா பேசிய தமிழ் கொஞ்சம் கொஞ்சம் மலரும் நினைவுகளாக...என்று சொல்லி கொசுறாக இப்பப்பாருங்க என் மகனோ மகளோ தமிழே தெரியாது. வீட்டிலயும் பேசுறது இல்லையா? என்று பெருமையாக தகவல் சொல்லும் இவர் ஒரு மருத்துவர்! கோவில் அறங்காவலர் போன்ற பல பதவிகள் இவருக்கு...

நாலைந்து வருடங்களுக்கு முன்பு, பொங்கல் விழாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தனர் என்னை. நான் பொங்கல் விழாவைப்பற்றி பேசத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் பெண்கள் பகுதியிலிருந்து சிலர் பேச...அது அப்படியே ஆண்கள் பகுதியிலும் ஆரம்பித்து சலசலவென்று பேசிக் கொண்டிருந்தனர். சரி, சுருக்கமாய்ச் சொல்லி நிறுத்தி விடலாம் என்று நான் நினைத்த போது, பலமான கரவொலி. இடையிடையே எழுந்த கரவொலிகள்...யார் கேட்டாலும் கேட்கா விட்டாலும் தொடர்வது என்று தண்ணீரை மடக்..மடக் விட்டுக் கொண்டு தொடர்ந்தேன். பொதுவா கல்லூரிகளில்தான் பேச வேண்டாம் உட்கார் என்பதற்கு கரவொலி எழும். அது போலவா? என்று கவனித்தபோது கரவொலிக்குச் சொந்தக்காரர்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரியவர்களிடமிருந்து. அந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சுமார் 300 பேர்களில் ஒரே ஒரு அமெரிக்கப் பெண், நான் பேசுவதைத் தம் தோழியிடம் ஆங்கிலத்தில் சொல்லச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார். சரி,அவருக்காவது நம் கலாச்சாரப் பாரம்பரியங்கள் அறிமுகமாகட்டும் என்று பேசினேன். பேசி முடித்துவிட்டு நான் கீழிறங்கி வந்த போது பல பெரியவர்கள் கரம் குலுக்கி எங்களுக்கே தெரியாத சில விடயங்களைக்கூட அழகாச் சொன்னீங்க என்று பாராட்டினார்கள். நம்மவர்களோ இது ஒரு சந்திக்கக் கிடைக்காத பொழுது, என்ற ரீதியில் தங்கள் சலசலப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது அமெரிக்கப் பெண் வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, உங்க தமிழ் கலாச்சாரம், பண்பாடு, விழாக் கொண்டாட்டங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளது என்று அறியத் தந்தமைக்கு நன்றி என்றார். பின்னர் அவரால் வேறு ஒரு இடத்தில் போய்ப் பேச வேண்டிய அவசியம் எனக்கு வந்தது.

இதைவிடக் கொடுமை தமிழ் சங்க நிர்வாகிகளில் பெரும்பாலும், வேலைக்குப் போகாத வீட்டில் இருக்கும் பெண்கள். இவர்கள் தமிழ் சங்க நிகழ்ச்சிகளுக்கு சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். ஒருவர், நடனத்துக்கு! இன்னொருவர் உணவுக்கு...இப்படியாக. இவர்கள் தமிழ்க் குடும்பங்களைத் தொலைபேசியில் அழைப்பார்கள். எப்படி? எல்லாம் நுனிநாக்கு ஆங்கிலம்தான்! பொது இடங்களில்தான் தமிழில் பேசுவது கெளரவக் குறைச்சல். தொலைபேசியில் தமிழ் குடும்பங்களோடு உரையாடும் போது கூடவா தமிழ் பேசக்கூடாது?

எனது நண்பர் ஒருவர் இல்லத்தில் அவரது வயதான தாயார் இருந்திருக்கிறார். தமிழ் சங்க.... இல்லை... இல்லை தமிங்கிலச் சங்கத்திலிருந்து இப்படியானதொரு நுனிநாக்கு ஆங்கிலத்தில் அழைத்திருக்கிறார். நண்பரின் தாயாருக்கு ஒன்றும் புரியாததால்...மகன் வீட்டில் இல்லையே ஒங்களுக்கு தமிழ் தெரியாதா எதேதோ பேசுறீங்களேம்மா... எனக்குப் புரியலையே..." என்று சொல்ல அழைத்தவர் அப்படியா.. சரி.. நான் சாயாந்திரமாப் பேசறேன் என்றாராம். ஏண்டியம்மா, நல்லாத் தான தமிழ் பேசுற... நம்ப வீட்டுல பேசறப்பக் கூடவா வெள்ளக்காரன் பாசையில பேசோணும்ன்னாங்களாம்? உடனே தொலைபேசியைத் துண்டித்து விட்டாராம். நண்பர் சொல்லிச் சிரிப்பார். இதனால் எதிர் காலத்தில் எத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது தற்காலத்துக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.

தமிழகத்தில் மூவேளை உழைத்து ஒருவேளைக் கூழுக்கு தவிக்கும் குடும்பங்கள் எத்தனை எத்தனையோ!? ஒரு தமிழ்நாட்டுக் கிராமத்தைத் தத்து எடுத்து அந்தக் கிராமம் முன்னேற உதவி செய்யலாமே? ஆனால், வாரம் தவறாமல் ரொட்டியில் வெண்ணெய் வைத்து ஜாம் வைத்து பொட்டலங்கள் தயாரித்து சாப்பிட வழி இல்லாமல் தவிக்கும் அமெரிக்கவாசிகளைத் தேடிப் போய்க் கொடுக்கும் தாய்க்குலங்களின் சமூகப் பணிகள் ஒவ்வொரு வாரமும் கர்ணசிரத்தையாய் அரங்கேறும்! இதில் தமிழைப் பேசப் படிக்க எழுத தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏது நேரம்?

மெல்லத் தமிழினி...?

தாத்தா? இருக்காங்களா? என்று தெரியாத்தனமாய் தமிழ் சங்க நிர்வாகி ஒருவரின் மழலையைக் கேட்க, "What is that uncle? is that a sweet? I don't know. Tell me in English" என்கிறான். எந்தச் சுவற்றில் போய் முட்டிக் கொள்வது? வெளிநாட்டில் வந்து குடி ஏறும்போது நாகரீகம் என்கிற புறம் மாறலாமே தவிர, பண்பாடு என்கிற அகம் மாறக் கூடாது. வீட்டுக்கு வெளியே தமிழைப் பேசா விட்டாலும் வீட்டுக்குள் தங்கள் குழந்தைகளிடம் தமிழ் பேசுவதற்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும்! மெல்லத் தமிழ் இனி இங்கு மறையுமோ? தமிழகத்திலேயே தமிங்கிலமாக இருக்கும் போது அமெரிக்காவில் வெல்லத் தமிழ் மெல்ல வளர இங்குள்ள தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இயங்கினால்தான் உண்டு! தேசம் கடந்து வந்த பின்னர் வீட்டில் கூட தம் தாய்மொழியைப் பேசாமல் ஆங்கிலத்திலேயே உரையாடுவது குழந்தைகளுக்கு இரட்டை மொழிக் குழப்பம் வந்துவிடும் என்று நொண்டிச் சமாதானத்தை சொல்லிக் கொண்டே தங்கள் வாழ்க்கையில் கோணல் புள்ளிக் கோலம் போடுகின்றனர்.

மேலை தேசக் கலாச்சாரங்களுக்கு இடையில் இந்த நொடியின் நவீன தொழில் நுட்பங்களின் வசதி வாய்ப்புக்களோடு தங்கள் வாழ்க்கையை அறிந்தோ அறியாமலோ அமைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டாலும் அடிப்படை மனப்பாங்கைப் பொறுத்தவரை மாற்றம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் பலர். பதவிகளில் நாட்டம், தம்மைக் குமுகாயத்தில் தம் பண்பாட்டுக்கு உதவாத செயல்களில் முதன்மைப் படுத்துவதில் ஆர்வம், சாதிமத பாகுபாடுகளை கட்டிக் காக்கும் இன்னொரு வகையான போக்கு எது சரி? எது தவறு? என்று உணராது சாரும் இயல்பு நிலை, கூடுமிடங்களில் சம்பந்தமில்லாத விடயங்கள் குறித்து தர்க்கம் புரிதல், நகைகளிலும் உடைகளிலும் கவனச் சிதறல்கள், தமிழ்த் திரை மெகா நட்சத்திர மோகங்கள், தமது இனத்துக்குள்ளேயே போட்டா போட்டி, போன்ற தமிழக நிகழ்வுகள் போன்றே இங்கும் நிகழ்த்திக் காட்டுபவர்களாகவே இருப்பதும் வருத்தத்திற்குரியது.

இங்குள்ள ஆலய உற்சவங்களிலோ அல்லது தமிழ்க் கலாச்சார விழாக்களிலோ கலந்து கொள்கிற தமிழர்கள் பலர் தாங்கள்அங்கு வந்த நோக்கத்தையே மறந்து தங்களுக்குள் உரையாட, உறவாடக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கொண்டு அந்த இட அமைதியைக் குலைத்து கண்ட இடங்களில் உணவருந்தி அந்த இடத்தை அசுத்தப் படுத்துவதில் தங்களுக்கு நிகர் எவருமில்லையென்று நிரூபிக்கிறார்கள். ஆகவே நாடுகள் கடந்து, கடல் கடந்து வந்தாலும் தமிழர்கள் மத்தியில் தமிழ் மேம்பாட்டுக்கான, தமிழ் குமுகாயத்துக்கு என்றில்லாமல் இருந்து வருகின்ற நிலைதான் பரவலாகக் காணப்படுகிறது.

தமிழர் பண்பாடுகள், கலாச்சாரம், தாய்மொழி என்று பால்போல் பொங்கும் சில தமிழ் ஆர்வலர்களைக் கூட ஏற்கனவே இருக்கிற தமிழர்கள் இனிமேல் என் பிள்ளை தமிழ் நாட்டில் போய் என்ன சாதிக்கப் போகிறான்? இல்லை வேலைதான் பார்க்கப் போகிறானா? என்றுமார்தட்டும் பெற்றோர்களுக்கிடையில் சுலபமாக நுழைந்து வெற்றி கண்டிருப்பது என்னவோ தமிழ்ச் சினிமா மோகம்தான்.

நுனிப்புல் மேய்ச்சல்...

இதற்குக் காரணம் என்ன? சற்று கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். மெட்ராஸ் மாகாணமா இருந்தப்ப தெலுங்கர், கன்னடம் பேசுவோர் எல்லாம் சென்னப்பட்டினம் அதைச் சுற்றிலும் வசித்தார்கள். பெயர் மாற்றப் போராட்டம் எல்லாம் நடந்து தமிழக எல்லை வரையறுக்கப்பட்ட பின்னரும் வாழ்க்கை வசதி வாய்ப்புகளுக்காக இவர்கள் தமிழகங்களில் தங்கிவிட்டனர். தங்கினாலும் அவரவர் மொழிகளே அவரவர் வீடுகளில் பேசப்பட்டது. காலப்போக்கில் இவர்கள் தமிழகத்திலிருந்து தமிழர் என்ற போர்வையோடு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் குடியேறினர். இவர்கள் உறவுகள் நண்பர்கள் என்ற வட்டங்களில் வரும் போது தமிழ் சங்கங்களிலும் உறுப்பினர்கள்; தெலுங்கு சங்கங்களிலும் உறுப்பினர்கள். இவர்களுக்கு தமிழ் பேசப் பிடிக்கும்; தமிழ் நிகழ்ச்சிகளைப் பிடிக்கும். தமிழில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கோட்டுக்குள் மட்டும் சிக்க மாட்டார்கள். தமிழ் சங்கம் இவர்களுக்கு நுனிப்புல்.

 இவர்கள் தமிழ் சங்கப் பொறுப்புகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை தமிழ் சங்க நிகழ்வுகள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களுக்கான திசைகளில் மட்டுமே செல்லக் கூடியதாக இருக்கும். வெறும் சினிமா நடிகர்களையும், நாட்டிய நடனங்களையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்துவதைக் காட்டிலும் தமிழ் வளர, வாழ தமிழ் பண்பாடு சிதைந்து போகாமல் இருக்க தமிழில் ஆர்வமூட்டும் பேச்சாளர்களை வரவழைத்து தமிழ்க் குடும்பங்களை முக்கியமாக அவர்தம் குழந்தைகள் அடங்கிய கூட்டத்தில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்த தமிழ்ச்சங்க பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழப் பண்பாடு கலாச்சாரம், நாகரீகம், ஏன் பெயரைக் கூட தொலைத்து விட்டு பல நாடுகளில் நிற்கிற நிலைதான் ஏற்படும். Valaydon..... Triwanncat Thancanamut ' இந்தப் பெயர்களை உச்சரிக்க முடிகிறதா? "வேலாயுதன்"... 'திருவேங்கடம் தங்கமுத்து' என்ற தமிழ் பெயர்தான் அப்படி நைந்து சிதைந்து நாறாகியிருப்பது தெரிந்தது. ரட்னம்...இது ரத்தினம். chantra mokan(சந்திர மோகன்), Munchame chetty(முனுசாமி செட்டியார்) ஆப்பிரிக்காவில் பல்லாயிரம் பூர்வீகத் தமிழர்கள் திருநாமம் இப்படித்தான்! எதிர்காலத் தமிழர்கள் குழந்தைகள் பெயர்கள் ஆப்பிரிக்கத் தமிழர்கள் போன்றே மாறலாம்; இப்போதே ஆண்டியப்பன் ஆண்டியாகவும், சாமியப்பன் சாம் ஆகவும் ஒலிக்கத் துவங்கி விட்டதைக் கேட்கிறோமே?

ஸ்பானிஷ் ஆதிக்கம்...

அமெரிக்காவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மொழி ஸ்பானிஷ்! இதற்கு காரணம் தென் அமெரிக்க நாடுகளான சிலி, கொலம்பியா, பிரேசில், பெரு உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து கடவுச்சீட்டோடும், கள்ளத்தனமாகவும் அமெரிக்காவில் வந்து குவிந்தவர்கள் தங்கள் மொழியான ஸ்பானிஷ் மொழியிலேயே பேசினர். படிக்கவும் எங்கள் மொழியே என்பதில் உறுதியாக இருந்தனர். கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர்கள் அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழியை இரண்டாவது மொழியாக்கி விட்டனர். எந்த விண்ணப்பப் படிவத்தை எடுத்தாலும் ஆங்கிலம், ஸ்பானிஷ்.... மருத்துவமனைகள் மொழிமாற்றுனர்களை வேலைக்கு வைக்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு இன்றைக்கு ஆளாகி விட்டனர்!

தொலைபேசியில் ஆங்கிலத்திலும் ஸ்பானிஷ் மொழியிலுமே தகவல்கள் என்று தனது ஆதிக்கத்தை வளர்த்து விட்டார்கள். அமெரிக்காவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை ஆங்கிலமே என்றிருந்த பூமியில் ஆலம் விழுதாய் கிளை பரப்பி இன்றைக்கு ஸ்பானிஷ் இரண்டாம் இடத்தில் கோலோச்சும் நிலை வந்துவிட்டது! தமிழ் அந்த அளவு கோலோச்சா விட்டாலும், இல்லங்களிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழிலேயே பேசுவோம்; இங்குள்ள பல்கலைக் கழகங்களில் இந்தி, தெலுங்குக்கு துறைகள் இருப்பது போல தமிழுக்கும் துறைகள் ஏற்படுத்திடவும் முனைப்பாக இருந்தால் மெல்லத் தமிழ் வளரும் இங்கும்...

இணையத்தில்....

இன்னொரு புறம் பார்த்தால், தமிழகத்தில் எந்த நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலோ எழுதிப் பழக்கப் படாதவர்கள் அமெரிக்காவிற்கு வந்த பிறகு இணைய இதழ்கள், அச்சு இதழ்களுக்கு எழுதுபவர்கள் இருக்கிறார்கள்; தமிழில் முதலில் எழுதத் தயங்கிப் பின் மெல்ல மெல்ல தமிழ் எழுத்துருக்களைப் பாவித்து மடலாடற் குழுமங்களில் சக்கைப்போடு போடும் தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்; தமிழ் நெட், தமிழ் உலகம், அகத்தியர், மரத்தடி, அன்புடன் (ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழில் மடலாடல் செய்வதில் உறுதியான குழு) போன்ற தமிழில் மடலாடல் செய்யும் குழுமங்களில் இவர்களின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது.

இணையத்தில் நூல் வெளியிடலாம்; நூல் வெளியிடும் விழா நடத்த முடியுமா? வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை தமிழுக்கு வாய்த்தது! தமிழ் உலகம் மடலாடற் குழுவில் உலகலாவிய நூல் வெளியீட்டுவிழா இணையப் பந்தலில் கனடா வாழ் கவிஞர். புகாரியின் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இது தவிர வலைப்பூ, வலைப்பதிவு எனப்படும் பதிவுகளில் தங்கள் கதை, கட்டுரை, கவிதைகள் என்று தங்களுக்கு எது விருப்பமோ, அதை அழகாக வடிவமைத்து தமிழை உலகத் தமிழர்கள் உவந்து படிக்க முன்னிடுகிறார்கள். தேர்ந்த கட்டுரையாளர்கள், கதை புனைவோர், கவிதை நெய்வோர் இவர்களெல்லாம் புத்தகங்கள் அச்சில் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து இணைய இதழ்கள் வெளிவந்தாலும், அச்சில் "தென்றல்" இதழ் வருகிறது. ஆங்காங்கேயுள்ள சில விரல் விட்டு எண்ணும்படியான தமிழ்ச்சங்கங்கள் மாத இதழ் வடிவமைப்பில் பிரசுரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் இந்தியர்கள் தனி மாநிலம் அமைக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டார்கள். அதுமட்டுமல்ல. அவர்கள் கால் பதிக்காத... கைபடாத துறையே இல்லை எனும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறார்கள். இதில் தமிழர்கள் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதோ ஒரு சிறு கண்ணோட்டம்:-

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள :- 3.23 மில்லியன்
இதில் மருத்துவர்கள் :- 22%
விஞ்ஞானிகள் :- 21%
மென்பொருள் மற்றும் வன்பொருள் வல்லுநர்களாக பல்வேறு நிறுவனங்களில்
பணியாற்றுபவர்கள்...........................:- 28%
(இதில் மைக்ரோ சாப்ட் ஊழியர்கள் :-9% ,
(கணினி வல்லுநர்கள், ஐபிஎம் ஊழியர்கள் :- 6%)
இதரபணிகளில் ஊழியர்கள் 5%
சுய தொழில் புரிபவர்கள்(பாறை நெய்(பெட்ரோல்)
நிரப்பு நிலையங்கள், பலசரக்குகடைகள், உணவுவிடுதிகள்,
தங்கும்விடுதிகள் உட்பட..)................7%
க்ரீன் கார்டு உள்ள இந்தியர்கள் 17%
இதில் தமிழர்கள் மட்டும் 14%
தெலுங்கர்கள் 26%
நிரந்தர குடியுரிமைபெற்ற இந்தியர்கள் 22%
இதில் தமிழர்கள் 11%
மொழி ஆழமானது. பிரபஞ்சம் போல் விசாலமானது. தாய் மொழி என்பது ஆயிரமாயிரம் மூலிகைகளை அலசிப் பிழிந்து, நூறு வகை மண்களில் புரண்டு அவற்றின் ஆற்றல்களை உண்டு, ஆறாக இறங்கிப் பூமியின் உள்ளும் புறமும் இயங்கி நமக்குக் கிடைக்கும் நீர்.

தாய்மொழி ஒரு இனத்தின், தன்மானத்தின் வடிவம். தாய்மொழியை இழந்த இனம் தன்மானத்தை இழந்து அழியும். எனவேதான் உலகெங்கிலும் ஒரு இனத்தின் எழுச்சி என்பது தாய்மொழி எழுச்சியிலிருந்து துவங்குகிறது.

உலகின் மூத்த மொழி தமிழ் மொழி! வளமான மொழி. உலக அறிவை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் விரிவும், நிகிழ்வும், ஆற்றலும் கொண்ட மொழி. பேசும் இனத்தின் ஆசைகளையும், தேவைகளையும், சாதனைகளையும், இயக்கங்களையும் காலத்தோடு திரட்டிக்கொண்டே வளர்வது அது. எழுத்தில் அடங்காத நுட்பமான ஒலிகள், தொனிகள், உணர்வுகள். இவற்றின் நெளிவு சுளிவுகள், குறுக்கல் நீட்டல்கள் என மொழியின் இழைகளும் பிசிறுகளும்கூட மொழியிலிருந்து பிரிக்க முடியாதவை. காலங் காலமாக மொழியில் சேரும் தொன்மங்கள், சொலவடைகள், பழமொழிகள், அறிவுரைகள், வட்டாரச் சிறப்பு வழக்குகள், இப்படி வாழும் மொழியில் வசப்படாத உயிர்க்கூறுகள் ஏராளம்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றும், வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி!" என்றும் பாரதி போற்றிப் பாராட்டிப் பாடும் தகுதி உள்ள மொழி தமிழ் மொழி!

இத்தனை சிறப்புக்களைக் கொண்ட மொழியை தமிழக மக்கள் உலகில் எங்கு சென்றாலும் அனைவரும் பேசவும் எழுதவும் வேண்டும்; அவர்தம் மழலையர்க்கு கற்றுத் தருதல் வேண்டும். இல்லங்களில் தமிழ் பேசும் உள்ளங்களாகத் திகழ வேண்டும். தமிழகத்தில் அறிவொளி இயக்கம் தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுவது போல உலகத் தமிழர்கள் அவரவர் வாழும் பகுதிகளில் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க தமிழ் அமைப்புகள் ஆவன செய்ய வேண்டும்.

அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் இளையர்கள் பலவிதமான பண்பாட்டுச் சிதைவுகளில் சிக்கி கலாச்சாரம் சிதைவுறுகின்றது. தாய்மொழி சிதைவுறுகின்றது. உறவுகளில் வைத்திருந்த பாசம் சிதைவுறுகின்றது. தற்காலிகமான அந்நிய மண் வாழ்வுச் சுகத்தில், சொந்த மண்ணின் பற்று சிதைவுறுகின்றது. ஒட்டுமொத்தமாக, அந்நிய மண்ணில் வாழும் இளைய தலைமுறையினர் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்றில்லை. விதிவிலக்காகப் பல இளந் தலைமுறையினர் நமக்குப் பெருமை சேர்ப்பதுவும் குறிஞ்சிப்பூவாய்! நெருஞ்சிப்பூவாய் நம்மை குத்திக் கிழிக்கும் விடயம், தம் பிள்ளையரின் தமிழறிவை மழுங்கடிக்கும் வகையில் பெற்றோரே நடப்பது என்னவோ மரத்திலிருந்து விழுந்தவரை மாடேறி மிதித்த கதையாய் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பதற்றம் இயல்பாய் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

"நிரந்தரம் இல்லாத வேற்று நாட்டில் தாய்மொழியை மறக்க முற்படுபவர்களையும், மறந்தவர்களாக நடிக்க விளைபவர்களையும் மொழியின்பால் விருப்பற்ற பெற்றோர்களின் தாய்மொழியை அறிய முடியாத சிறார்களையும் நம் தாய்நாடு என்ன நிலையில் வரவேற்றாலும் அங்கே இவர்களின் நிலை எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றிப் பெரும்பாலோனோர் அக்கறைப் படுவதாகவோ வருங்கால வாரீசுகளின் எதிர்காலம் ஆகக் குறைந்தது தாய்மொழியின் அத்திவாரத்தில்தான் உருவாக முடியும், என்பதைப் பற்றி உணர்ந்ததாகவோ தெரியாதது ஒரு துரதிர்ஷ்டமான விடயமாகும்" என்று புலம் பெயர்ந்த எழுத்தாளர் ஒருவர் புத்தாயிரமாண்டு புலர்ந்த போது இணைய இதழ் ஒன்றில் எழுதி வருந்தியிருந்தது நினவிற்கு வருகிறது.

வாழக்கை என்பதே முரண்பாடான நிகழ்வுகளின் கலவைதானே. நமது இளையர்கள் கட்டியெழுப்பும் எதிர்கால வாழ்க்கை என்பது, நமது கலாச்சாரத்திலிருந்து முரண்பட்டதாக அமையப் போகின்றதே என்கிற நிதர்சனச் சுடல்! உண்மையில்லை என்று எவராவது மறுத்துரைக்க இயலுமா?. தமிழ் பண்பாட்டில் வாழ்ந்த... வளர்ந்த பலருக்கே, வெளிநாட்டு வாழ்வின் போதையில் தள்ளாட்டம் போடும் போது, அனுபவம் குறைந்த இளைய தலைமுறையினருக்கு இந்த நிலை வருவதில் விழிகள் விரிய வியப்படைய என்ன இருக்கின்றது?

ஒரு குழந்தை தாய் மொழியைத் தொலைக்கிற போது தன் நாட்டையும் பண்பாட்டையும் தொலைத்து விடுகிறது. தமிழ்ப் பண்பாடுதான் உலகிலேயே பாதுகாப்பான பண்பாடு. எனவே, இதற்கு முன் இல்லா விட்டாலும் இல்லத்தில் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள். இல்லங்களில் தமிழ் பேசினாலே குழந்தைகளுக்கு பாதித் தமிழ், வந்துவிடும்; இதை ஒரு சங்கல்பமாக அந்தந்தப் பகுதி தமிழ் சங்கங்கள் எடுத்துக் கொண்டு அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரும் தமிழறிவு பெற்றவர்கள் என்ற நிலை மலரச் செய்ய வேண்டும். அதற்கு அமெரிக்கத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். ஊருக்கு ஒரு இளைஞர் கிளர்ந்தெழுந்தாலே தமிழ் கற்றுக் கொடுத்தல் சாத்தியப்படும். நம் சிறார்க்கு தமிழ் வானம் வசப்படும்! எங்க அப்பா, அம்மா எங்களுக்கு எங்க தாய்மொழியைச் சொல்லி கொடுக்காமலே போய்விட்டர்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் பிள்ளைகள் சொல்ல இடம் கொடுக்கலாமா?

தமிழ்மொழிபோல...

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" பாடலைப் பாருங்கள். அது ஒரு சிறப்பான, தமிழருக்கே உரிய ஒரு பார்வையைச் சொல்கிறது. அங்கேதான் சிலம்பு முரண்படுகிறது. அது ஊழ்வினை விஞ்சி நிற்கும் என எந்திரமயமான நீதி பேசுகிறது. ஆனால் யாதும் ஊரே பாடலோ பெரியோரைப் புகழ்வதோ, அதை விடச் சிறியோரை இகழ்வதோ செய்யோம் எனப் பேசுகிறது. மேன்மையும் கீழ்மையும் வருவது ஊழ்வினை யாலானாலும் அது எமக்குப் பொருட்டல்ல என்பது சிறப்பல்லவா? வடமொழி மரபில் இந்தப் பார்வையைக் காண முடியாது. இப்படிச் சொல்பவர் யார் தெரியுமா? தமிழை நன்கு புரிந்த தெரிந்த தமிழர் ஒருவரால்தானே இப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்லியது ஒரு அமெரிக்கர். பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர். (அமெரிக்கர், தமிழ் பற்றால் ஒரு தமிழ் பெண்ணை மணந்து கொண்டவர்) புறநானூற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Four Hundred Poems of War and Wisdom' என்ற இவருடைய நூலுக்கு 'ஏ.கே.ராமானுஜன் பரிசு' வழங்கப்பட்டுள்ளது. கணினியில் தமிழில் எழுத மென்பொருள் செய்தவர்களில் முன்னோடி, என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வேற்று மொழிக்காரருக்கு உள்ள தமிழ் ஈர்ப்பு தமிழர்கள் பலரிடம் இல்லாமல் இருப்பது வேதனை தருவதாகவுள்ளது. தமிழ் மொழியின் அருமை பெருமைகளை இன்னும் எத்தனை காலம் கால்டுவெல் சொன்னார், ஜி.யு.போப் சொன்னார் என்று மேனாட்டாரையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமோ தெரியவில்லை.

வீட்டுக்குள் தமிழ் வளர்த்தால்
வீதியிலும் தமிழ் வளரும்..
வீட்டுக்குள் தமிழ் ஒலித்தால்
வீதியிலும் தமிழ் ஒலிக்கும்..!!
தமிழினை வாசித்து
வளர மறந்த தமிழ்ச்சமூகம்
போன தலைமுறையோடு
போகட்டும் போகட்டும்..
அடுத்த தலைமுறையாவது
தமிழினை சுவாசித்து
வளர்ந்திட வகை செய்வோம்,
தமிழ் வளர்ப்போம்..!!

பயிரைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதை விட பயிரின் வளர்ச்சியைத் தடுக்கும் களையைப் பற்றித்தான் பேச வேண்டியதிருக்கிறது. அகற்றப்பட வேண்டியது களைதானே! ஆகவே பற்பல விடயங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாடு இடம் பெயர்ந்து வாழ வந்த தமிழர்களின் கரங்களில் இன்றைக்கு இருக்கிறது. தேசம் கடந்து வந்த பின்பு தமது குமுகாய மேம்பாட்டிற்கான சிந்தனை பெற வேண்டும்! ஞானம் பெற வேண்டும்!! இல்லையென்றால் தேசங்கள் கடந்து வந்து தாங்கிய வேசம் வெளுக்க வெகு காலமாகலாம். வாழ்க்கையில் பொருள் உங்களிடம் சேரலாம்; ஆனால் அது பொருள் (அர்த்தமற்ற) இல்லா வாழ்க்கை யாகத்தானிருக்கும்!

ஆங்கிலம் பேசும் நாட்டில் தமிழுக்கு அவசியமில்லை என்று தங்கள் பிள்ளைகளை பிரெஞ்சு, செர்மனி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளை விருப்பப் பாடமாக பயிலச் சொல்லி ஊக்கம் கொடுப்பதில் நம் தாய் மொழி தமிழை ஒதுக்குவது நம் கண் எதிரே நடைபெறும் நிலையைத் தவிர்க்க  வாருங்கள் போராடுவோம்.

__________________

ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களது இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.