........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-3

            பழைய வரலாறு மறக்கலாமா...?

-எட்டயபுரம் சீதாலட்சுமி , ஆஸ்திரேலியா.

என்னுடைய ஊர் எட்டையபுரம்.

மகாகவி பாரதியார் படித்த ராஜா உயர் நிலைப் பள்ளியில் நானும் படித்தேன். அப்பள்ளிக்கு இன்னுமொரு சிறப்புண்டு. தவமிகு.சிவானந்த மகரிஷியும் அதே பள்ளியில் படித்துள்ளார்.  இசையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதர், அரண்மனையின் வித்வானாக இருந்து அவ்வூரிலேயே முக்தியடைந்ததால் அவரது சமாதியும் , சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவரின் சமாதியும் அவ்வூர்ப் பெருமையைக் கூடுதலாக்குகின்றது.

நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கும் முன்னரே இராஜகோபாலாச்சாரியார் அவர்களும், கல்கி அவர்களும் எங்களூர் வந்து பாரதிக்கு ஓர் மணி மண்டபம் எழுப்ப ஆவன செய்தனர். கலையுலக வல்லுனர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அடிக்கடி கால் பதிக்கும் மண் எங்களூர் கரிசல்மண்.

என்ன, இவள் தன் சுயசரிதை சொல்கின்றாளே என்று உங்கள் புருவங்கள் நெளிவது புரிகின்றது. மனிதனுக்கு அவன் வந்த வழி தெரிய வேண்டும். விளையும் மண்ணையொட்டித்தான் பயிரின் விளைச்சலும் இருக்கும். நம் மொழியை நாம் நேசிக்கின்றோம். தமிழ் நாட்டின் கலாச்சாரங்களைப் பேசிப் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். நம் தமிழ்த்தாய்க்கு நம் கடமைகளைச் சரிவரச் செய்திருக்கின்றோமா என்ற  சிந்தனைக்கு என் எண்ணங்களை முன் வைக்கின்றேன்.

ஒளவைக்கிழவி தூது சென்று போரை நிறுத்தியது அக்காலத்தில் மன்னர்களின் தமிழ்ப் பற்றைக் காட்டுகின்றது. தந்தையை இழந்த பாரி மகளிரை மணமுடித்துக் கொடுக்க ஒரு புலவன் எத்தகைய இன்னல்களையும் பொருட்படுத்தாதது மன்னர்கள் மேல் புலவனுக்கு இருந்த அக்கறையைக் காட்டுகின்றது. கடமை முடித்த கபிலன் நண்பனைப் பிரிந்து வாழ விரும்பாது தீக்குளித்து மாண்டது நட்பின் ஆழத்தைக் காட்டுகின்றது. கற்புக்கனல் கண்ணகியை இலக்கிய நாயகி என்று நினைத்தால் கன்னியாக வாழ்ந்த திலகவதி சரித்திரப் பெண்மணியல்லவா? மணம் முடிக்க நிச்சயிக்கப் பட்டவன் போரில் மாண்டவுடன் தன்னை மணமுடித்தவளாகக் கருதி வாழ்ந்த பெண்ணரசி. கல்லிலே கலை வண்ணங் கண்டவன் மகேந்திரவர்மன். நகைச் சுவை நாடகங்கள் எழுதியவன். நந்திவர்மனின் கலம்பகத்தை மறக்கமுடியுமா?

காஞ்சியை அழிக்க வந்த மன்னன் விக்கிரமத்தித்தன், கைலாசநாதர் கோயிலின் அழகில் சொக்கி நிவந்தங்கள் கொடுத்துப் போனது சரித்திரச் செய்தி. அக்கோயிலை எழுப்பிய இராசசிம்மனின் கடல் மல்லைக் கோயில் இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகின்றது. இக்கோயில் இராசராசனின் மனத்திலுள் ஓர் வித்தை ஊன்றி அது தஞ்சையில் பெரியகோயிலாகப் பலரும் வியக்கும் வண்ணம் கட்டுமான நுட்பங்களுக்கு எடுத்துக் காட்டாக நிமிர்ந்து நிற்கின்றது. கரிகாலனின் கல்லணையும், சென்னைக்கு இப்பொழுது குடிதண்ணீர் கொடுக்கும் வீரநாராயண ஏரியும் வரலாறு படைத்தவை. சொல்லிக் கொண்டு போனால் பட்டியல் நீண்டுவிடும்.

சொல்ல நினைத்ததைச் சொன்னால் தான் ஆதங்கம் புரியும்.

தமிழகத்தில் நாகரீகமும் பண்பாடும் நிறைந்தச் சோழப் பேரரசு சுமார் 460 ஆண்டுகள், அரை மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவு நாட்டினை ஆண்டு வந்தனர். கடல் வாணிபத்திலும், கடல் போரிலும் சிறந்து விளங்கினர். காவிரிப் படுகையில் ஓரடி அஸ்திவாரத்தில் கோயிலைக் கட்டியவர்கள்.  தஞ்சைக்கோயில் அமைப்புக் கட்டுமானங்களின் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இதன் சிறப்பு உலக அரங்கில் பதிக்கப்பட்டு விட்டது.. கோவில்களைப் பற்றி மட்டும் கூறப்பட்டால் வரலாறு முழுமையாகுமா?

அடித்தளத்திலிருந்து நிர்வாகச் சீரமைப்பு, ஒழுக்கக் கட்டுபாட்டின் விதிமுறைகள், வரவு செலவுக் கணக்கு எல்லோரும் பார்க்கும்வண்ணம் வெளிப்படையான சாசனங்கள், ஒரு காசு நன்கொடை கொடுத்தாலும் அவர்கள் பெயரினையும் கல்லிலே பதிக்கும் நாகரீகம் இவைகள் உலக அரங்கிற்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. இதை நான் கூறவில்லை. பிரிட்டீஷ் நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் வருத்ததுடன் கூருகின்றார். இதே சோழ நாடு ஐரோப்பாவில் இருந்திருக்குமானால் உலகப் புகழ் பெற்றிருக்கும் என்று எழுதியுள்ளார் திரு.டேவிட் கீஸ். இவர் 60 நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் ஆராய்ச்சி செய்துள்ளார். தமிழ் மன்னர்களில் மாமன்னர் என்றும் கூறப்படுவது இராசராசனைத்தான். அவன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலைவிட அவன் மனம் பரந்தது. மனிதநேயப் பெருமகன்.

தன் போர்வீரன் ஒருவனின் நலம் வேண்டிக் கோயிலுக்கு நிவந்தம் அளித்துள்ளான்.  காடன் மைந்தன்
என்ற கிராம அதிகாரி மன்னனை அணுகி தங்கள் நலம் வேண்டி விளக்குப் போட வேண்டும் எனக் கேட்டபொழுது மன்னன் கூறிய பதில்தான் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திரம். எனக்கு உங்கள் நலம் முக்கியம். எனவே, உங்கள் நலனுக்காக, ஊர் மக்களின் நலனுக்காக உலக மக்களின் நலனுக்ககாக விளக்கு வைக்கவும் உத்திரமேரூர் கல்வெட்டுப் பேசும் கதை இது. இலங்கை நாட்டவரைக் குறிப்பிடும் பொழுது முரட்டெழில் சிங்களவர் என்று நாகரீகமாகக் குறிக்கின்ற பண்புடையவன். மக்கள் அவனை விரும்பினர். ஆனால் தன் பெரிய தந்தை மகன் மதுராந்தகன் பட்டத்திற்கு வரட்டும் என்று கூறி நாகரீகமாக விலகி இருந்தவன். மன்னனை மக்கள் விரும்பவேண்டும், அப்பொழுதுதான் நல்லாட்சி நடை பெறும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன். வாணிபத்திலும், கடல் போரிலும் சாதனைகள் செய்த பின்னரே இராஜேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கிடைத்தது. இன்று பெற்றோர்களின் பதவிகளை வைத்து உரிமை கேட்கும் பிள்ளைகளைப் பார்க்கின்றோம். உரிமை இருந்தும் கடமையைப் பெரிதாக மதித்த மாமன்னன். இந்தப் பண்பாடுகளை உலகம் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். கோயில்கள் மக்கள் கூடுமிடம். கலைகளை வளர்க்கும் இடம் மட்டுமல்ல, அரசின் செயல்பாட்டை வெளிப்படையாகக் கல்வெட்டுகளில் பதித்து, கோயில் ஓர் அரசு ஆவணப் பெட்டகமாகவும் ஆக்கிய பெருமை தமிழ் மன்னனுக்குரியது.

3800 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து கிடந்த இன்னொரு சான்று சமீபத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளது. தூத்துக்குடி அருகில் 74262 செப்பெடுகள், சான்றுகள் கிடைத்துள்ளன. மருத்துவம், சோதிடம், இலக்கியம், சரித்திரம் இவைகளைப் பற்றிய அரியத் தகவல்கள் உள்ள பெட்டகங்களாக இருக்கின்றன. அதே போன்று கடல் மல்லைக்கருகிலும் கடலுக்கு அடியில் கலையழகும், கட்டுமானச் சிறப்பும் சேர்ந்த அமைப்புகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மொழியில் மட்டுமல்ல, நாகரீகப் பண்பாட்டிலும் தமிழர்கள் முன்னோடிகளாக இருந்து வந்திருக்கின்றனர்.

திரு.ஐராவதம் அவர்கள் தன் ஐ.ஏ.எஸ் பதவியைத் துறந்து ஆராய்ச்சியில் இறங்கி பல உண்மைகளைக் கண்டு பிடித்துக் கொடுத்தமைக்குத் தமிழகம் நன்றியைச் செலுத்துகின்றது. மறைந்த சரித்திரப் பேராசிரியர் திரு இராசமாணிக்கனாரின் புதல்வரான டாக்டர். கலைக்கோவன் தன் தொழிலில் பணம் சேர்ப்பது பெரிதென்று எண்ணாமல் வரலாற்று உண்மைகளைத் தேடித்தேடி ஆராய்ச்சி செய்து வருகின்றார். பரத் சுந்தரராஜ் என்று ஒருவர். பெரும் பணக்காரரல்ல. அகழ்வாராய்ச்சியில் வல்லுனரும் அல்ல. வரலாறுப் பற்றில் பொருளுதவி செய்து வருகின்றார். திருவலங்சுழிக் கல்வெட்டுகளுக்கு வாயிருப்பின் இவர் தம் பங்கினைப் புகழ் பாடும். இவரின் கீழ் படித்த இளைஞர்கள் தங்கள் பணிகளுக்கிடையில் விரும்பிச் செயலாற்றுகின்றார்கள். அரசுத் துறையிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம் முன்னிருக்கும் தேவைக்கு இவைகள் போதாது. செய்திகளைச் சுமந்திருக்கும் சாசனங்கள் ஒன்றரை லட்சம் மைசூரில் பார்க்கப்படாமல் இருக்கின்றன. காலப்போக்கில் அழிந்து விடலாம்.

திரு முக்கூடல் என்ற ஊரில் 900 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் கல்லூரி இயங்கி வந்துள்ளது.  வெளியூர்களிலிருந்து மாணவர்கள் படிக்க வந்திருக்கின்றனர். உடல் நலம் பேண  ஓர் மருந்தகமும் உண்டு. இதே போன்று எண்ணாயிரம் என்ற  ஊரிலும் கல்வியைப் பற்றியும், கற்றுத் தரப்பட்டவைகளையும் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. எல்லாச் சான்றுகளும் சிதைந்து கிடக்கின்றன. கோயில்கள் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, வரலாற்றின் பெட்டகங்களுமாகும். அகழ்வாராய்ச்சித் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான திரு .சத்திய மூர்த்தி அவர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்று வல்லுனர்கள், வரலாற்றில் அக்கறை கொண்டவர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். வரலாற்றுச் சாசனங்கள் முதலில் பாதுகாக்கப் படவேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள். அழிந்து விடாமல் பாதுகாத்தால் முடிந்த பொழுது ஆராய்ச்சி செய்யலாம்.

கம்பன் இராமாயணம் எழுத முடிந்ததென்றால் அவனைப் பாதுகாத்த சடையப்ப வள்ளலுக்கும் பங்குண்டு.  சுயமாகச் செயலாற்றும் இவர்களுக்கு ஊக்கம் கொடுத்தல் வேண்டும். உலக அரங்கில் ஒரு சிலரே அறிந்திருக்கின்ற வரலாற்றைப் பலரும் அறியச் செய்ய வேண்டும். போர்களின் வெற்றி தோல்விகள் மட்டுமல்ல, கோயில்களின் கட்டுமானங்கள் மட்டுமல்ல, வரலாற்றுடன் இழைந்தோடும் மனித நேயம் முதற்கொண்டு பேசப்பட வேண்டும்.

நான் ஆராய்ச்சியாளரல்ல. ஆனால் வரலாறு ஓர் மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவள். வேர்களும், விழுதுகளும் தாங்கியுள்ள வரலாற்றைக் காப்பது எல்லோருடைய கடமையுமாகும். நமது பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரம் தெரிய விரும்புகின்றோம். முதலில் வரலாற்று உணமைகள் அழிந்து விடாமல் காப்போம். ஏற்பனவும் உண்டு. ஒதுக்க வேண்டியதும் உள்ளன. உலகில் தமிழனை உயர்த்திக் காட்டும் மதிப்பினை நம் வரலாறு பெற்றிருக்கின்றது.

மனிதனுக்கு வரலாறு ஓர் வழிகாட்டி.

சுந்தரசோழருக்கு மகனாய்ப் பிறந்து அருள்மொழிவர்மன் என்ற பெயர் தாங்கிப் பின்னர் அரசுபீடத்தில் உட்காரவும் இராசராசன் ஆகி அதற்குப் பின்னும் சிவ வழிபாட்டில் தோய்ந்து சிவபாதசேகரன் என்ற பெயருடன் வாழ்ந்து தமிழர் வரலாற்றை உச்சிக்குக் கொண்டு சென்ற மனித நேய மாமன்னருக்கு நாம் செலுத்தும் காணிக்கை உலக அரங்கில் பலரும் தமிழக வரலாற்றை அறியச் செய்வதே ஆகும். தமிழகத்தில் இப் பெரும் முயற்சியில் இறங்கியிருப்போர் சிலர். ஊர் கூடித் தேர் இழுப்பதைப் போன்று உலகெங்கினும் பரவியிருக்கும் தமிழினம் ஒன்று சேர்ந்து தமிழர் வரலாற்றைப் பலர் அறியச் செய்வோம். இன்னொரு வெளி நாட்டு ஆராய்ச்சியாளர் நமது மெத்தனததைச் சுட்டிக் காட்டி விடக் கூடாது. இருப்பதை காப்போம். நடந்ததைச் சொல்வோம். அன்று நம் தாத்தா எங்கெங்கோ சென்று தேடிக் கொண்டு வந்து சேர்த்ததல்லவா நமது தமிழ் இலக்கியங்கள்.

முயற்சியின் பயனை உணர்ந்தவர்கள் நாம். ஆராய்ச்சிப் பணிக்கும், சமூக சேவைக்கும் ஓய்வில்லை.

 தமிழ்த் தாய்க்கு நம் கடமைகளைச் செய்வோம். வரலாறு அழைக்கின்றது.

வாரீர்... நம் பழமை வரலாறு காப்போம், பழமை கொண்டு புதுமை படைப்போம்...

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.