........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-4

            வாழ்க்கையில் வெற்றி- அதிகப்பணம் சேர்ப்பதா?

                                                                                              -இராம. வயிரவன், சிங்கப்பூர்.

ஏழைக்குப் பணம் மகிழ்ச்சிதான். அதில் சந்தேகமில்லை.

தன்னிறைவுக்கு மேலே அதிகப் பணவரவு மகிழ்ச்சியா? என்பதுதான் இங்கே கேள்வி.

உடனே தன்னிறைவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கணம் வைத்துக் கொண்டு, எனக்குப் பத்து காரும், பத்து பங்களாவும் வந்தால்தான் தன்னிறைவு எனக் கொள்ளக்கூடாது. ஒருவர் உயிர் வாழக் குறைந்தபட்ச தேவைகள், அடிப்படை வசதிகள் இவற்றைத் தன்னிறைவு எனக்கொள்ளலாம்.

அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது.

ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது.

ஒருவர் கையில் ஏதுமில்லாது நடைப்பயணம் போனார். இடையிடையே தங்கி ஓய்வெடுத்துத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பயணம் நிம்மதியாக அமைந்து வந்தது. வழியில் அவருக்கு விலையுயர்ந்த வைரக்கல் ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அன்று இரவு முதல் அவருக்குத் தூக்கம் போனது. அவருடைய எண்ணம் அந்த வைரக்கல்லைப் பாதுகாப்பதைப் பற்றியே இருந்தது. இப்படித்தான் நம் வாழ்க்கைப் பயணமும்.

நாம் நம் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளைக் கணக்கிடுவதாக வைத்துக் கொள்வோம். எதையெல்லாம் கணக்கிடுவோம்? கார், பங்களா, வீடு, நிலம், தோட்டம், நகைகள், வங்கியில் சேமிப்பு எவ்வளவு? இப்படித்தானே?

பதிலாக நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், செய்துள்ள தர்ம காரியங்கள், பொதுநலப் பணிகள் என்னென்ன என்று கணக்கு எடுத்திருப்போமா?

நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பாய்ச்சல் குறையும், மகிழ்ச்சிக்கான மற்ற தேடல்களில் மனத்தைச் செலுத்த முடியும். ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது. காலில் வெண்ணீரை ஊற்றிக் கொண்டதைப் போல வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. பொருள் மீது பற்றுக்கொண்டு ஓடுகிற ஓட்டத்தில் திரவியத் தேடலில் நாமே வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நாமும் தொலைந்து போகிறோம்.

தேடும் போதே அனுபவிப்பதும், அனுபவிக்கும் போதே தேடுவதும் வாழ்க்கையில் சாத்தியப் படுத்திக் கொள்ள முடியுமா? வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்காலத்தை வாழச் சொல்லுகிறார்க்ள் உளவியலாளர்கள். நாம் அப்படியா வாழ்கிறோம்?

பெரும்பாலும் இறந்த காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்கியிருப்போம். அல்லது வருங்காலத்தைப் பற்றிப் பயந்து கொண்டு இருப்போம். அல்லது இரண்டுமற்ற ஒரு சூழலில் சிக்கியிருப்போம்.

பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களான உறவுகள், நண்பர்கள், கலை, பொதுப்பணி, சமூகச்சிந்தனை, புத்தகம், இலக்கியம், மொழி, கலாச்சாரம், இசை இவற்றோடு நம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்காக பொருள் தேடலை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல கருத்து. முக்கிய நோக்கம் அதுவாக இருப்பதுதான் தவறு.

ஓட்டத்தை நிறுத்தாமல் சீராக ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த ஓட்டம்தான் உழைப்பு. உழைப்பின் பயன் பணம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியமும்தான். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமும் முக்கியம்தானே? மன ஆரோக்கியத்துக்குத்தான் மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்.

ஒவ்வொரு நாளும் பிறக்கிற போது இந்த நாள் எனக்காகப் பிறந்திருக்கிறது என்ற நினைவோடு அந்த நாளை அனுபவித்து வாழ்வோம்.

___________

இராம.வயிரவன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.