........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-6 ஐந்தாவது தூண்
- இரா. பிரவீன்குமார்
(praver5@gmail.com)
“ஊழலற்ற ஆட்சி ” இது எல்லா அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக
ஒலிக்கும், தேர்தல் நேரத்தில் மட்டும். ஆனால், இந்த ஊழலுக்கு அவர்கள் மட்டுமா
உண்மையானவர்கள், அரசு அதிகாரிகளும்,பொதுமக்களும் தானே அதற்கு உடந்தையாக
இருக்கிறார்கள்.
தனக்கு ஒரு வேலை விரைவாக செயல்பட வேண்டும் என்பதற்காக
லஞ்சம் கொடுத்து ஊழலின் பாதைக்கு செப்பனிடுகிறோம். இந்த பாதையானது நம்மை 70-வது
இடத்திற்கு உயர்த்தியுள்ளது. ஆம், ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 70-வது
இடத்தில் உள்ளது.
இந்த தன்னார்வ அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர் திரு.விஜய்
ஆனந்த். ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ எனும் ஆயுதத்தை ஏந்தியுள்ளனர்
இவ்வியக்கத்தினர். இச்சட்டத்தின் வழி அரசுத்துறையின் அனைத்துச் செயல் பாடுகள்
குறித்த தகவல்களையும் பொதுமக்கள் பெற முடியும் எனவும், தேசிய வளர்ச்சிக்காக
இயங்கும் ஒவ்வொரு தன்னார்வ அமைப்புகளும் ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண்கள் தான்
என்கிறார் திரு.விஜய் ஆனந்த் அவர்கள். இச்சட்டத்தைக் குறித்து பொதுமக்களிடையே
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே முதன்மைப் பணியாகச் செய்து வருகிறது இந்த
ஐந்தாவது தூண்.
எந்த ஒரு கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லையேல், இந்திய
சட்டப்பிரிவு 49(ஒ) மூலம் நமது வாக்கை ஒருவருக்கும் இல்லை என்று பதிவுச் செய்து,
நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கலாம். எழுத்தாளர் திரு.ஞானி அவர்களின் “ஓ போடு”
கட்டுரையின் வழி இச்சட்டப்பிரிவின் மேல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாற்றம் அதிகாரிகளிடம் இருந்து தொடங்கினால் நல்ல பலனை
விரைவில் காணலாம். அதேசமயம் தனிமனித ஒழுக்கம் என்பதும் நிச்சயம் கடைப்பிடிக்க
வேண்டும், தவிர்க்க இயலாத நேரத்தில் கையூட்டு கொடுக்கும் பட்சத்தில், அந்தக்
கையூட்டை வாங்கியவர் பற்றிய தகவலை துறை சார்ந்த அதிகாரியிடமோ, அல்லது ஐந்தாவது
தூண் போன்ற தன்னார்வ அமைப்புகளிடமோ, தகவல் கொடுத்து, நமக்கு அடுத்து
வருபவர்களுக்காவது நல்ல சூழலை ஏற்படுத்தலாம். இது ஓய்வு பெற்ற தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் ஒருவரின் கருத்து. நிச்சயம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்
சிந்தனை.
உதாரணத்திற்கு, தற்போதைய சூழலில் அரசு மருத்துவமனையில்
அவசரப்பிரிவிற்கு வரும் ஒரு நோயாளியை காப்பாற்ற கையூட்டு கொடுக்கும் சூழலில்,
கையூட்டை வாங்கியவர் பற்றிய தகவலை உரிய இடத்தில் தெரிவித்து, அடுத்து வரும்
நோயாளிகளுக்கு உதவலாம்.
ஐந்தாவது தூணின் இனையமுகவரி :
www.5thpillar.org
இடைக்காலத்தில் முட்செடியாக இருந்த ஊழலும், லஞ்சமும் தற்பொழுது கருவேல
மரமாகியுள்ளது. அந்த மரத்தை அழிக்க ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்’ எனும்
கோடாரியை ஏந்தியுள்ள ஐந்தாவது தூணும், “நம்பு தம்பி நம்மால் முடியும்” எனும்
மாத இதழை ஏந்தியுள்ள மக்கள் சக்தி இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகளின் மூலம்
நாடு நல்வழியை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. |