........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-9

            இந்தத் தமிழ் இனியும் வளரும்.... 

                                                                                              - இமாம். கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்!

இந்திய மாநிலங்களில் இரண்டின் அதிகாரப் பூர்வ ஆட்சிமொழி!. இந்திய எல்லையைத் தாண்டி, கடல் கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் எனப் பல்வேறு நாடுகளிலும் அந்நாடுகளின் தேசிய மொழியாய் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இந்திய மொழி!

கால மாற்றங்கள், சமய மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள் என ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எத்தனையோ மாற்றங்கள் வந்த போதும், காலச் சூழலுக்கேற்ப ஈடு கொடுத்து இன்றைக்கும் உலகம் முழுக்க பத்துக் கோடிக்கும் மிகையானவர்களால் உச்சரிக்கப்பட்டு பன்னாட்டு மொழியாய் நீடூழி, நிலைத்து உலா வந்து கொண்டிருக்கும் உன்னத மொழி 'தமிழ்' என எத்தனையெத்தனை அடைமொழி கொடுத்தாலும் குறைவே!

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற சிறந்த மொழிக்குச் சொந்தக்காரகள் நாம் என எண்ணும் போது மகாகவி பாரதியின் " செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!" என்னும் பாடலின் வரிகள் நம் செவிகளில் ரீங்காரமிடுவதை நம்மால் உணராமல் இருக்க முடியாது.

உலகத்திலேயே மிகையாய்த் தமிழர்கள் வாழும் தமிழகத்தின் ஆரம்பக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியில் கல்வி போதித்திடல் வேண்டும் எனத் தமிழக அரசு சட்டம் இயற்றியதை எதிர்த்துத் தமிழர்களே நீதிமன்றம் சென்று தடை வாங்கி வழக்கு நிலுவையிலிருக்கும் அதிசயம் உலகின் வேறெந்த நாட்டிலும் நம்மால் காண முடியாது.

தமிழகத்தில் பிறந்து, தமிழகத்திலேயே வளர்ந்து, படித்து ஆளாகிவிட்ட நிலையில் ஆங்கிலம் பேசுவதே உயர்வு, ஆங்கிலம் பேசுவதே நாகரிகம் என்னும் தாழ்வு மனப்பான்மை மனநோயால் பீடிக்கப்பட்டுத் தங்களின் சுயம் இழக்கும் நிலையில் கோடிக்கணக்கான தமிழர்கள் இன்றைக்கும் பெரும்பான்மையாய் இருப்பதைக் கண்டு நம் இதயம் விம்முகிறது, விழிகள் அருவிகளாகின்றன, வேதனை நம்மை வாட்டுகின்றது.

அகிலமே வியக்கும் வண்ணம் இன்றையக் கணினியுகத்தில் நம்நாடு அறிவியல் முன்னேற்றம் கண்டு சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் தாய்மொழி தமிழை மறக்காமல் தமிழில் பல்வேறு எழுத்துருக்களையும், மென் பொருட்களையும் உருவாக்கி காலச் சூழலுக்கேற்ப தமிழை உயர்த்திச் சேவை செய்து வரும் தமிழர்கள் எட்டுத் திக்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது பெருமையால் நம் உள்ளம் பூரிக்கின்றது, புளகாங்கிதம் கொள்கின்றது.

திரவியம் தேடி திசையெட்டுச் சென்றிட்டாலும், தாயகத்தையும் தாய் மொழியையும் மறவாது தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்யும் தமிழ் வேட்கை மிக்கவர்கள் எத்திசையிலிருந்தாலும், அவர்களைப் போற்றிட, வாழ்த்திட உள்ளம் துடிக்கின்றது, மெய் சிலிர்க்கின்றது, பேருவகை பூரித்தெழுகின்றது. இனிய தமிழ் இனி வையம் உள்ள மட்டும் இனிதே வாழும் என்னும் நம்பிக்கை ஒளிர்கின்றது.

இந்த இனிமைத் தமிழ் இனியும் வளரும்....வாழும்....

_____________

 இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.