........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உபதேச மொழிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேச மொழிகள்

இறைவன் ஒருவனே.

குயவன் வேலை செய்யுமிடத்தில் குடம், ஜாடி, தட்டு, சட்டி, பானை போன்ற வெவ்வேறு உருவங்கள் கொண்ட பாத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே களி மண்ணினால்தான் செய்யப்பட்டவை. அதைப்போல இறைவன் ஒருவனே. ஆனால் அவன் வெவ்வேறு நாம ரூபங்கள் மூலமாக ஆராதிக்கப்படுகிறான்.

பக்தனைத் துன்புறுத்தாது

 பூனையானது தனது குட்டிகளைப் பற்களால் பிடிக்கும்போது அக்குட்டிக்குத் தீங்கு உண்டாவதில்லை. ஆனால் அது ஓர் எலியை அப்படிப் பிடிக்குமானால் அவ்வெலி உடனே இறக்கின்றது. இதைப் போலவே மாயையானது மற்றவர்களை வருத்துவதாயினும் பக்தனை ஒருபோதும் துன்புறுத்தாது.

உருவ ஆராதனை

வீடு கட்டும் போது சாரம் அவசியம். வீடு கட்டி முடித்த பின்னர் சாரத்தைத் தேடுபவர் யாரும் இல்லை. அதைப்போல ஆரம்ப காலத்தில் உருவ ஆராதனை அவசியம். இறையானந்தம் அடைந்த பிறகு அவை அவசியமில்லை.

பக்தி ருசி

தேனியானது பூவின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல் இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் செய்து கொண்டு பூவைச் சுற்றி வரும். பூவிற்குள் நுழைந்து விட்டால் சப்தமின்றித் தேனைக் குடிக்கிறது. அதுபோல, சித்தாந்தங்கள் பற்றி ஒருவன் சண்டையிடும் வரையில் பக்தியை உணர மாட்டான். ஆனால் பக்தியை ருசி கண்ட மாத்திரத்தில் அமைதியாகி விடுவான்.

தெய்வீக ஒளி

சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் விழுகிறது. ஆனால் தண்ணீர், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவை போன்ற பொருட்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதைப்போல தெய்வீக ஒளியானது எல்லோரிடத்திலும் சமமாகவும் பாரபட்சமின்றி வந்தபோதும் , நல்லோருடைய தூய மனமும் , சாதுக்களுடைய இதயமுமே அவ்வொளியைப் பிரதிபலிக்கச் செய்கின்றன.

இறைவன்

எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது. அதுபோல, இறைவன் இன்றி மனிதனால் வாழ முடியாது. பந்தப்பட்ட ஆத்மாவே மனிதன். மாயையெனும் சங்கிலியால் கட்டுப்படாத ஆத்மாவே இறைவனாம்.

கர்மம் ஒரு மார்க்கம்

கர்மம் செய்வது வாழ்க்கையின் முடிவன்று. அது மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படும் கர்மங்கள் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றது. மார்க்கத்தை முடிவென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் மார்க்கம் ஊராகி விடாது என்பதை ஞாபகத்தில் வை. கர்மம் செய்தல் மனித வாழ்வின் இலட்சியம் அல்ல.

பிரார்த்தனையும் தவமும்

"பித்தளைப் பாத்திரத்தைத் தினந்தோறம் தேய்க்காமல் போனால் களிம்பு ஏறிவிடும். அதைப்போல தினமும் தேவதா உபாசனை செய்யும் மனம் மாசடையும்" என்று தோதாபுரி சொல்வதுண்டு. ஆனால் அப்பாத்திரம் பொற்பாத்திரமாக இருந்தால், தினமும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இறைவனை அடைந்த மனிதனுக்குப் பிரார்த்தனையும் தவமும் வேண்டியதில்லை.

சந்நியாசி

நாளை உணவிற்கு என்ன செய்வோம், உடுத்துவதற்கு யாது செய்வோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சந்நியாசி. உயர்ந்த மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு, உயிரையோ, உடலையோ காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் பிடியை விட்டுவிட்டுக் கீழே விழுகின்றவனைப் போல சந்நியாசி இருக்க வேண்டும்.

உலக மாயையில் ஈடுபட்டவர்கள்

முட்களைத் தின்று வாயிலிருந்து இரத்தம் சொரிந்தாலும் ஒட்டகம் அம்முட்களையே மகிழ்வுடன் உண்ணும். அதைப்போல இவ்வுலக மாயையில் ஈடுபட்டவர்கள் என்ன துன்பங்கள் ஏற்பட்டாலும் அதிலேயே உழல்வார்கள். அதிக துன்பத்தை அளிக்கக் கூடிய துயரம் ஒன்று நேரிட்டாலும் வெகுவிரைவில் அதனை மறந்து விட்டு, அத்தகைய ஒன்றும் நேராதது போலக் களிப்புடன் வாழ்கின்றனர்.

இறைதரிசனம்

மேகம் சூரியனை மறைப்பது போல், மாயை இறைவனை மறைக்கிறது. மேகமான மாயை அகன்றதும் இறைதரிசனம் கிடைக்கிறது. உண்மையில் மாயைதான் பிரம்மத்தைக் காணச் செய்கின்றது. மாயையில்லாவிட்டால் பிரம்மத்தை யாரால் அறிந்திருக்க முடியும்? இறைவனின் சக்தியை அறிந்து கொள்ளாமல் போனால் அவனை அறியவே முடியாது.

நீ வெற்றி பெறுவாய்.

கிராமங்களில் எருது வாங்கப் போகும் உழவர்கள் எருது சுறுசுறுப்பாக இருக்கிறதா என்று பார்க்க அதன் வாலைத் தொடுவார்கள். மந்தப் புத்தியுள்ள எருதுகள் தொட்டவுடனேயே படுத்துக் கொள்ளும். ஆனால் சுறுசுறுப்புள்ள எருதுகள் தொட்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து ஓடும். ஆகையால் மந்தப்புத்தி விரும்பத்தக்கதன்று. மனோபலமும் உறுதியான நம்பிக்கையும் பெற்று இக்கணத்திலேயே இறைவனைக் காண்பேன் என்று கூறுவாயாக. அப்போது உன் முயற்சியில் நீ வெற்றி பெறுவாய்.

பின் தொடராதது

தங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், கீர்த்தி, கௌரவம் இவைகளைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்பவர்கள் சிலர் இருக்கின்றார்கள். இவைகள் எல்லாம் சில நாட்களுக்கு மட்டுமே. இறந்த பிறகு இவை ஒன்று கூட அவர்களைப் பின் தொடர்வதில்லை.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.