........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

a

பொன்மொழிகள்

நீ குழந்தையென மாறு!

அன்பே குழந்தையின் இயல்பு. இதுவே யதார்த்தம். குழந்தையின் அன்பு தூய்மையான அன்பு.

ஆனால், குழந்தை வளர வளர, உலகியலின் பாதிப்பினால், அதன் அன்பு மாறுபடுகிறது. வேறுபடுகிறது. திரிபு அடைகிறது. இருப்பினும், வளர்ந்த மனிதனிடத்தே குழந்தை அன்பு உள்ளுர இருக்கத்தான் செய்கிறது. அது அழிவற்றது. மாயைத் திரை விலக, மனிதனிடத்தே உள்ளுரப் புதைந்து கிடக்கும் குழந்தை அன்பு மீண்டும் மலரும்.

எனவே தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.

மனிதன் குழந்தையென மாறித் தனது அன்பை இறைவனிடத்து செலுத்த வேண்டும். இறைவனைப் பால் நினைந்தூட்டும் தாயெனத் துதித்து அன்பு செய்ய வேண்டும். அப்பொழுது அவன் பெருமகிழச்சியில், பேரானந்தத்தில் திளைப்பான்.

எனவே தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.

ஒத்த பொருள்கள் தான் இரண்டறக் கலக்க முடியும். நெருப்பு நெருப்புடன்தான் இணையும். இரண்டறக் கலக்கும். நெருப்பு சமுத்திரத்தில் இணையாது. அதே போல், இறைவன் அன்பு வடிவானவன் என்பதை உணர்ந்து, நாம் இறைவனே என்று உணர்ந்து, நாம் அன்பின் வடிவங்கள் என்று தெளிவு பெற்று, அந்த குழந்தையின் தூய அன்பில் நாம் அமிழ்ந்து போகலாம். பேரன்பு வடிவினனான இறைவனோடு நாம் இரண்டறக் கலக்கலாம்.

எனவே தான் மனிதா நீ குழந்தையென மாறு.

மனிதனின் இயல்பு அன்பே. வெறுப்பு செயற்கையானது. மனிதன் தன் இயல்பான அன்பில் வாழ்தல் வேண்டும். அன்பே இறைவனை அடைவதற்குரிய நெடுஞ்சாலையாகும். இறைவனே அன்பு. அன்பே இறைவன். தன்னை அறியும் போது, தான் அன்பின் வடிவம் என்று உணரும் போது, அந்தத் தூய அன்பில் மனிதன் இறைவனோடு இரண்டறக் கலக்கலாம்.

எனவெ தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.

இறைவன் பால் மனிதன் தனது தூய அன்பை முழுமையாகச் செலுத்த வேண்டுமென்பது குடும்பத்தின் பால் அவன் காட்டும் அன்பு மறுக்கப்படுகிறது என்பதல்ல. பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், ஆகியோரிடத்து அவன் காட்டும் அன்பு அற்றுப் போகும் என்பதல்ல. மாறாக, மனிதன் இறைவன்பால் தனது அன்பைச் சொரியச் சொரிய, அவன் தன் உற்றார் உறவினர் இடத்துக் காட்டும் அன்பு மேலும் இறுக்கம் அடைகிறது.

இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வாடிய மரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மரத்தின் கிளைக்கு நாம் தண்ணீர் ஊற்றினால், அது தழைக்காது. மாறாக, ஒரு தோட்டக்காரன் தண்ணீரை அம்மரத்தின் அடியில் அதன் வேருக்குப் பாய்ச்சப் பாய்ச்ச, அந்நீரை அம்மரம் கடத்திக் கிளைகளை ஓச்சும். இலைகள் துளிர்க்கும். அம்மரம் பூக்கும். காய்க்கும். கனிகளை நல்கும்.

அதே போன்று மனிதன் இறைவனிடத்து அன்பைச் சொரியச் சொரிய, பெற்றோர், சகோதரர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரிடத்து மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்தும் அவ்வன்பு விரிந்து செல்லும; இந்தத் தூய அன்பு குழந்தையின் அன்புக்கு நிகரானது.

எனவே தான் மனிதா நீ குழந்தையென மாறு.

மனிதன் ஒரு குழந்தை போன்று தனது அன்பைக் கருணாசாகரனான இறைவனிடத்துப் பொழிந்து, தாயாக வழிபட, அவன் பேரின்பத்தைத் துய்க்கலாம்.

எனவே, மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.

-சாய்பாபா

தொகுப்பு: தாமரைச்செல்வி.

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.