........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

பரமாச்சார்யார் அருள்மொழிகள்

சமநிலை

நமக்கு சம்பந்தப்பட்டவைகளையும் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், நாம் மகிழ்ச்சியாலோ, துக்கத்தினாலோ பாதிக்கப்படாமல் மனதில் சம நிலையை அடைய முடியும்.

தருமம்

தருமம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தரும வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தருமத்திற்கும் ஆதாரம்.

பண்பாடு

பண்பாடுடைய ஒருவன் உலகத்துக்கே உறவினனாகிறான். அவன் எல்லோருக்கும் நண்பன். ஒருவருக்கும் எதிரி அல்ல. அவனுக்கு மூவுலகம் தாய் நாடாகும். தன்னலமற்ற சேவை உணர்வு, தியாகம் செய்வதற்குத் தயாராக இருப்பது, கடவுளிடம் பக்தி, எல்லோரிடமும் அன்பு, நல்லெண்ணம் இவைகள் மேன்மையடைந்த மனதில் தோன்றுபவை, இதற்குப் பண்பாடு என்று பெயர். சங்கீதம், சித்திரக்கலை போன்றவை அப்பண்பாட்டின் வெளித்தோற்றங்கள்.

வழிபாட்டின் தத்துவம்

பலவிதமான வழிபாட்டு முறைகளிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடம் என்னவென்றால், நம்முடைய க்ஷேமத்தின் பொறுப்பைக் கடவுளிடம் விட்டுவிட்டு நம்முடைய கடமையை நாம் செய்யவேண்டும். இது செயலின்மைக்கோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதற்கோ ஆன தத்துவம் அல்ல. நம்முடைய பணிகளை கடவுளுக்கு அர்ப்பணம் செய்து செயல்படுத்துவதற்கான தத்துவம்.

வருத்தமில்லா மரணம்

பழுக்காத ஒரு மாங்காயைப் பறித்தால் அதிலிருந்தும், அதன் காம்பிலிருந்தும் (பிரிவால் கண்ணீர் விடுவதுபோல்) பால் சுரக்கிறது. அது பழுத்துவிட்டால் தானே காம்பிலிருந்து பிரிந்து விழுந்து விடுகிறது. (பால் சுரப்பதில்லை). அதுபோல் மரணம் நம்மை அழைக்கும் போது வருத்தமின்றி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒழுக்கக் கட்டுப்பாடு

ன்மிக விஷயங்களில் உள்ள கட்டுப்பாடு இராணுவத்திலுள்ள கட்டுப்பாட்டை விடக் கடுமையானது. வாழ்க்கையின் குறிக்கோளை நாம் அடைய வேண்டும் என்றால் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறிருந்தால் நாம் யாரிடமும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய வாழ்க்கைத் தூய்மை உலகோரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும்.

வித்தியாசம் எங்கே?

கடவுள் பக்தி, உண்மை பேசுதல் பிறருக்கு உதவி செய்வது போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் மதங்களுக்கிடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அந்தந்த மதத்தலைவர்களின் அனுபவத்தில் பிறந்த சில கொள்கைகளிலும் ஆசாரங்களிலும் முக்கியமாக மதங்களுக்கிடையே வேறுபாடு உள்ளது.

நிறைவில்லாத வாழ்க்கை

இப்போது யாருக்குமே நிறைவு இல்லை. சமூக வாழ்கையிலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும்! எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் விரோதம் ஏற்படுகிறது.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு என்று ருசியாகத் திங்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிறவைகளைப் பார்ப்பதிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும். வாழ்க்கைத் தொல்லைகளிடையே சிறிது உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தவறா என்று கேட்கலாம். நான் சொல்கிறேன் பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்பது தெரியும்.

சத்தியம்

சத்தியத்தில் ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அவனுக்கு அதனால் தன்னையும் அறியாமலே ஒரு பிரயோஜனம் உண்டு. ஒருவன் சத்தியமே பேசிப் பழகிவிட்டால் முடிவில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகி விடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான். ஆனால், அறியாமையாவோ, தவறுதலாகவோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லிவிட்டாலும், அந்த தப்பே நடை முறையில் சத்தியமாக நடந்துவிடும்.

மதமாற்றம் தேவையா?

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்கின்றன. ஒருவரேயான அக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

வாழ்க்கை கஷ்டம்

உலக வாழ்க்கையில் எல்லோருக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் உள்ளவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களைக் கேட்டால் தெரியும். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று நாம் திண்ணையில் இருக்கிறோம், விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு போய்விடும். அவர்கள் மேல்- மாடியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். பிராணனுக்கே ஆபத்து வரலாம்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு