வாழ்வில் நீங்கள் பிறப்பைக்
கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது. அதைப்போல் வாழ்வைக்
கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் இறப்பைக்
கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. அது எப்போது
வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?
''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான
தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை. அப்போது நான் என்ற உணர்வு
கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான்
இறப்பேன்,'' என்று எண்ணுங்கள்.
மென்சியஸ் என்னும் சீடன் தன குருவான கன்பூசியசிடம், 'இறந்த பிறகு என்ன நடக்கும்?'
என்று கேட்டான். அதற்கு அவர், ''இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ
கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது
ஏன் நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?'' என்றார்.
பேராசை கொள்ளும்படி நீங்கள்
கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது ஒரு போதும் எந்த
இன்பத்தையும் தராது. அது வன்முறையானது. அழிவு பயப்பது. புத்திசாலி மனிதன் பேராசை
கொள்வதில்லை. மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி
அவர் சாதாரணமாக வாழ்கிறார். ஒவ்வொருவருக்கும் தனிச்
சிறப்பு உண்டு என்பதை அவர் அறிவார். அவர் ஒரு போதும்
பிறருடன் ஒப்பிடுவதேயில்லை. ஒருபோதும் தன்னை மேல் என்றோ,
கீழ் என்றோ அவர் எண்ணுவதில்லை. அவர் ஒருபோதும்
உயர்வு மனப்பான்மையாலோ, தாழ்வு மனப்பான்மையாலோ
துன்புறுவதில்லை. ரோஜாவை தாமரையுடன் எப்படி
ஒப்பிட முடியும்? எல்லா ஒப்பீடுகளின் துவக்கமுமே
தவறாக உள்ளன. ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு
கொண்டிருக்கிறார். இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.
அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன? உன்னை
விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே பேராசையின் பொருள். மற்றவர்களை விட
நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும். இதற்காக
நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?
நீங்கள் உண்மையைவிடக்
கற்பனையில் மிகுந்த விருப்பம் காட்டுகிறீர்கள். உண்மையைவிடப் பொய் மிக
உண்மையாகத் தெரிகிறது. கற்பனை பலவகையில் உங்களுக்கு
திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கற்பனை உங்கள்
அகங்காரத்திற்கு திருப்தி அளிக்கிறது. ஒரு குரு இறந்த
பின் அவருக்கு பல சீடர்கள் உருவாகிறார்கள். (உதாரணம்:புத்தர்,
இயேசு..) அவர் இறந்த பின் நீங்கள் அவரைப்பற்றி நிறைய
கற்பனை செய்கிறீர்கள். உங்கள் விருப்பம் போல அவரை
வரைந்து கொள்கிறீர்கள். அவர் உயிரோடு உங்கள்
அருகிலிருந்தால், அவர் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதராகவே
தெரிவார்.
முட்டாள்தனமானவர்கள் மிகவும்
கீழ்ப்படிதல் உள்ளவர்கள். எதையும் எதிர்க்க மாட்டார்கள்.
ஜடமாகத் திரிவார்கள். வாழ்வின் சிறப்பை வாழ்ந்து
பார்க்க முயற்சிக்க மாட்டார்கள். அவர்களிடம் தீவிரம்
இருப்பதில்லை. இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும்
என்று தான் விரும்புகிறது.
எதையும்
உனக்குத் தேவை என்று ஆசைப்படும் முன் மும்முறை
நினைத்துப்பார். உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99%
தேவையற்றதாகவே இருக்கும். அவை உன்னைப் பிடித்து ஆட்டிக்
கொண்டிருக்கின்றன. உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ
தருவதில்லை.
வாழ்க்கை ஒரு புதிர்.
ஏன் என்பதில்லை. குறிக்கோள் என்பது இல்லை காரணம்
ஏதும் இல்லை. அது அப்படியே இருக்கிறது.
எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு. அது அங்கே
இருக்கத்தான் செய்யும். ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?
நடனமாடலாமே? பாடலாமே?
அன்பு காட்டலாமே? தியானம் செய்யலாமே?
வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?
ஒரு குழந்தை நாள் முழுக்கக்
கீழே விழுந்தாலும், இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே
விழுந்ததைப் பற்றியே நினைக்காது.
ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால், உங்களை
மருத்துவ மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்? ஒரு குழந்தை கீழே விழும்
போது அது இயல்பாக விழுகிறது. விழுதலில் இருந்து
சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை. அது அதன்
போக்கிலேயே விழுகிறது. புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை.
ஒரு தலையணை எப்படி வெறுமே தரையில் விழுமோ,
அப்படியே அது விழுகிறது. ஆனால்,நீங்கள் விழும்போது
ஆரம்பத்திலேயே எதிர்க்கிறீர்கள். உங்களுடைய எல்லா
தசைகளும், ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம்
அடைகின்றன. இப்படி இறுக்கமான தசைகள்,
நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது விரும்பத்தாகாத பல
உடைவுகள் உங்கள் உடலில் ஏற்படுகின்றன.
அதேபோல், ஒரு குடிகாரன்
கீழே விழும் போது பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப்
போராட்டமும் இல்லாமல், முழுமையாக விழுவான். அவனுக்கும்
ஒன்றும் ஆகியிருக்காது. முக்கியமாக,அவன் போராடும் மன
நிலையில் இல்லை. இதுதான் காரணம்.
காலையில், அவன் மிக இயல்பாக,
சாதாரணமாக எழுந்து நடப்பான். அவன் உடலில் உடைவோ
வலியோ இருக்காது.
எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த
அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம்
அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை, அழகு,உங்கள்
பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
பொதுவாக மனிதர்கள் கோபம்,
வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,
அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.
ஏதாவது சிறு காரணம் போதும். அவை
வெளிப்பட்டுவிடும்.
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும்
ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே விரும்புவான்.
ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும்
ஆசைப் படுவான். அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில்
உண்மை அல்லது நன்மை இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது.
இங்கு எது முக்கியம் எனில், அப்படி எடுத்து
சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஏனெனில்
அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள், என்று
தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான். பல பேர் அவனை
அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
ஒரு மனிதர் சாவைக் கண்டு
அஞ்சாதபோது, அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி
வற்புறுத்த முடியாது. உங்களுடைய
அச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது. உண்மையில்,
நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற
அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள்.
ஒருவர் தைரியமாக இருந்தால் யாரையும்
அச்சப்படுத்தவோ, மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ
மாட்டார்கள்.
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த
அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள். அதை ஒரு
சிரிப்பாகவும், நடனமாகவும் இருக்க விடுங்கள்.
அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.
ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும். அது
செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.