........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-10

பக்கம்- 152     விலை-ரூ 70.00

 

ஆரோக்கிய உணவு

-பூங்குழலி பழனிகுமார்-

 கிழக்கு பதிப்பகம்
- நலம் வெளியீடு -
(Nalam , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.

 

பார்வை :

எளிமைப் படுத்தப்படாத எதுவுமே, உலகில் நீண்ட காலம் வேரூன்ற முடியாது. மூடி மறைக்கப்படும் எல்லா விஷயங்களும், மண்ணோடு மக்கிப் போகும் என்பது வரலாறு. இது உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் பொருந்தும். குறிப்பாக மருத்துவத்திற்குச் சரியாகப் பொருந்தும்.

உலக மக்களிடையே மிக அதிகமாகப் புழங்கும் மருத்துவம் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம். ஆனால் அதன் உள் விபரங்கள் எப்போதும் மறைபொருளாகவே இருந்து வந்திருக்கிறது. அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்தாலும், அதன் வளர்ச்சியும், ஆயுளும் மருத்துவத்தின் எளிமைப்படுத்துதலில்தான் இருக்கிறது. மருத்துவம் என்பது எளிமையானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் மாற்று மருத்துவ ஆய்வாளரான டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர்.

எளிமைப்படுத்துதலின் தொடர்நிகழ்வாக "ஆரோக்கிய உணவு" நூல் ஆரோக்கிய நூல்களை வெளியிட்டு வரும் கிழக்குப் பதிப்பகத்தின் நலம் வெளியீடு மூலம் வெளிவந்திருக்கிறது. நம் உடல், நாம் வாழும் பூமி, காற்று, பிரபஞ்சம்... என்ற எல்லா விஷயங்களையும் விட நாம் தெரிந்து, தெளிய வேண்டிய ஒரே ஒரு பொருள் உண்டென்றால் அது "உணவு"தான்.

ஏனெனில் உணவுதான் உலகத்தின் ஆரோக்கியம். தொன்மையான மருத்துவங்கள் அனைத்துமே உணவை மருந்தாகவே குறிப்பிடுகின்றன. அதே உணவுதான் முறையற்றதாகும் போது நோயாகவும் மாறுகிறது. நாம், நோய் வந்த பின்பு மருந்துகளைப் பற்றி யோசிப்பதை விட, ஆரோக்கியமாக இருக்கும் போதே நம்முடைய உணவுகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதே நோயின்றி வாழ ஒரே வழி.

உணவைப் பற்றி பல வகையான நூல்கள் வந்திருக்கின்றன. இந்த ஆரோக்கிய உணவு நூலின் சிறப்பம்சமே, கடினமான விபரங்களைக்கூட எளிமையாக விளக்கும் நூலாசிரியர் பூங்குழலி பழனிக்குமாரின் நடைதான். அனைவருக்கும் புரியும் இந்த எளிமை பிற நூல்களிலிருந்து இதை தனித்துக் காட்டுகிறது. மேலும் பல நூல்களில் தேட வேண்டிய அரிய செய்திகளைத் தன் அனுபவங்களோடு சேர்த்து வழங்கியிருப்பது எளிமையிலும் அருமை.

உணவிற்கு மாற்றாக பல்வேறு ரசாயணங்களை முன் வைக்கிற இந்த நவீன காலத்தில், நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலுள்ள சத்துச் சேர்க்கையைத் தெளிவாக விளக்கியுள்ளார். "நம் தினசரி உணவுகளின் பட்டியலை அதன் சத்து சேர்மானத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தினாலே போதும், ஆரோக்கியம் உங்கள் கையில்" என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த நூலில் எந்த ஒரு ரசாயணமும் பரிந்துரைக்கப் படவில்லை என்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.

உண்ணும் உணவையே மருந்தாகப் பயன்படுத்தும் வித்தையைக் கற்றுத் தரும் இந்நூலின் உள்ளடக்கமே உணவைப் பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது. இந்நூலின் பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் உணவு மாற்று முறை, சக்தி போன்ற அட்டவணை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இந்த ஆரோக்கிய உணவை வாசிப்பதோடு நின்று விடாமல், நம் வீட்டில் ஆரோக்கிய உணவை வழக்கமாக்கிக் கொண்டால் நமக்கு எந்த நோய்களுமில்லை, மருந்துகளுமில்லை என்கிற நிலையை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு- அருந்தியது

அற்றது போற்றி உணின்           – திருக்குறள்.
 

-டாக்டர். அ. உமர் பாரூக்.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.