........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-9

பக்கம்- 160     விலை-ரூ 70.00

 

உங்கள் மாமியாரைச் சமாளிப்பது எப்படி?

-தமிழ் சுஜாதா-

 கிழக்கு பதிப்பகம்
(Kizhakku , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.

 

பார்வை :

கிழக்குப் பதிப்பகத்தின் "உங்கள் மாமியாரைச் சமாளிப்பது எப்படி?" என்கிற இந்தப் புத்தகத் தலைப்புக்காகவே தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இப்புத்தகம் இடம்பெறக் கூடும்.

தென்றலாய் தழுவும், தாலாட்டும் காற்றை வகைப்படுத்தி விட முடியுமா? எத்தனை வகைகளுக்குள் நாம் அடைத்தாலும், காற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அனுபவமாவது எப்படி இயல்பானதோ அதுபோலவே மாமியாரைப் பற்றிய வகைப்படுத்தலும். அதற்கான சமாளிப்பு யோசனைகளும் அனைவருக்கும் பொருந்துமா? என்பதை ஒவ்வொரு பெண்ணும் பரிசோதித்துப் பார்த்துச் சொல்ல வேண்டிய விஷயம்.

ஒவவொருவரும் ஒவ்வொரு விதம் என்பதும், ஒவ்வொருவரின் முகவேறுபாடு போலவே நுணுக்கமானதும் கூட. பல இலக்கணங்களும், இலக்கண உரைகளும் எழுதப்பட்ட பின்பும் பிதுங்கி, நுரைத்துப் பொங்கி பரவசம் கொண்டு தரும் தமிழைப் போல, எதற்குள்ளும் அடங்காத மனசை மாற்றுவதற்கான யோசனைகளுமே, ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதாகவே இருக்க வேண்டும்.

ஆயிரம் புத்தகங்கள் வந்தாலும் உடன்படிக்கைகள் வந்தாலும் தீராத ஒரு பிரச்சனையை, சில சிறுகதைகளைத் தொகுத்தது போல எளிய நடைக்காகவும் விறுவிறுப்பிற்காகவும் பலமுறை வாசிக்கலாம். பல பதிப்புகளைக் காணலாம்.

இதே தலைப்பில் இன்னும் பல நூறு புத்தகங்கள் எழுதலாம். ஆனாலும் ஒரே புத்தகத்திலேயே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட விஷயங்களாகவே பல பக்கங்களில் சலிப்புத் தோன்றுகிறது.

எப்பேர்ப்பட்ட எதிரியும் பகையாளியுமானவர்களே கூட, புகழ்தல், பரிசுப்பொருள் தருதல், டூர் போவது, ஆசைகளைத் தேடித் தேடி நிறைவு செய்தல், ஓயாமல் பணிவிடைகள் செய்தல் என்கிற ஆலோசனைகள் பொருந்தும். ஆனால் மாமியார்-மருமகள் பிரச்சனைக்கு நூறு சதம் பொருந்துமா என்பது கேள்விக்குறியே. இவற்றைப் பின்பற்றி வாழ்வில் அமைதி பெறப்போகும் பெண்களுக்கு வாழ்த்துக்கள். பெண்களில் பொருளாதார வசதியுடைய சிறுபான்மையினருக்கு மட்டுமான புத்தகமாகவே இது தோன்றுகிறது. இந்த ஆலோசனைகளுக்குத் தேவையான "வசதி" எவ்வளவு பேருக்கு இருக்கிறது.

குடும்ப செலவிற்கே விழி பிதுங்கி ஏதோ சாப்பிடுவதே போதுமென்று இருக்கும் கோடிக்கணக்கான எளிய குடும்பங்களுக்குத் தீர்வு உண்டா? ஓயாத பணிவிடைகள் செய்யும் பெண்ணிற்கு அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் வரைக்கும் நிம்மதி இருப்பதில்லை. பொருளாதார நிறைவு இல்லாத குடும்பங்களிலும் பெரியவர்களால் குற்றம் குறை பேசியே உறவை முறித்துக் கொள்ளும் நிலைதான் நீடிக்கிறது.

நூலாசிரியரின் ஒரு கருத்து பாராட்டப்பட வேண்டியது. உறவுகளிலிருக்கும் நாடகத்தனத்தைப் பரிசீலனைக்கு உட்படுத்துவது, அந்தந்த உறவை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது. இருவேறு குடும்பம், இருவேறு பழக்க வழக்கங்கள், இருவேறு வாழ்க்கை முறைகள், இருவேறு நியாய தர்மங்கள், இருவேறுபட்ட சரிதவறுகள் ஒன்றிணைவதும், ஒரே வீட்டில் வாழ்வதும் நிகழும்போது, ஒருவரின் இயல்புகளை, செயல்பாடுகளை இன்னொருவர் ஏற்பது நிகழ்ந்தாலும், தன்னுடையவற்றை விட்டுக் கொடுப்பது என்பது தன்னழிவு போன்ற கருத்தாக்கத்தில் சாத்தியமில்லை.

இவ்விடத்தில், மருமகளின் பிரசவங்களின் போது தானே கழிவுத் துணிகளையும் குழந்தைகளின் கழிவுத் துணிகளையும் அள்ளிப் போய்த் துவைத்துச் சுத்தமாக்கும் மாமியார்களையும், தன் அம்மாவை மறந்து மாமியாரையே தெய்வமாகப் பூஜிக்கும் மருமகள்களையும் மனதில் நினைத்தால் ஒரு ஆறுதலும், சற்று பொறாமையும் தோன்றும். அப்படிப்பட்ட பெண்களும் இன்னும் பல ஊர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த வசதி படைத்த ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் தன் பையன்களுக்கு, அவரிலும் வசதி மிகவும் குறைவான பரம ஏழைகளின் வீடுகளிலிருந்து பெண்ணெடுத்தார். எந்த வரதட்சணை செய்முறைகளையும் கேட்கவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. திருமணத்திற்குப் பின்பும் கூட எந்தச் சீர் சிறப்புகளையும் பெறவில்லை. மருமகள்களுக்கு அவர் தங்க நகைகளை வாங்கிக் கொடுத்தார். அவரின் மனைவியோ, மருமகள்களுக்கு தானே பிரசவத்தைப் பார்த்தும், குழந்தைகளை வளர்த்தும் மருமகளைத் தாங்கிக் கொண்டார். ஆனாலும் ஒரே வீட்டில் தனிக் குடித்தனம்.

தன் பிள்ளைகளுக்கு மாடிவீட்டைக் கொடுத்து விட்டு அருகில் குடிசை போட்டுத் தங்கிக் கொண்டார்கள். வயதான அவர்கள் தனித்தே சமைத்துச் சாப்பிட்டு வந்தார்கள். அவர்களிடம், " உங்க கடைசிக் காலத்திலேயேவாது பிள்ளைகளிடம் சேர்ந்து இருந்து விடலாமே?" என்பவர்களிடம் "அவனவன் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்த்துக்குறதே பெரிசா இருக்கிறப்போ, நாமும் அவங்களோட இருந்தால் கஷ்டம் தானே... செத்த பின்பு நல்ல முறையில தூக்கி அடக்கம் பண்ணினாப் போதும். அதுவரை அவனுக்கு உதவ முடியா விட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் (தொல்லை) இல்லாம இருக்கணும்னுதான் வேண்டிக்கிட்டிருக்கேன்" என்பார்கள். பல பிரச்சனைகளில் அந்தப் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி ஆயிரம் பேசினாலும் மருமகளிடம் மட்டும் வாய் திறக்க மாட்டார்கள்.

எத்தனை குறையோடு வந்திருந்தாலும், குற்றங்களோடு இருந்தாலும் மருமகளை ஒரு வார்த்தை கூட குறையாகப் பேசியதில்லை. மருமகள்களே பேசினாலும் அவர்கள் பதில் பேசுவதில்லை. இதைப் பார்த்த ஊர்க்காரர்கள் சிலர் அவர்களிடம், "உங்க மருமகள்களுக்கு நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்களோ?" என்று சொல்லும் போது, "மருமகளுக்கு மாமியார் தயவு தேவையில்லை, ஆனால் மாமியாருக்கு மருமகள் தயவு தேவையாக இருக்கிறது. கடைசிக் காலத்தில் அவளிடமிருந்து சாவதுதான் மரியாதை. இன்றைக்கு கால் கை நல்லாயிருக்குதேன்னு பேசிக்கிட்டு நாளைக்கு நமக்கு முடியாத போது அவளிடம் சாப்பாட்டிற்கு நாம் எதிர்பார்த்து இருக்கும் போது நம்ம மனசு குற்ற உணர்வில் கொன்று விடும்" என்பார்.

இப்படி பெரும்பாலான மனிதர்கள் இருந்து விட்டால் பரவாயில்லை. தெரிந்தோ, தெரியாமலோ, தன்னிச்சையாகவோ, திட்டமிட்டோ, நாம் பார்க்கும் எல்லாக் குடும்பங்களிலும், நாட்டில் பல ஊர்களிலும் இருவருக்குத் திருமணம் என்று முடிவாகும் போதே தனிக்குடித்தனம் என்பது தானாகவே முடிவாகி விடுகிறது. மருந்துக்குக் கூட கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்றோ, எங்களோடு இருங்கள் என்றோ அல்லது இதுபோன்ற வார்த்தைகளையோ இப்போது கேட்க முடிவதில்லை. இதுதான் இப்போதைய சமுதாய அமைப்பு. தற்போது இதுதான் சரி எனும்படி நிகழ்ந்து வருகிறது. கூடவே பெரியவர்களுக்கு முடியாத நிலையில் அனைவரும் ஒன்று கூடி சேர்ந்து கவனித்துக் கொள்வதும், தங்களுடன் வைத்துக் கொள்வதும் மரபாகிப் போனது.

இந்தப் புத்தகம் சொல்லும் இன்னொரு விஷயம் சமயலறை. "சமையலறை ராணி" என்று போதை ஏற்றும்படி நூலாசிரியர் இவ்வார்த்தையைக் கையாள்வது அவசியம்தானா? சமையலும் சமையல் சார்ந்தும் பெண் இருந்தாலும் அதை நூலாசிரியர், அதிகாரம் என்றும், ராஜ்யம் என்றும் குறிப்பது அவசியமற்றது. சமையலில் ஓயாத பணிவிடைகளும், பணம் செலவழித்து ஒரு மாமியாரைச் சமாளிப்பதும் எங்கிருந்தாலும் நாடு, இனம் தாண்டி பெண்மையின், பெண்ணின் பரிதாப நிலையையே இந்நூல் தூக்கிக் காண்பிக்கின்றது.

இன்னும் சில வருடங்களில் எல்லா வீடுகளிலும் இந்தப் புத்தகம் இருக்கும். பல வீடுகளில் பிரச்சனைகள் தீர்ந்து மருமகள்கள் நிம்தியாக இருக்கலாம்...? 

 

   -கலை இலக்கியா.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.