........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-8

பக்கம்- 136     விலை-ரூ 60.00

 

டீன் - ஏஜ் பிரச்னைகள்

- டாக்டர் ஷாலினி-

 கிழக்கு பதிப்பகம்
-நலம் வெளியீடு-
(Nalam , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.

 

பார்வை :

ஒரு உடல்நல மருத்துவர் விளக்கம் கூற சற்றேத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களில் இந்த மனநல மருத்துவரான டாக்டர் ஷாலினி அனாயசமாக, மிகவும் கவுரவமான வார்த்தைகளால் பாலுணர்வு விஷயங்களை விளக்குகிறார். "செக்ஸ் கெட்டது" என்று ஆங்கிலேயர்கள் எப்போதும் சொன்னதில்லை. மாறாக, வயதுக்கு வந்த குழந்தைகளைக் கூட ஆண்-பெண்ணோடும், பெண்- ஆணோடும், சுதந்திரமாக "டேட்டிங்" என்ற முறையில் பழக விட்டான். "சற்று எச்சரிக்கையாக இருங்கள்" என்று மாத்திரம் சொன்னான். நம் இந்திய செக்ஸ் அறிவியலாளர்களான வாத்சாயணர், அதிவீரராம பாண்டியன் இவர்கள் சொல்லாத செக்ஸை ஆங்கிலேயர்கள் சொல்லி விடவில்லை.

கரு வயிற்றிலிருக்கும் போது பால் நிர்ணயம் எப்படி ஆகிறது? அதாவது ஆணா, பெண்ணா என்று நிணயிக்கும் குரோமோசோம்கள் செய்யும் வேலைகளின் ஒழுங்கு முறை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது என்றால் ஆணின் விந்தணு கருப்பையிலுள்ள பெண்ணின் முட்டையை அடையச் செல்லும் பயணம் இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. பிட்யூட்டரி சுரப்பி பார்க்கத்தான் சுண்டைக்காய் அளவு. பாலகன் பருவத்தைத் தாண்டி வாலிப வயதை எட்டிய கோலாகலத்தை அது அறிவிக்கும் முறை நூலாசிரியரின் எழுத்து வலிமைக்குச் சான்று.

இவ்வாறு உடலில் இயங்கும் ஒவ்வொரு உறுப்பும் தமது கடமைகளை ஒழுங்காகச் செய்து வருகின்றன. விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விரைகள் இரண்டு அடங்கிய விரைப்பை ஆணின் உடலை விட்டுத் தனியாக உள்ளது. உடலின் மாறுபட்ட உஷ்ணம் இந்த விரைகளைத் தாக்காமல் இருக்கவே. காரணம் 30 டிகிரி முதல் 33 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில்தான் விந்துவை உற்பத்தி செய்யும் என்கிற விளக்கம் அருமையாக உள்ளது. சிசுவின் பாலினம் நிர்ணயிப்பதில் பாதிப் பங்கு விரைகளிலுள்ளே விந்து நீரில் உள்ள திசுக்கள் பங்கு வகிப்பது சராசரி கல்வியறிவுள்ள யாருக்கும் புரியும்.

உலகிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சங்கிலிக் கோர்வை என்று வைத்துக் கொண்டால் அந்த சங்கிலியின் ஒரு "கண்ணி" தான் இன்றையக் குடும்பத்தின் சந்ததி. இதற்கு முன்பு உள்ள கண்ணிகள் அவ்வாறே அதன் முன்னோர்கள். அது போல நம் பின்னோர்களும் சேர்ந்து வருவதற்கான கண்ணிகள் இணைந்து நீளும். இந்தக் கண்ணிகள் அப்போதப்போதைய தலைமுறையால் குழந்தைகள் பெற்று உண்டாக்கப் படுகின்றன. ஆக இந்தக் "கண்ணிகள்" தயார் செய்யும் "மாபெரும்" செயலுக்காக இயற்கை தருகின்ற இன்பமூட்டும் இனிப்பு பரிசுதான் கணவன்-மனைவி உடல் உறவு. நூலாசிரியர் சொல்வது போல ஆண்டின் 365 நாளும் இந்தப் பரிசைப் பெற மனித இனம் சலிப்பதேயில்லை. இவ்வாறாகத்தான் சமுதாயம் அடங்கிய உலகம் உயிர்த்திருக்கிறது. சிறிதும் அருவருப்பு இல்லாமல் மூன்று கல்-ஒரே மாங்காய் என்கிற எட்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படுவதில் நூலாசிரியரின் எழுத்தாளும் சாதனை தெரிகிறது.

சமுதாய, குடும்ப உறவுகள் பின்னப்பட்டு உறவு முறைகள் ஏற்பட்டபின் "நீதான் அவளுக்கு" "நான்தான் உன் கணவன்" என்று உரிமைக்குப் பின்தான் காதல் உணர்வு தோன்றும் பக்குவமான காலகட்டம் என்கிறார் நூலாசிரியர். இதற்கு மனமும் காரணம் என்றும் சொல்கிறார். "செக்ஸ் முதிர்ச்சி இல்லாமல் மன முதிர்ச்சி இல்லை" என்னும் நூலாசிரியரின் கூற்று சரியாகப்பட வில்லை. மன முதிர்ச்சி இல்லாமலேயே உடல் ஆரோக்கியமாக உள்ள, அதுவும் குறைந்த வயதேயுள்ள ஒருவரால் முழுமையான சேர்க்கையில் ஈடுபட முடியும். சமுதாயம் என்று பார்க்கும் போது இக்கருத்து அடிபட்டுப் போகிறது. இருப்பினும் "மன முதிர்ச்சி, காம மலர்ச்சி" எனும் பத்தாவது அத்தியாயம் சுவையாக விவரித்து இருக்கிறது.

தற்காலத்தில் படிக்கும், பார்க்கும் ஊடகங்களின் கதைகள், தொடர்கள், படங்கள் இவை தவிர சமூகத்தில் ஆண்,பெண், சிறார், டீன்- ஏஜர்களின் பழகும் முறை, இவையெல்லாவற்றின் அடிநாதமாகப் பாலினக் கவர்ச்சி ஓங்கி ஒலித்து பிட்யூட்டரி சுரப்பியின் வேலையைச் சுலபமாக்கும் விதத்தை அடுத்த அத்தியாயத்தில் அழகாகச் சொல்கிறார் நூலாசிரியர்.

பருவம் முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டபின்பு மனதில் ஏற்படும் சலனங்கள், ஏன் எனக்கு இம்மாதிரி உணர்வுகள் தோன்றுகின்றன? என்ற காரண காரியங்கள் புரியாத யுவன், யுவதி வயதில் கிளர்ந்தெழும் இனம் புரியாத வெளியே சொல்லக் கூடாத பின்னல்களும் அதை வடிக்க வடிகால்கள் இல்லாமல் திணறும் அவஸ்தையும் அதற்கடுத்த அத்தியாயமான "இச்சை=இம்சை" யில் சொல்லப்பட்டு உள்ளது.

உணர்ச்சி மேலீட்டில் இரவில் தன்னை அறியாமல் விந்து வெளியேறுவது இயற்கை என்பதுடன் சுய இன்பம் செய்து கொள்வது ஆபத்தில்லை என்றும் இளைஞர்களுக்குச் சொல்லும் நூலாசிரியர், பெண் பால் பிரச்சனைகளைச் சொல்லாமல் விடுவாரா? எட்டு வயதேயான சிறுமி மூன்றே ஆண்டுகளில் அடையும் மாறுதல், இயற்கையின் மந்திரக் கோலாட்டம்தான். மார்பகங்கள் சிறிது சிறிதாகப் புடைக்க ஆரம்பித்து, இடை சிறுத்து, பின்னாசனங்கள் பெருத்து விட கள்ளமில்லாப் பார்வை கொண்டிருந்தவளின் பார்வை இப்போது மாய வலையாக ஒரே லாவகச் சுழட்டலில் எதிர் பாலினமான வாலிபனைக் கிறங்கடிக்கும் பார்வையாக மாறும் வித்தை இயற்கை கொடுத்த சீதனமே.

அடுத்து வரும் அத்தியாயத்தில் பெண்மையின் மலர்ச்சி. ஒரே அங்கமான மார்பகங்கள் சிறுமி யுவதியான போது ஆண்களை ஈர்க்கும் சக்தி பெற்று, மணமான பின்பு தன் துணைக்கு சுகமளித்து, தாயாகிய பின்பு குழந்தைக்கு அமுதமளிக்கும் கலசங்களாகவும் மாறிக் கொள்வது உலக உயிர்ப் படைப்புகளில் மனித சமூகத்திற்கு இயற்கை அளித்த போனஸ்.

இதன் பின் வரும் அத்தியாயங்களில் மணமான பின்பும் அவரவர்களுக்குக் கிடைக்கும் அந்தரங்க அனுபவங்களே பிற்காலத்தில் கொள்ள வேண்டிய பாடங்களாகவும் சொல்லப்பட்டுள்ளன. நமக்குள்ள பிரமிப்பு எல்லாம் எளிமையான வார்த்தைகளால் மிகவும் அந்தரங்க ஆண்-பெண் கலவியைக் கூட இயல்பான விஷயமாக எடுத்துக் கொண்டு சொல்லிய முறைதான். இதை முழுமையான செக்ஸ் ஆய்வு உரைகள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும் கருப்பையில் அஞ்ஞாத வாசம் செய்யும் குழந்தையைப் பற்றியும், கருப்பிண்டமாயிருந்த குழந்தைக்கு உறுப்புகள் தோன்றும் விதம், சுவாசிப்பது, அவ்வப்போது "அது" செய்யும் சலனம் இவை பற்றி நூலாசிரியர் இப்புத்தகத்தில் சொல்லாமல் விட்டதும் ஒரு சிறு குறைதான்.

இருப்பினும் பாலியல் கல்வியை பள்ளிக்கல்வியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று பலரும் சொல்லி வரும் வேளையில் தமிழில் இது முதல் முயற்சி. முதல்தரமான முயற்சி. கிழக்குப் பதிப்பகத்தின் நலம் வெளியீடான இந்த டீன் - ஏஜ் பிரச்சனைகள் நூலை, துவக்கத்தில் நான் சொன்னபடி உடல் நல மருத்துவராயில்லாத ஒருவர் உடல் நல மருத்துவராக இருப்பவர்களுக்கும், சராசரி மக்களுக்கும் தெளிவாகச் சொல்லும்படியாக எழுதியிருக்கும் மனநல மருத்துவரான டாக்டர் ஷாலினியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

   -ஆர்.சுப்பிரமணியன்.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.