........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-7

பக்கம்- 160     விலை-ரூ 70.00

 

குஷி-100

- சிபி.கே.சாலமன்-

 கிழக்கு பதிப்பகம்
(Kizhakku , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.
 

பார்வை :

"எந்த பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் வாசிக்கலாம் " எனும் அட்டைப்பட "Flash News" -உடன் குஷி-100 புத்தகத்தை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் சிபி கே. சாலமன் கருத்துச் செறிவோடு மின்னலைப் போல் பளிச்சென்று தான் சொல்ல விரும்புவதை ஒரு துள்ளல் நடையில் எழுதி நம் மனதிற்குள் சந்தோஷ விளைச்சலுக்கான நாற்றுக்களை நட்டு விடுகிறார்.

எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புவதும், அதற்காகத் தனக்குத் தெரிந்த வழிமுறைகளை ஊர் கூட்டி உரைக்க விரும்புவதுமான மன விசாலம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது ஒரு வரம். கொஞ்சம் பேலன்ஸ் தவறினால் வரங்கள் சாபமாகி விடுவதுண்டு.

நேருவைப் போல், கலாமைப் போல், பேரறிஞர் அண்ணாவைப் போல், கர்மவீரர் காமராஜரைப் போல் என்று முழங்கத் துவங்கும் ரிட்டையர்டு பார்ட்டிகளிடம் அரசாங்கக் கூட்டங்களில் சிக்கிக் கொண்டால் முக்கால்வாசிப் பேர் வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சராசரி மனிதர்களுக்கு வரும் சராசரி பிரச்சனைகள், நெருக்கடிகள், தோல்விகள் மற்றும் நிராசைகளைப் பற்றிப் பேசாமல் அசாதரணமானவர்களையும் அவர்களின் குறிக்கோள்களையும் பேசுவது சில நேரங்களில் அபத்தமாகி விடுவதுண்டு.

ஸ்கூல்பீஸ் மாதாமாதம் ஒழுங்காகக் கட்டுவதையே வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதும் இன்றைய நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகளின் "Progress Card" -ஐப் பார்க்கும்போது மட்டும் சின்னதாக மகிழ்ச்சியடைகின்றனர். சாமான்ய மக்களின் வாழ்க்கை நெடுகிலும் கூட குஷி வண்ணத்துப் பூச்சிகளைப் போல் வட்டமிடும் என்று சொல்ல வருகின்றார்.

ஆகையால் வாழ்வின் குறிக்கோள்களை, நோக்கங்களைத் தெளிவாக வரையறுத்து விட்டு அவற்றை அடைவதற்கான செயல்களில் சந்தோஷமாக, குஷியாக ஈடுபடுவது எப்படி என்பதுதான் இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்ட மூலப்பொருளாகும். முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஏதாவது ஒன்றை யோசிப்பதும், சதா எதையாவது செய்து கொண்டிருப்பதுதான் கெட்டிக்காரத்தனம் அல்லது பொறுப்பான செயல் என்று மரியஜோசப் முதல் மாமிகள் வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முதலில் உடைக்கும் நூலாசிரியர் நிறைய இதழ்களை, பத்திரிகைகளை, புதினங்களைப் படியுங்கள். உங்களுக்குப் பிடித்த இசையை அடிக்கடி கேளுங்கள் என்று இதுவரை யாரும் குறிப்பிடாத விஷயத்தை எடுத்தாளுகின்றார்.

"குறிக்கோள், இலட்சியம், இலக்கு, வெற்றி-இவைகளையெல்லாம் அடைவது எப்படி?" போன்ற புத்தகங்கள் கடற்கரையோர காலை நேரத்து மீன் குவியல்களைப் போல புத்தகக் கடையில் காணக் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் சமீபகாலமாக வாசகர்கள் கடன் வாங்காத தன்னம்பிக்கையுடன் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். இச்சூழலில் இப்புத்தகம் சம்சாரி வாழ்க்கையின் சந்தோஷங்களைப் பற்றி மட்டும் அக்கறை கொள்கின்றது.

ஹென்றிபோர்டு தன் மோட்டார் கார் தொழிற்சாலையில் வெற்றிகரமாகப் பயன்படுத்திக் காட்டிய "CANDO" என்னும் "Industrial Management " தத்துவத்தை நம் வீட்டு சமையலறைகளுக்குக் கொண்டு வந்து விளக்குகின்றார். இது நூலாசிரியரின் திறமைக்கு ஒரு அழகிய உதாரணம்.

இப்பூவுலகில் வாழப் பிறந்த வண்டுகளாகிய நாம் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டுமென்று இப்புத்தகம் விரும்புகிறது. பாஸ் மார்க் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் இப்புத்தகத்தில் இருக்கும், கீழ்க்கண்ட இருபது குறிப்புகளையாவது குறைந்தபட்சம் கடைப்பிடித்து வாழ்க்கையைக் குஷியாக்கிக் கொள்ள முடியும் என்பதால் அந்த குறிப்புகள் உங்களுக்காக இதோ...


1.எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒரு நிமிடம் அவகாசம் எடுத்துக்கொண்டு ஆத்திரப்படுங்கள்; அவசரப்படுங்கள்; அந்த அறுபது நொடி இடைவெளியில் நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கும் போது உண்மை புலப்படும். தவறுகள் புரிய வரும்.


2. நீருக்குள் இருந்து கொண்டு நீரின் அருமையை அறியாத மீனைப் போல் இருந்து விடாதீர்கள்


3.எப்போதெல்லாம் வெற்றி பெறுகிறீர்களோ அப்போதெல்லாம், "இது என்னுடைய இறுதி இலக்கு அல்ல. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்று உங்களுக்குள் உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள்.


4.பாராட்டுக்கு மயங்குவதுதான் ஹியூமன் சைக்காலஜி. எனவே, பாராட்டுவதில் சிக்கனம் பார்க்க வேண்டாம்.


5.தவறுகளைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் பிறகு வாழ்க்கையில் ஜெயிப்பதொன்றும் பெரிய விஷயமாக இருக்காது.


6.எல்லா அனுபவங்களும் நமக்கே கிடைத்துக் கொண்டிருக்காது. மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவங்களிலிருந்தும் நிறையக் கற்றுக் கொள்ளுங்கள்.


7.பரீட்சைகளை முதலில் வைத்து விட்டு பாடங்களைப் பிறகு எடுக்கும் ஒரே ஆசிரியர், வாழ்க்கை மட்டும்தான்.


8.மாற்றம் என்பது மிக முக்கியம். ஒரே மாதிரியான வாழ்க்கை நம்மை முடக்கிப் போட்டுவிடும். வேலையில் மாற்றம் வரலாம். தொழிலில் மாற்றம் வரலாம். நண்பர்களில் மாற்றம் வரலாம். கடந்து போகிற வாழ்க்கையில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். இப்படி அவ்வப்போது வருகின்ற மாற்றங்களைத் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகி விடும்.


9. காரியம் கச்சிதமாக முடிய வேண்டுமென்றால் கால் கிலோ கனிவு அவசியம்.


10.நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை வாழ்க்கை என்று குறிப்பிட முடியாது. சிறியதோ பெரிதோ உங்களுக்கென்று ஒரு நட்பு வட்டம் இருந்தால் அது என்றென்றைக்கும் நன்மையே தரும்.


11.இடையே எந்தத் தடங்கல்கள் வந்தாலும் அனைத்தையும் ஓர் அனுபவமாகவே எண்ணிக் கொள்ள வேண்டும். இமய மலை ஏறுகிறவர் கல் தடுக்கி விழுவது பற்றி அச்சப்பட முடியுமா?


12. நமக்கேற்றவாறு சௌகரியமாக வாழ்வதுதான் வாழ்க்கை.


13.எதையுமே உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கவே கூடாது. நிதானத்தை எந்தக் கணத்தில் இழக்கிறோமோ அந்தக் கணத்தில் இருந்து நம்முடய சந்தோஷங்கள் கலைய ஆரம்பிக்கின்றன.


14.நண்பர்களுடன் பேசலாம், பழகலாம். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை நம் கையில் ஏந்திக் கொண்டால் அதுவே நட்பு விரிசலடைய காரணமாக அமைந்து விடும். நட்புக்கென்று ஒரு இலக்கணம். எல்லைகள் எல்லாம் இருக்கிறது.


15.தோல்விகளைப் புறக்கணியுங்கள். அப்போது அதுவும் உங்களைப் புறக்கணிக்க ஆரம்பிக்கும். அதற்கு அடிபணிய ஆரம்பித்தால் அது உங்களை ஆக்கிரமித்து விடும்.


16.குறைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆனால் அந்தக் குறையையே சாதகமாக்கிக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.


17.தோல்வியை அதிகமாக அனுபவிப்பவர்கள் வாழ்க்கையில் நிறைய முயற்சி செய்கிறார்கள். போராடுகிறார்கள் என்று அர்த்தம்.


18.நெருக்கடி வந்தால் உடனடித் தேவை நிதானம். நிதானத்தைக் கடைப்பிடிக்கும் போதுதான் துல்லியமாகச் சிந்திக்க முடியும்.


19. தாற்காலிக சந்தோஷத்தை ருசிக்கப் பழகினால் அதிலிருந்து மீள்வது சிரமமாகி விடும்.


20.தொடர்ந்து மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே சகஜமாகிவிடும்.


அவ்வப்போது வந்து போகும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு ஆறுதல் சொல்ல பாட்டிகள், அத்தைகள், சின்னம்மாக்கள், அக்காக்கள் இல்லாதவர்கள், அடிக்கடி நம்மைச் சுற்றி நெருக்கடிகள் சூழும்போது, ஆறுதல் சொல்லும் கத்தி முனையைப் போல் புத்தி வைத்திருக்கும் மாமாக்கள் இல்லாதவர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் இது.


மேலும், ஜன்னலைத் திறந்தால் ஜன்னலும், கதவைத் திறந்தால் இன்னொரு ஜன்னல் மட்டுமே தெரியும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இப்புத்தகத்தை வீட்டில் வாங்கி வைக்கலாம். அப்போதுதான் அவர்களுக்கும் இந்த வாழ்க்கையை குஷியாக்க, அதாவது சந்தோஷமாக்க வழி கிடைக்கும்.
 

   -எஸ். எஸ். பொன்முடி.

எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.