பார்வை :

புத்தகத்தின் மொத்த வடிவம், பக்கங்களின் அச்சு வடிவம்
முன்பின் அட்டைகளின் வடிவம் ஆகியவற்றில் வித்தியாசப்படுத்திப் புத்தகத்திற்குப்
புது வடிவம் தந்து வரும் சென்னை, கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்
"எதிரி என்சைக்ளோபீடீயா."
இரண்டு எதிர் எதிர் துருவங்கள் அருகருகே நெருங்கும் போதுதான் உயிர்ப்புடன்
இருப்பது புலப்படும் என்னும் நியூட்டன் விதியை வாழ்க்கைக்கும் பொருத்திப்
பார்த்து வெற்றிக்கான திசையில் தைரியமுடன் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்கிறார்
இந்த "எதிரி என்சைக்ளோபீடீயா" நூலின் ஆசிரியர் எழில் கிருஷ்ணன்.
"எதிரி" எனும் சக மனிதன் அல்லது மனிதக் கூட்டத்தைக் குறிப்பிடும் பெயர்ச்சொல்
பெரும்பான்மையாக "பகை உணர்ச்சி" என்னும் வினைச் சொல் வழங்கும் அர்த்தத்திலேயே
பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேற்றம் என்பது எதிரியின் அழிவு சார்ந்தது
என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். சங்ககாலத் தமிழன் முதல் இன்றைய சாப்ட்வேர்
தமிழன் வரை காதலும் வீரமும்தான் நம் பண்பாட்டின் அடையாளங்கள் என்று நம்பிக்
கொண்டிருக்கும் அதே வேளையில் காதலிலும், வீரத்திலும் வெற்றி கொள்ள எதிரியோ,
எதிர்ப்போ இருந்து வந்துள்ளதை கவனித்துக் கொண்டு வருகின்றான். ஆகையால் காதலையும்,
வீரத்தையும் சினிமாக்காரர்கள் வசம் ஒப்படைத்து விட்டு தனக்கு சம்பந்தம் இல்லாதது
போல் ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றான். மேலும் நமது மெக்காவே கல்விமுறை"
Entrepreneurship Skills " களுக்கு எதிரானது என்பதால் தொழில் முனைவோர்கள் ஒரு
சதவீதம் கூட இல்லை. அப்துல்கலாம் " Produce Job Makers instead of Job seekers
" என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறார்.
காலங்காலமாக, பாரம்பரியமாக நம்மைத் தொடர்ந்து வரும் " Inability on Risk
Bearings "க்கு காரணம் எதிர்ப்பைக் கண்டு அஞ்சுவதுதான் ஆகும். இப்பண்புதான்
நம்மிடையே தொழில் முனைவோர் உருவாகாததற்குக் காரணம். இச்சூழலில் எதிர்ப்பைப்
பற்றி அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஒரு என்சைக்ளோபீடீயாவையேத் தயாரித்துள்ளார் இதன்
ஆசிரியரான எழில் கிருஷ்ணன். இந்த நூலை ஒரு சராசரியான சுயமுன்னேற்ற நூலாக
மட்டுமாகப் பார்த்து ஒதுக்கி விட முடியாது. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு,
ஒன்றுமில்லாததில் இருந்து ஒருமைக்குப் போன்ற இந்திய வேதக்கருத்துக்களை எளிமையாக,
சுவாரஸ்யமாக ஒரு பண்டிதர் எப்படி விளக்குவாரோ அதே போன்று இதுவரை
கேள்விப்பட்டிராத நிகழ்வுகளுடன் எதிர்ப்பிலிருந்து நம் குறிக்கோளை எப்படி
சுலபமாகச் சென்றடைவது என்று சிறப்பாக எழுதியுள்ளார் நூலாசிரியர்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்னும் சிறந்த தர்மம் "அபார்ட்மென்ட் வாழ்க்கை"
மூலமாகவும், "ரிசார்ட்ஸ் வாழ்வு" முறைகளாலும் காணாமல் போய்விட்டது. இதனால்
ஏமாற்றத்துடன் நாம் சோர்வுறும் போது தட்டிக் கொடுத்து தைரியம் சொல்லும் மாமாவும்,
மாமியும், தாத்தாவும், பாட்டியும் இல்லாமல் போய் இன்று எதிர் வீட்டுக்
குழந்தையைக் கூட எதிரி போல் நினைத்துக் கொள்ளத் துவங்கி விட்டோம். இச்சூழலில் "
எதிரி ", " எதிர்ப்பு " இவற்றைக் கண்டு நாம் உருவாக்கிக் கொள்ளும் பதற்றத்தையும்,
அவஸ்தையையும் குறைத்துக் கொள்ளவும் எதிர்ப்புகள் குறித்த ஒரு ஆரோக்கியமான
புரிதல்களையும் நம்மிடையே உருவாக்குகின்றது இந்த புத்தகம்.
இந்நூலாசிரியரின் நடையும் கருத்துக்களும் நச்சென்று நம்
மனதுக்குள் உட்கார்ந்து கொள்கின்றது. உதாரணமாக
இந்நூலிலுள்ள சில வரிகளை உங்கள்
பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.
-
எனக்கு எதிரிகளே கிடையாது என்று
பெருமைப்படுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. எதிரிகள் இல்லாதவர்கள்தான், அதிக
விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கவனம். நீங்கள் வாழ்க்கையில் தோற்றுக்
கொண்டிருக்கிறீர்கள்...
-
யார் உண்மையான நண்பன் என்பதைக்
கண்டுபிடிப்பதற்குள் மூப்பு வந்து விடுகிறது.
-
கெட்ட பழக்கங்களாலும், சிறு தவறுகளாலும் எந்த
மனிதனும் பாழாய்ப் போவதில்லை. சில்லறைத் தவறுகள் ஒரு போதும் ஒருவரின் வெற்றிக்கு
அணை போடாது.
-
ஒப்பீடு ஒரு கொடிய நோய். ஆனால் இந்த நோயைத்தான்
வலிய தேடிச் செல்கிறார்கள் மனிதர்கள்.
-
வெளி உலகம் பற்றிய அறிவு இல்லாத குடும்ப
உறுப்பினர்கள் கொடுக்கும் அறிவுரைகள், ஆபத்தானவை. அவர்களால் ஒரு வட்டத்தைத்
தாண்டிச் சிந்திக்க முடியாது.
-
போட்டியாளன் ஒரு போதும் உங்களை அழிக்க நினைக்க
மாட்டான். அவனுக்கு நீங்கள் வேண்டும். உங்களோடு போரிட்டு ஜெயிப்பதில் கிடைக்கிற
சுகத்தை ஒரு போதும் அவன் இழக்க விரும்புவதில்லை. நம் தரம் தனியாகத் தெரிய
வேண்டுமென்றால், பக்கத்தில் ஒரு போட்டியாளன் எப்போதும் இருக்க வேண்டும்.
போடடியாளன் முன்னால் வளர்ந்து காட்டுவதுதான் உத்தமம்.
-
உங்களுக்கொரு எதிரி முளைக்கிறான் என்றால் அவன்
உங்களைப் போல் ஆக விரும்பி, அது நடக்காமல் உங்களுக்குக்
கீழே இருப்பதால் நேரும்
விபரீதம் இது. வளர்ச்சிக்குக் கொடுக்கும் விலை இது.
-
எதிரியால் ஆபத்து என்று நீங்கள் நினைப்பதைப்
போலவே, உங்களால் ஆபத்து என்று உங்கள் எதிரியும் நினைக்கக் கூடும். நினைக்க
வேண்டும்.
-இப்படி இன்னும் உங்களுக்குத் தேவையான எத்தனையோ வாசகங்கள் இந்த
புத்தகத்தில் ஏராளமாக இருக்கிறது.
சூரபத்மன், ரத்தபீஜாசுரன் என்கிற புராணக் கதாபாத்திரங்களுடன் கங்குலி ,
சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா, கலைஞர், அல்கொய்தா, நக்மா, ஸ்வராஜ்பால், சன்
டி.வி, போபர்ஸ், அப்துல் கலாம் என்கிற கலவையான சமீபத்திய நிகழ்வுகளின் மூலம்
எதிரியை நசுக்கி அழிக்கும் அற்புதமான சூத்திரத்தை அழகாக விவரிக்கின்றது இந்த
நூல்.
தெலுங்குப்பட டப்பிங் வசனங்களைப் போல் இருக்கும் புத்தகத்தின் முன் அட்டை
வாக்கியங்களைப் பார்த்துப் பயந்து விடாமல் இந்நூலை வாங்குபவர்களுக்கு,
"தோல்விகளால் நீங்கள் சோர்ந்து போகக்கூடும் என்று உலகம் எதிர்பார்க்கும் போது
நீங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலமாக உங்களைப் பற்றிய
அச்சத்தை ஒரு நொடி தவறாது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். உங்களுக்குத்
தெரியாது. இதன் பொருட்டு உங்கள் எதிரி ஒவ்வொரு நிமிடமும் நடுங்கிக்
கொண்டேயிருப்பான். "
என்கிற நம்பிக்கையூட்டும் நல்ல பல செய்திகளும், எதிரியை முளைக்க முளைக்கக்
கிள்ளி எறியும் வழிமுறைகளும் நிறையவே இருக்கிறது.
எனவே, ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் "யார் எதிரி?"
என்பதை அடையாளம் காணவும், அந்த எதிர்ப்புகளை முறியடிக்கவும் இந்த "எதிரி
என்சைக்ளோபீடீயா" நூல் சிறப்பானது மேலும் இதை வாங்கிப் படிப்பதுடன் பாதுகாப்பில்
வைத்திருப்பதும் அவசியமானது.
-எஸ். எஸ். பொன்முடி.

எஸ்.எஸ்.பொன்முடி
அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய புத்தகப்பார்வை காண
