பார்வை :

எழுபதுகளில் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தவர்கள் ஜெயகாந்தன்,
சுஜாதா, புதுமைப்பித்தன், கி .ரா., சு.ரா., ஆகியவர்களில் ஏதாவது இரண்டு
எழுத்தாளர்களின் பாதிப்பை அல்லது எல்லோருடைய பாதிப்புகளையும்
பெற்றிருப்பார்கள. பி.கே.சிவக்குமாரின் எழுத்து நடை ஜெயகாந்தன் மற்றும் சுஜாதா
ஆகியோரின் கலப்பின வீரிய ஒட்டு விதை போன்றது. தமிழ் உரைநடையில் இவ்விதை
ஆரோக்கியமான, புதுரகப் பயிர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெயகாந்தன் போல் கம்பீரமாக, வலிமையாக, தைரியமாகச் சிந்தித்து சுஜாதா போல்
இலகுவாக, சுவையாகக் கொஞ்சம் வழுக்கலுடன் எழுதியுள்ளார்.
"பொருந்தாக் காமம்" மற்றும் "தனித்தமிழ் என்னும் போலி" ஆகிய இரு கட்டுரைகள்
மிக முக்கியமானவை. திசை சொற்கள், வடமொழி சொற்கள், கிரந்த எழுத்துக்கள் மற்றும்
நன்னூல் காண்டிகையுரை, மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு ஆகியவற்றின்
துணையோடு ஆய்வுகளை மேற்கொண்டு தனித்தமிழ் பற்றி பயன் தரத்தக்க விஷயங்களை
எழுதியுள்ளார். ஆசிரியர் சிறுவயதிலிருந்தே சங்க இலக்கியங்களுடன் பரிச்சியம்
ஏற்படுத்தி குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி வரை விடாமல் தமிழோடு ஆழமான உறவினைக்
கொண்டுள்ளார் என்பது புலப்படுகின்றது.
தனித்தமிழ், சங்கத் தமிழ், புதுக்கவிதை தமிழ், நவீன கவிதைத் தமிழ்,
தொலைக்காட்சித் தமிழ் மணிரத்தினம் தமிழ், தினத்தந்தி தமிழ், வட்டார வழக்குகளின்
தமிழ், மேடைத் தமிழ் மற்றும் மின்னணுத் தமிழ் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி,
உளவியல் காரணங்கள் மற்றும் அவற்றினூடே தெரியும் மெல்லிய வர்க்க வேறுபாடு ஆகியவை
பற்றி சிவக்குமார் தனிப் புத்தகமே போடலாம். எதிர்காலத்தில் வளர்ந்து, மிகப்
பிரம்மாண்டமாக தனித்து நிற்கவிருக்கும் தமிழ் போன்ற தொன்மை மொழிகளுக்கு
அவ்வப்போது உண்டாகும் கலவைகளும், இணைப்புகளும் ஆரோக்கியமானது என்னும் ஆசிரியரின்
கருத்து ஏற்கத்தக்கதே.
"கட்டுரைகளில் நான் எதிர்பார்ப்பது" மற்றும் "எது கவிதை" ஆகிய இரண்டு
கட்டுரைகளும் எழுத்தாளர் மனோபாவத்திலிருந்து இயல்பாக, பந்தாவின்றி, கூச்சமின்றி
சட்டென்று வாசக தளத்திற்கு இறங்கி வந்து எழுதப்பட்டவை, பாராட்டுக்கள். சிறு,
குறு மற்றும் தனிச்சுற்று இதழ்கள், இணைய இதழ்களில் வெளிவரும் பெரும்பாலான
கட்டுரைகள் நம்மை சிரமப்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் (ஒரு வேளை) இருக்கலாம்.
ஒன்று ஒரு குறிப்பிட்ட மொழியில் படித்து, சிந்தித்து வேறொரு மொழியில் "கருத்து
ஒழுங்கமைவு" பிரக்ஞையுடன் மட்டுமே எழுதுவது, இரண்டு நாம் எழுதுவது சாதாரண
வாசகர்களுக்காக அல்ல, மிகத் தீவிர வாசிப்பாளர்களுக்கு என்ற பதட்டத்துடன்
எழுதுவது. யாரிடம் புலம்புவது என்று அவ்வப்போது மிகப் பெரும்பாலான வாசகர்களுக்கு
தோன்றும் இரவுச் சிந்தனைகளை சிவக்குமார் வெளிச்சமாக்கி இருக்கின்றார்.
2003-ல் எழுதிய உமாமகேஸ்வரியின் "வெறும் பொழுது" பற்றிய விமர்சனமும், மேற்கோள்
கவிதைகளும் அருமை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இலக்கியப் பத்திரிகைகளில்
வெளிவந்து கொண்டிருக்கும் உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் படித்தால் இனம் புரியாத
தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய பயம் வந்து ஒட்டிக் கொள்கின்றது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, புதுவிசை,
மெய்யெழுத்து படிக்கும் வாசகர்களில் காணக் கிடைக்கும் குறிப்பிட்ட பத்து
படைப்பாளர்களைத் தேடிச் சென்று எனக்குப் புரியாத கவிதைகளைக் காட்டி
உங்களுக்காவது புரிகின்றதா என்று தனித்தனியாக விசாரித்தேன். நாளைக்குச்
சொல்லுகின்றேன் என்று அவசரமாக விலகினார்கள். நாளைக்கு "ஒரே பதிலை"
தனித்தனியாய் போனில், நேரில் சொன்னார்கள். "கட்டுரைகள், விமர்சனங்கள்,
சிறுகதைகள் இவைகளைத்தான் வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் கவிதைகளைத்
தவிர்த்து விடுகின்றேன்"
-மேற்கூறிய அனைத்து இலக்கிய பத்திரிகைகளையும் வாங்குபவர்கள்
எங்கள் ஊரில் மொத்தமே ஒரு இருபத்தி ஐந்து பேர்தான் இருப்பார்கள். கவிதைகளைக்
கையில் வைத்துக் கொண்டு கட்டுடைப்பதற்காக நான் அலைவது ஊருக்குள் தெரிந்து
விட்டதால் என்னைப் பார்க்க நேரும்போது செல்போனை காதில் வைத்துக் கொண்டு
யாரிடமாவது (சீரியஸாக ?) பேச ஆரம்பித்து விடுகின்றார்கள் மீதி பதினைந்து பேர்.
அச்சு ஊடகத்தை விட ஒலி, ஒளி ஊடகம் சம்பவங்களை மற்றும் பார்க்க வேண்டிய தலங்களை
அற்புதமாகக் காட்சிப் படுத்தும் என்பதை நாம் அறிவோம். ஆனால் காட்சிகளைத்
தரிசிப்பதன் மூலம் அடையும் உண்மையான உணர்வுகளையும், அனுபவங்களையும் சில
நேரங்களில் எழுத்து ஊடகங்கள் கனகச்சிதமாக செய்து விடுகின்றன.
அமெரிக்காவின் "குளிர்காலம்" மற்றும் பார்ன்ஸ் & நோபிள் பரவசம் ஆகிய
கட்டுரைகள் ஒரு சிறு பரவசத்தையும் குறுகுறுப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன.
ஒரு தனியார் புத்தக விற்பனை நிலையத்தில் காணக் கிடைக்கும் அனைத்து
சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி ( இந்தியாவில்
உள்ளது போல ) அனுமதியில்லாமலே, வசதியாக அமர்ந்து கொண்டு தின்பண்டங்களைக்
கொறித்துக் கொண்டே படித்து விட்டு (காலை முதல் மாலை வரை) விலைக்கு வாங்காமலே
கூட வெளியேறலாம் என்ற தகவல் தாய்நாட்டுத் தமிழர்கள் எத்தனை பேருக்குத்
தெரியும்?
மதச்சார்பின்மை குறித்தும் பெரியார் குறித்தும் உள்ள கட்டுரைகளில் ஆசிரியர்
எழுப்பியுள்ள கேள்விகளும் அவரின் பதில்களும் தற்கால சமூக அறிவியலில் அக்கறை
கொண்டோர் அனைவரும் படிக்க வேண்டியவை. பெரியார் செய்யத் தவறிய காம்பரமைஸ்கள்
தமிழக வரலாற்றின் போக்கினை திசை மாற்றி விட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்
சிவக்குமார். அறிவுப் பூர்வமான அணுகு முறையோடு பெரியார் மீது குறை
காண்கின்றார். கவனமாக, அர்த்தமுடன் வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.
வழியில் உள்ள இவ்வளவு பெரிய கல்லை ஒன்றுமே செய்ய முடியாது என்று எல்லோரும்
மலைத்து நின்ற போது ஒருவர் மட்டும் மிகவும் மூர்க்கமாக, வேகமாக தனியாளாக
சம்மட்டியால் அடித்துப் பார்க்கின்றார். மிகக் கொஞ்சமாகவே வழி கிட்டுகின்றது.
காலத்தைக் கணக்கிலிட்டுப் பார்த்து விட்டு நாட்டு வெடிகுண்டுகளால் பாறையை
சிதறடிக்கின்றார். பாதை தெரிகின்றது. பயமின்றி மக்கள் பயணம் தொடர்கின்றனர்.
அப்பொழுது பாதையின் ஓரத்தில் நின்று கொண்டு ஒருவர் இப்படி புலம்பினால் எப்படி
இருக்கும் "பாதை கிடைத்தது பரவாயில்லை, ஆனால் பாறைக்கு பக்கத்தில் உள்ள பயன்
தரும் மரங்கள் சில காணாமல் போய் விட்டனவே" ஆகையால் பதினைந்து நூற்றாண்டு
காலமாக புரையோடிப்போன வேத, மத நம்பிக்கைகளைச் சுக்குநூறாக்க பிராமணியத்தை
முதலில் அழிக்க முயன்று வெற்றி கண்டார் பெரியார். அதில் அப்பாவி பிராமணர்களும்
கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மையே. யுத்த களத்தில் வெற்றி பெற
வீரம் மட்டுமே தேவை, கருணை அல்ல.
திராவிட இயக்கங்களின் மீதான கருணையற்ற, இடது சாரி அறிவு ஜீவி மனோபாவ வெறுப்பு,
ஜெயகாந்தன் மீதான அளவுக்கு மீறிய (நஞ்சு?) அபிமானம் போன்ற மிகச்சில முன்
அனுமானங்களை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பெரும்பாலும்
சிவக்குமாரின் சிந்தனைகள் துலாக்கோல் போலவே துலங்கி, விளங்கி நிற்கின்றது.
கவிதை, அரசியல், பொருளாதாரம், மொழி குறித்து விவாதிக்கும் போது பல்வேறு
குரல்களையும் நியாயமாக, கவனமாகப் பதிவு செய்கின்றார். படிப்பவர்களை
அதிர்வில்லாத விவாதங்கள் மூலம் மெல்ல தன் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றார் .
எனி இந்தியன் பதிப்பகத்தாருக்கும், சிவக்குமாருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்.
வாய்ப்பிருந்தால் முயற்சித்துப் பாருங்கள் . இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில்
1. எது கவிதை
2. புதுக்கவிதையும் மரபுக் கவிதையே
3. கவிதை கேளுங்கள் (முழுவதும்)
4. பொருந்தாக் காமம்
5. தனித்தமிழ் என்னும் போலி
6. அருவி
7. உன் கவிதையை நீ எழுது
8. வாடகை வீட்டில் வளர்த்த மரம்
9. சிவ வாக்கியர் திருவாக்கியங்கள்
10. ஆசை பற்றி ....
போன்ற கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு சிறு பிரசுரம் மீண்டும் கொண்டு
வாருங்கள். கல்லூரி, பல்கலைக் கழகங்களும், தமிழ் ஆர்வலர்களும் பெருமளவு
அங்கீகரிக்கவும், பெருமளவு வாங்கி ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது .
இக்கோரிக்கையை விமர்சகனாக அல்ல . வாசகனாக முன் வைக்கின்றேன் .
அட்லாண்டிக்குக்கு அப்பால் எனும் இந்நூலாசிரியர் பி.கே.சிவக்குமார்,
ஜெயகாந்தன் அவர்களை "என்னுரை" யில் குருவாக அல்ல குருபீடமாகவே பார்க்கின்றேன்
என்றும் தனக்கும் தன் அப்பாவுக்கும் வழிகாட்டியாக கடந்த 45 வருடங்களாக
திகழ்ந்து வருகின்றார் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறி விட்டார் . தன்னுடைய
குருவை தன் வாசகர்கள் அனைவருக்குமான குருவாக மாற்ற முயற்சிக்கும் ஒரு வகை
"Hidden Agenda" -வை மட்டும் மன்னித்து விட்டால் சென்னை, எனி இந்தியன்
பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் ஒரு அற்புதமான கட்டுரைத் தொகுதி.
-எஸ்.எஸ்.பொன்முடி.

எஸ்.எஸ்.பொன்முடி
அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய புத்தகப்பார்வை காண
