பார்வை :

பதினெட்டு தமிழ் பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்கள் மூலம்
கிடைத்த பதில்களை, தகவல்களை "நான்காவது தூண்" எனும் தலைப்பில்
புத்தகமாக்கியிருக்கிறார் மதுமிதா.
முதலாவதாக, தமிழ் சிபி இணைய இதழின் ஆசிரியரான அண்ணா கண்ணனின் நேர்காணல் இந்தப்
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இலக்கியப் பாசறை என்கிற சிற்றிதழ் நடத்தியது முதல் தமிழில் வெளியாகும் பல
இதழ்களில் பணியாற்றியிருக்கும் இவர் தலைமைப் பண்பு குறித்து கூறும் போது,
"நான் சுமார் முப்பது வேலைகளைப் பார்த்திருக்கிறேன். எந்த வேலை கிடைத்தாலும்
அதற்கு உண்மையாக உழைத்தேன். அதுதான் என்னை மேலே கொண்டு வந்தது. எனக்கு என்ன
தெரியும் என்று நான் கேட்க மாட்டேன். என்னால் எதுவும் முடியும் என்பேன். என்ன,
தெரியாத வேலை எனில் கற்றுக் கொண்டால் போயிற்று. தேவையே கண்டு பிடிப்புகளின்
தாய் என்பதை நான் அறிவேன். தேவைப்பட்டால் நியாயத்திற்கு உட்பட்டு எதுவும்
செய்வேன்.
கனவு, உழைப்பு, திட்டமிடும் திறன், பேச்சாற்றல், துணிச்சல், விடாமுயற்சி
போன்ற பல நற்குணங்கள் என்னிடம் இருக்கின்றன. எனவே தலைமைப் பண்பு தானே வந்து
சேர்ந்தது." என்கிறார்.
இந்தக் கருத்தில் அவருடைய தன்னம்பிக்கை தெரிவதுடன் வரும்
வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதைத் துணிச்சலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற
நம்பிக்கையையும் சேர்த்து விதைக்கிறார்.
மேலும் இவரது ஏழே எழுத்தில் அமைந்த கவிதை ஒன்றும் இந்த நேர்காணலில் இருக்கிறது.
அது
ஈ
சீ
தா
போ
ஏ
பே
ஓ
-இந்தக் கவிதையில்
ஈ -என ஒருவன் இரக்கிறான்
சீ -என அடுத்தவன் விரட்டுகிறான்
தா -என கேட்கிறான்
போ -என மறுக்கிறான்
ஏ -என அதட்டுகிறான்
பே -என அஞ்சுகிறான்
ஓ -என மூன்றாமவன் புரிந்து கொள்கிறான்
என்ற அடிப்படையில் இது அமைந்துள்ளது. உரையாடல் பாணியில்
அமைந்தது இது. முழுவதும் ஓரெழுத்து ஒரு மொழியில் ஆனது.
தமிழில் ஈ என்று ஒருவன் கேட்டால், கேட்டவன் கீழாகவும், கொடுப்பவன் மேலாகவும்
இருப்பதாகப் பொருள். தா என்று ஒருவன் கேட்டால் கேட்டவனும், கொடுப்பவனும் சம
நிலையில் இருப்பதாகப் பொருள். ஏ என ஒருவன் கேட்டால் கேட்டவன் மேலாகவும்,
கொடுப்பவன் கீழாகவும் இருப்பதாகப் பொருள். ஈ என முதலில் கேட்டவனே ஏ எனவும்
கேட்கிறான். முதலில் கேட்ட போது மறுத்தவன், தொனி மாறும்போது அஞ்சிக்
கொடுக்கிறான். இறுதியில் உள்ள ஓ மிகவும் செறிவான சொல் அது. கவிதையின்
உட்கருத்தைப் புரிந்து கொண்டதற்கான அடையாளமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படியெல்லாம் கவிதை எழுதிக் கொல்கிறானே என்றும் கொள்ளலாம். "
என்று இதற்கு ஒரு விளக்கமும் அளித்திருக்கிறார்.
இரண்டாவது நேர்காணலில் திசைகள் இணைய இதழின் ஆசிரியர் அருணா சீனிவாசன்
பத்திரிகை குறித்து நிறையச் சொல்லியிருந்தாலும் அவர் மனதைப் பாதித்த விஷயம்
பற்றிச் சொல்லும் போது,
“ அவ்வப்போது நாம் வாழ்க்கையில் சந்திக்கிற ஆயிரம் விஷயங்கள் இருக்கு.
கோயில்களில் வெறுமையாகப் பார்த்துக் கொண்டு தூண்களில் சாய்ந்திருக்கும் ஏழை
வயோதிகர்களைப் பார்க்கிறப்போ எனக்குள்ளே சொல்லத் தெரியாத சங்கடம் ஏற்படும்.
முதுமை கொடியது. அதிலும் வறுமை கொடியது.
பாதித்த நிகழ்வுன்னா "தூரத்து உறவினர் ஒருத்தர் தன் தாயை வயோதிகர் இல்லத்தில்
சேர்த்தது. ரொம்ப நாள் மனசை அழுத்தியது . எப்படி இப்படி செய்தார்? என்று.
இன்னொன்று, சாலை சந்திப்புகளில் தருமம் கேட்டு கண்களில் மிரட்சியும்
ஆர்வத்தையும் தாங்கி நிற்கிற குழந்தைகள். அதிகரிக்கும் வன்முறைகள் , மதத்தின்
பெயரால் , பிறந்த பிறப்பின் பெயரால் எழும் கலவரங்கள்... இப்படி பாதிக்கும்
நிகழ்வுகள் ஏராளமாக இருக்கு...”
என்று குறிப்பிடுவது நமக்குள்ளும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தப்
பாதிப்புகளைத் தவிர்க்க குடும்பங்களில் பராமரிப்புகள் அவசியம் என்பதைப்
பள்ளிக்கூடங்களிலேயே, பாடங்களாக வைத்து வலியுறுத்தப்பட வேண்டும்.
மூன்றாவது நேர்காணலில் மங்கையர் மலர் ஆசிரியர் அனுராதா சேகர்,
“பெண்களுடைய பாரம்பரிய வேர்கள் எல்லாம் குடும்பத்தில்தான் இருக்கனும். சாதனைப்
பூக்கள் எல்லாம் வெளியே பூக்கலாம்... என்று பெண்களுக்கு குடும்பத்தில்தான்
முதலில் அக்கறை இருக்க வேண்டும்”
என்று சொல்லி ,
“பெண்கள் என்னதான் படித்து எவ்வளவுதான் சிறந்த இடத்துக்குப் போனாலும், அவர்களை
உடலளவில் எடை போடும் ஆண்கள் தான் மிக அதிகம். நல்ல குணமுள்ள, அறிவுள்ள பெண்ணை
விட அழகான பெண்ணைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். அதேபோல் அன்பான, பொறுப்பான
ஆண்மகனை விட படாடோபமானவனைத்தான் பெண்கள் மணக்க விரும்புகிறார்கள். இதனால்
வரும் சிக்கல்களை இப்போது நாம் சமுதாயத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.”
என்று இருபாலினரிடையே உள்ள மனநிலையைச் சொல்லி, இந்தச் சமுதாயச் சிக்கல்களைத்
தவிர்க்க சிந்திக்கவும் வேண்டும் என்று நம்மைத் தூண்டுகிறார்.
நான்காவது நேர்காணலில் காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் இலக்கியம் குறித்து
அதிகமான தகவல்களைச் சொல்லியிருந்தாலும் ஒரு இடத்தில் நட்பு குறித்து
குறிப்பிடும் போது,
“ நட்புங்கிறது எனக்கு ரொம்ப முக்கியமான விஷயம். உறவுகளை விட நட்புதான் சின்ன
வயசிலிருந்தே முக்கியமா இருந்திருக்கு. நண்பர்கள் உலகம் முழுவதும்
இருக்கிறார்கள். அடிக்கடி சந்திக்காத உறவுகள் கூட ஆழமான உறவுகள்தான். "
என்று சொல்லி எழுத்துலகில் நட்பு அதிக அளவில் கிடைப்பதையும் அந்த நட்பில்
நட்பும், புரிதலும் ஆழமாக இருக்கிறது என்பதையும் உணர்த்தியிருப்பது எழுத்துலகில்
இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
ஐந்தாவதாக, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சிறுகதை, குறுநாவல்,
நாவல் ஆகியவற்றுக்கு எளிமையான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருப்பது நன்றாக
இருக்கிறது. இருப்பினும் அவர்
“நாம் யாருக்கு எழுதுகிறோம்னு முதல்ல தெரிஞ்சுக்கனும். எதுக்காக எழுதுகிறோம்?.
அசிங்கமா எழுதினா பிழைப்பை நடத்த முடியுமே தவிர, அடுத்தாப்புல வர்ற தலைமுறையை
வழி நடத்த முடியாது. தரமா இருக்கனும். தரமில்லாத எழுத்துக்கள் ஒரு கால
கட்டத்தில் பரபரப்பா இருக்கும் அதுக்கப்புறம் விலை போகாது. நீண்ட நிலைத்த
புகழைக் குடுக்காது.”
என்று எழுத்தாளர்கள் எழுதுவதில் தரமிருக்க வேண்டும் தரையிறங்கி விடக்கூடாது
என்றும் அறிவுறுத்துகிறார். மேலும் ,
“ இலக்கியம்னா ஒரு இலக்கு இருக்கனும். அதுதான் இலக்கியம்"
என்று அழுத்தம் வேறு கொடுக்கிறார்.
ஆறாவதாக, கல்கி ஆசிரியர் சீதாரவி, அவர் பத்திரிகைக்கு வந்த விதம் பற்றியும்
அவருக்கு அதிலுள்ள ஈடுபாடு பற்றியும் அதிகமாகத் தெரிவித்துள்ளதுடன் இசையில்
அவருக்கு வந்த ஆர்வத்தையும் தெரிவித்திருக்கிறார்.
சிறுகதை, நாவல்களில் சங்கீதம் பதிவு செய்யும் நீங்கள்,
அடுத்து சங்கீதத்தை வேறு என்ன படைப்பில் பதிவு செய்யப் போகிறீர்கள் எனும் ஒரு
கேள்விக்கு ,
“எது நம்மை அதிகமாகப் பாதிக்கிறதோ அதுதான் நம்முடைய இயல்பாகிறது. கதைகள் வழியே
இந்தக் கலை பற்றி சொல்ல வேண்டும் என்றும் ஆசை இருக்கு. திட்டமிட்டுச் செய்வது
கஷ்டம். அமைய வேண்டிய நேரத்தில் அமையும்."
என்று பதிலளித்திருக்கிறார். உண்மையிலேயே கதைகள் கற்பனைகளாக இருந்தாலும் அதில்
வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் பார்த்த, பாதித்த சம்பவங்களை மையமாகக்
கொண்டுதான் அமையும்.
ஏழாவதாக, தினமணிக் கதிர் பொறுப்பாசிரியராக இருந்த சுகதேவ், சமுதாயத்திலும்
இலக்கியத்திலும் உள்ள குறைபாடுகளைப் பெரும்பான்மையாகச் சுட்டிக்
காட்டியிருந்தாலும் அவர்,
“ படைப்பாளிகள், படைப்பை விட தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் போக்கு பலமாகிக்
கொண்டு இருக்கிறது. எழுத்தை அடையாளமாக வைத்து, இவர்கள் முகத்தைப் பூதாகரமாகப்
பெரிதாக்கிக் காட்டி, சினிமாவைப் போல் பரபரப்புக் காட்டி, வினை, எதிர்வினை
என்று சொல்லி, பதிலுக்குப் பதில் காரசாரமாக விமர்சனம் செய்வது, அதைப்
படிக்கிற நல்ல வாசகன் அந்த ஏரியாவிலேயே இருக்க மாட்டான் பயந்து ஓடிவிடுவான்.
நல்ல வாசகன் நவீன இலக்கியத்தைப் படிக்கலாம் என்று வருகிறவன் மிரண்டு, பின்
வாங்கக் கூடிய போக்குதான் இன்றைய நிலவரமாக இருக்கிறது. படைப்பாளிகளுக்குள்ளே
ஒரு நல்ல ஆரோக்கியமான மனநிலை இல்லை. படைப்பாளிகள் எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது."
என்று படைப்பாளிகளது கருத்து வேறுபாடுகளுடன் படைப்பாளிகளுக்கு இடையேயான
கருத்து வேறுபாட்டையும் தவிர்த்து நல்ல கருத்துக்களைப் படிப்பவர்களிடையே
பரப்ப வேண்டுமென்கிறார்.
எட்டாவதாக, துக்ளக் ஆசிரியர் சோ நேர்காணலில் விருப்பமில்லாமல் கேள்விகளுக்கு
பதில் அளித்தது போல் தோன்றுகிறது. எனவே பதில்களில் முழுமையைக் காண முடியவில்லை.
இருப்பினும் துக்ளக் அட்டைப் படத்தில் கழுதைங்க படம் போடுவதற்கான விளக்கத்தில்,
"கழுதை கிட்ட இருந்து சுமையை தாங்கற குணத்தை மனுஷன் கத்துக்கணும். சுமையைத்
தாங்கிக்கிட்டு கம்ப்ளைண்ட் இல்லாம இருக்கற குணத்தை மனுஷன் கத்துக்கணும்."
என்று சாணக்கிய நீதி சொல்வதை தெரிவித்திருக்கிறார். மனிதனுக்கும் கழுதையைப்
போன்று சுமைகள் அதிகம்தான், ஆனால் அதற்குக் கிடைக்கும் பலன்கள் என்னவோ
குறைவுதான். கழுதைக்கு சுமையைக் கொடுப்பது கழுதையில்லை. ஆனால் மனிதனுக்கு
சுமைகளைக் கொடுப்பது இன்னொரு மனிதன் என்பதுதான் இங்கு வேடிக்கை.
ஒன்பதாவதாக, நக்கீரன் ஆசிரியர் கோபால் நேர்காணலைப் படிக்கும் போது
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு பணம் மட்டுமில்லை உழைப்பின் வேகம்
அதிகமாக இருக்க வேண்டும். அத்துடன் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் துணிவும்
அதிகமாக இருக்க வேண்டும் என்று உணர முடிகிறது. பல விருதுகள் வாங்கியிருப்பது
பற்றி கேட்ட ஒரு கேள்விக்கு,
"பெரிய விருதுகள் குடுத்தாங்க. கடைசியா பெரியார் விருது குடுத்தாங்க. பெரியார்
விருது கிடைக்கிறது சாதாரண விஷயமில்லை. இரண்டு மாநில அரசுகளும் என்னைப்
பாரட்டி நிறைய கொடுத்திருக்கு. இந்தியாவிலே சிறந்த பத்து இளைஞர்கள்ல ஒரு
இளைஞனா தேர்ந்தெடுத்து 97-ல கொடுத்திருக்காங்க. உச்சநீதிமன்ற நீதிபதி
கிருஷ்ணய்யர் விருது கூட கொடுத்திருக்காங்க. அவார்டு கிடைக்கிறது பெரிய விஷயம்.
ஆனா அதுவே நமக்கு சோறு போட்டுறாது "
என்றும் தெரிவித்து விருது வாங்குவது பெரிய விஷயமாக இருந்தாலும், விடாமல் நமது
பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியை
அடைய முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்வது பொலிருக்கிறது.
பத்தாவதாக, நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியர் நிலா என்கிற நிர்மலா ராஜீ தனது
நேர்காணலில் இணைய இதழ்கள் பற்றி நிறைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
“அச்சு இதழ்களை விட இணைய இதழ்களில் பன்னாட்டு தமிழ் சமூகங்களின் வாழ்வியல்
தாக்கம் அதிகம் வெளிப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் இணைய இதழ்களின்
முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அச்சு இதழ்கள் வளரும் எழுத்தாளர்கள் நெருங்க இயலாத அளவிலேயே உள்ளன. இணைய இதழ்கள்
புதிய எழுத்தாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதோடு அவர்களை வார்த்தெடுக்கும்
பயிற்சிக் களங்களாகவும் அமைகின்றன. அந்த விதத்தில் இணைய இதழ்கள் இளைய
சமுதாயத்தில் தமிழார்வத்தைத் தூண்டும், அணையாமல் பாதுகாக்கும் அரிய பணியைச்
செய்கின்றன என்பது என் கருத்து.
அதே சமயம் இணைய இதழ்கள் சிற்றிதழ்கள் போல்தான் என்பதால் பிரபலமானவர்களின்
எழுத்துக்களை அதிகம் காண முடியாது. எத்தனை தரமானதாக இருந்தாலும் புதிய
எழுத்தாளர்களின் படைப்புகளை வாசகர்களைப் படிக்கத் தூண்டுவதற்கு தனி முயற்சி தேவை."
என்று இணைய இதழ்களுக்கு சிற்றிதழ்களைப் போல் வாசகர்கள் குறுகிய வட்டத்தில்
இருந்தாலும், உலகம் முழுவதும் பரவலான வாசகர்கள் வைத்திருப்பது இணைய
இதழ்கள்தான் என்கிறார்.
பதினொன்றாவதாக, தென்றல் ஆசிரியர் மதுரபாரதி வங்கிப் பணியிலிருந்த போது அந்த
வங்கிக்கான இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தது முதல் பல்வேறு தமிழ், ஆங்கில
இதழ்களில் நிறையப் படைப்புகளைப் படைத்திருக்கிறார். இவருக்கு இன்றைய இளைஞர்கள்
நிலை மாற வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கிறது. இதற்காகவே பாரதி இயக்கம்
என்கிற அமைப்பை நண்பர்கள் சிலரது உதவியுடன் சேர்ந்து துவக்கியிருக்கிறார்.
இந்த அமைப்பின் மூலம் வெற்றி கிடைத்ததா என்று கேட்கும் போது,
"வெற்றி, தோல்வி இரண்டும் கிடைத்தது. கவியரங்கம்,பட்டிமன்றம் மட்டுமில்லாமல்
சட்டம், இயற்கை மருத்துவம் மற்றும் பல துறை வல்லுனர்களை அழைத்து வந்து
பயனுள்ள சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தோம். அந்த வகையில் வெற்றிதான். ஆனால்
என்னால் இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. அதுதான் தோல்வி. டி.வி.யும் கணினியும்
அவர்களைத் தீவுகளாக்கி விட்டன. பிற மனிதர்களைச் சந்திப்பதில் அவர்களுக்கு
ஆர்வமில்லை. மிகுந்த புத்திசாலிகள் நல்ல சம்பளம் தரும் பணிகளுக்குச் சென்று
விடுகிறார்கள். அவர்களுக்குப் படைப்பார்வம், சமுதாய நாட்டம், அறிவுப் பசி
இல்லை. வேலையில்லாப் பட்டதாரிகள் என்கிற ஒரு சமூகமே அருகிப் போய்விட்டது.
பொருளாதார ரீதியில் இது நல்லதுதான். ஆனால் இவர்கள்தாம் தார்மீகக் கோபத்தைப்
படைப்புகளாக்கிக் கொண்டிருந்தார்கள். வசதிகளும் வாய்ப்பும் வந்ததும் சக்தி
வாய்ந்த படைப்புகள் குறைந்து விட்டன."
என்று இன்றைய இளைஞர்கள் பணம் சம்பாதிக்கும் ஒரு நோக்கத்தில்
மட்டும் சென்று கொண்டிருக்கிறார்கள். இது மன அழுத்தம் தரும் விஷயமாகும்.
இளைஞர்கள் இந்த மனப் போக்கிலிருந்து விடுபட்டு பாதி நேரத்தை இலக்கியம், ஆன்மீகம்
போன்ற மாற்று வழிகளில் செலவிட்டால் நல்லது என்று வழிகாட்டுகிறார்.
பன்னிரண்டாவதாக, ரசனை, நமது நம்பிக்கை இதழ்களின் ஆசிரியராக உள்ள மரபின் மைந்தன்
முத்தையா இலக்கியத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்பதை ஆனித்தரமாகச் சொல்கிறார்.
“பழைய இலக்கியங்கள் அதனால்தான் இன்றைக்கும் நமக்கு பயன்படுகிறது. வாழ்க்கையில்
சிக்கல்கள் வரும்போது அவர்கள் இலக்கியங்களைத் தேடிப் போயிருக்கிறார்கள். அதைப்
படித்து அதில் வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறார்கள். இல்லை ஒரு புத்தகத்தை
வழிபாட்டு நூலாக வைத்து அதனிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறார்கள்.”
என்று கூறி நம்மால் படைக்கப்படும் படைப்புகள் மனித வாழ்க்கைக்கு
வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என்கிறார்.
பதின்மூன்றாவதாக உயிர்மை இதழின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், உயிர்மையில்
எழுதப்படும் தலையங்கங்கள் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறதே என்கிற
கேள்விக்கு ,
"என்னுடைய தலையங்கங்கள் அறிவு ஜீவியின் பார்வை அல்ல. பொது மனிதனின் உணர்வு.
அநீதியை எதிர்த்து, ஒவ்வொரு பொது மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு கோபம். அது
ஆய்வு ரீதியா எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளோ, அலசல்களோ அல்ல. கண் முன்னால்
அதைப் பார்த்த உடன் ஏற்படக்கூடிய கேலி, கோபம், அபத்தத்தைப் பார்த்து
ஏற்படக்கூடிய ஏளனம். நாம் வாழும் சூழலில் உள்ள கோபமும், ஏளனமும்,
விமர்சனமும்தான் உயிர்மையில் உச்சகட்ட கோபமாகப் பதிவு செய்யப் படுகிறது. "
என்று தலையங்கங்கள் கடுமையாக இருப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார். மேலும்
விமர்சனங்கள் பற்றி சொல்லும் போது,
"தமிழில் சொல்லப்படுகிற பெரும்பாலான விமர்சனங்கள், பாராட்டுகள் இரண்டுமே
சந்தர்ப்பம் சார்ந்ததாகவும், தனி மனித உறவுகள் சார்ந்ததாகவும், ஒரு விதத்தில்
பொய்யானதாகவும் இருக்கிறது. பொய் மிகவும் அலுப்பு தருகிறது. அசூயையாக
இருக்கிறது. ஏனென்றால் எனக்கு படைப்பு என்பது போதையூட்டக் கூடிய, மிகவும்
கிறங்க வைக்கக் கூடிய அந்தரங்கமான அனுபவம். விமர்சனங்கள் என்பது பல்வேறு காரண
காரியங்களுக்காகச் சொல்லப்படுகிற ஒரு தொந்தரவு."
என்று விமர்சனத்தையும் விமர்சிக்கத்தான் செய்கிறார்
பதினான்காவதாக, கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன் நேர மேலாண்மையில் சிறப்பு
பெயர் பெற்ற இவர் நேர மேலாண்மை குறித்து நிறையவே சொல்லியிருக்கிறார். கூடவே,
“எழுத்துப் பணியில் ஐம்பது சதவிகித நிறைவுதான் இருக்குது. இன்னும் நிறையச்
செய்யணும். சமுதாயத்தில அந்தத் தாக்கங்களைக் கண்கூடா பார்க்கனும்னு ஆசையா
இருக்கு. பலபேர் படிச்சிட்டு எந்தத் தாக்கத்தையும் தெரியப்படுத்தாம
போயிட்டிருப்பாங்க. அலையை உண்டாக்கணும். அரசியல் விழிப்புணர்ச்சியை உண்டாக்கணும்.
அரசியல்வாதிகளின் மோசமான ஏமாற்று அணுகு முறைகளுக்கு இரையாகி, கண்மூடித்தனமாக
நடந்து கொள்கிறார்களே, அதில் மாற்றங்கள் ஏற்படுத்தணும், இப்படி சில அரசியல்
கனவுகள் கூட இருக்கு. நல்ல சூழல் உருவானா, வழக்கமான அரசியல் பாணியா இல்லாம,
அஸ்ஸாமில் மெஹுந்தான்னு ஒரு மாணவர் தலைவர் முதல்வரா ஆனார். அதுமாதிரி நல்ல ஒரு
அரசியல் சூழல் ஏற்படுத்தி, எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றோர் தலைமையிலே நல்ல அரசியல்
பணியெல்லாம் சிறப்பா செய்யணும்னு ஆர்வமெல்லாம் இருக்கு.”
என்று அரசியலுக்கு அவர் வரும் ஆர்வத்தையும்
வெளிப்படுத்துகிறார். லேனா தமிழ்வாணனுக்கும் அரசியலுக்குள் நுழையும் ஆசை
இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
பதினைந்தாவதாக, இலக்கிய பீடத்தின் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன்
"உலகத்திலேயே உழைத்தால் ஊதியம் கிடைக்கும் என்கிற எண்ணம்தான் எல்லோருக்கும்
இருக்கும். விவசாயிகள், கட்டிடம் கட்டுவோர், தொழிலாளர்களுக்கெல்லாம் உழைத்தால்,
பண்டம் விற்றால்தான் பணம் கிடைக்கும். இல்லையென்றால் பணம் கிடையாது. ஒண்ணுமே
இல்லாம, உழைத்தாலும், உழைக்கா விட்டாலும் ஒன்றாம் தேதியன்று கையெழுத்து போட்டு
பணம் வருகிறதென்றால் அது அரசாங்க உத்தியோகம்தான். அதனால்தான் அரசாங்க
உத்தியோகத்தின் மேல் அவ்வளவு மோகம். அதை வைத்துத்தான் இன்றைக்கு அரசியலே
நடக்கிறது."
என்று அரசாங்க உத்தியோகத்தையும், அதை வைத்து பிழைப்பு நடத்தும்
அரசியல்வாதிகளையும் சாடுகிறார். அரசியல்வாதிகள் வருகிற சம்பளக் குழு
பரிந்துரையை அமுலாக்குவதற்கு முன்பாக அரசு வேலைகளை விட தனியார் நிறுவனப்
பணிகளுக்கு, குறிப்பாக உடல் உழைப்பு பணியில் இருப்பவர்களுக்கு அதிக ஊதியம்
அளிக்க வழி வகை செய்ய வேண்டும். அப்போதுதான் இளைஞர்களிடம் அரசுப்பணி, தனியார்
பணி என்கிற வேலைப் பாகுபாடில்லாத நிலை வருவதுடன் அரசுப்பணியில் உள்ள மோகம்
குறையும் என்பதையும் மறைமுகமாக வலியுறுத்துகிறார். மேலும்,
"எழுத்தாளனுக்கு கலைமாமணி விருது கொடுக்க வேண்டும், மூன்று பேருக்கு கொடுக்க
வேண்டும் என்று ரொம்ப போராடியிருக்கிறேன். நாடகத்தில் நடிக்கிறவங்க,
சினிமாவிலே நடிக்கிறவங்க, பாடகருக்கெல்லாம், இவங்களுக்கெல்லாம் ஏராளமாக
குடுக்கிறாங்க. இயல், இசை, நாடகம்னு பெயர் வைத்துக் கொண்டு இயலை விட்டு
விடுவோம். இசை, நாடகம் மன்றம் என்று மாற்றுங்கள் என்று வாதாடினேன். அறிவியல்,
புதினம், கவிதை எழுதுற நல்ல எழுத்தாளனுக்குக் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் பெயரை மாற்றி விடுங்கள் என்றேன். கலைமாமணி விருது
எழுத்தாளனுக்கு பெரிய கௌரவம் என்று நினைக்கிறேன். "
என்று எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும். எழுத்தாளர்களுக்கு உயரிய விருது
அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசை சாடத்தான் செய்கிறார். தமிழக அரசும்
சினிமா, தொலைக்காட்சி போன்றவைகளில் செலுத்தும் கவனத்தை நல்ல இலக்கிய
விஷயத்திலும் காட்டி இலக்கிய எழுத்தாளர்களுக்கு கலைமாமணி விருது கூடுதலாக
அளிக்க முன் வர வேண்டும்.
பதினாறாவதாக, வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் நேர்காணலில் முதன் முதலாக
தமிழில் தொழில் இதழ் ஒன்றைத் துவங்க தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளுடன் அதில்
வெற்றி பெற்றதையும், தன்னுடைய முயற்சியின் தொடர்ச்சியாக இன்று நிறைய தொழில்
இதழ்கள் வருவதையும் நினைவு கூர்கிறார். இத்துடன் பத்திரிகை தொடங்க
விரும்புபவர்களுக்கு,
“பத்திரிகையை வெறும் தொழிலாகச் செய்ய முடியாது, அப்படி தொழிலாகத் தொடங்கிய
பெரிய நிறுவனங்கள் தோல்வியை அடைந்திருக்கின்றன. பத்திரிகை தொடங்கினால் அதற்குப்
பின்னான உறுதியான சமுதாய நோக்கு இருக்க வேண்டும். நிர்வாகம் கற்றுக் கொள்ள
வேண்டும். உணர்ச்சி வசப்பட்டவர்கள் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள். உணர்வுகளை
கட்டுப்படுத்தி நிர்வாகம் கற்றுக் கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்கும் மனோபாவம்
இருக்கணும். மற்ற தொழில் பொருள் விற்கவில்லையென்றால் தகுந்த நேரம் பார்த்து
விற்றுக் கொள்ளலாம். பத்திரிகை அப்படியில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
வேஸ்ட் பேப்பர் ஆகி விடும். மிகப்பெரிய இடர் உள்ள தொழில் இது. நாணயம்
முக்கியமான விஷயம்.”
என்று அறிவுறுத்தவும் செய்கிறார்.
பதினேழாவதாக, தி தமிழ் டைம்ஸ் ஆசிரியர் ஜெயபாஸ்கரன் ,
“இலக்கியம் என்பதே ஒரு நிகழ்விலிருந்து பிறப்பதுதான் ஒரு இலக்கியவாதியின் கடமை
என்பது, தான் சார்ந்த சமூகத்தில் நிலவுகிற பிரச்சனைகளை உன்னிப்பாகக் கவனித்து
எழுதுவது. எதன் மீதும் ஒட்டாமல் தனியாக ஒரு புறம் திரும்பிக் கொண்டு ஒர கவிதை
எழுதுவதால் இந்தச் சமூகத்திற்கு ஒரு பயனும் கிடையாது. அது நீங்கள் உள்நோக்கிய
பயணம் என்று சொன்னாலும் சரி, வெளிநோக்கிய பயணம் என்று சொன்னாலும் சரி. சமூக
நிகழ்வுகளை, சக மனிதனின் வேதனைகளை, அதைக்கூட விட்டு விடுங்கள். நீங்கள்
அனுபவிப்பதை கவிதையாகப் படைக்க வேண்டும். "
என்று கூறும் இவர், மேடைப் பேச்சிலும் வித்தியாசமான கேள்விகளின்
அடிப்படையிலேதான் பேசுவதாகத் தெரிவிக்கிறார்.
"உதாரணமாக, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்றால் கழுதைக்கு ‘ ஏன்
கற்பூர வாசனை தெரியணும்’ என்று கேட்கிறேன். மயிலே மயிலேன்னா இறகு போடாது
என்றால், ‘அது ஏன் இவர்களுக்கு இறகு போட வேண்டும்? இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு
கேள்வி. ஏராளமான கேள்விகள் அடிப்படையில்தான் நான் பேசுகிறேன். “ நீங்கள்
பேசும்போது, உங்களின் பார்வை புதிய பார்வையாக இருக்கிறது. ஒரு பிரச்சனையை
எப்படி பார்க்க வேண்டும் என்பது உங்களுடைய உரையின் வாயிலாகத் தெரிகிறது. "
என்று சிலர் சொல்வார்கள்."
என்று சொல்லும் இவர் எழுத்து, மேடைப்பேச்சு மட்டுமில்லாமல்
நம் செயல்கள் அனைத்தும் சமுதாய நோக்கத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
கடைசியாக,மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் ஸ்ரீ.ஸ்ரீராம் பத்திரிகை துறைக்கு வர
விரும்புவோர்க்கு,
“பத்திரிகைத் துறைக்கு வர விரும்பும் பலரை இன்றும் நான் சந்திக்கிறேன்.
அவர்களில் பெரும்பாலானோர் கிராமத்திலிருந்து வேலை நிமித்தமாகச் சென்னைக்கு
வந்தவர்கள். பலருடைய குடும்பங்களும் வறுமையானவைதான். இவர்களுடைய சம்பளத்தை
எதிர்பார்த்து எத்தனையோ வீடுகளின் அடுப்பு எரிவதற்குக் காத்திருக்கிறது. ஆனால்
நெஞ்சைத் தொடும் நிஜம் என்னவென்றால் நன்கு படித்திருந்தாலும் பத்திரிகைப்
பணியில் கிடைக்கும் ஊதியம் மிகச் சொற்பமே. கணிணி தொடர்பான பத்திரிகைகளின் லே-அவுட்
பணிக்குக் கிடைக்கும் ஊதியத்தை விட Creative Work எனப்படும் எழுத்துத்
துறைக்குக் கிடைக்கும் ஊதியம் மிகக் கொஞ்சம்தான். இது தமிழுக்கே உரிய சாபக்கேடு
போலும். ஆனால் ஆங்கிலப் பத்திரிகைகளின் நிலை அப்படியில்லை. அங்கு நிலை எவ்வளவோ
தேவலாம் என்று தோன்றுகிறது. ஆனால் எல்லோராலும் அந்தப் பணிகளில் அமர முடியாது.
சரி, பணம் போகட்டும்... பேராவது கிடைக்கும், ஒரு அங்கீகாரம் கிடைக்கும்...
என்றெல்லாம் எதிர்பார்த்து வந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். இன்றைய பத்திரிகை
உலகில் மிகப் பெயர் பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சரி அது போகட்டும்... நம் எண்ணத்தை வெளிப்படுத்த வாய்ப்பு என்று எண்ணிணால்,
அதற்கும் வழியில்லை, இன்றைய பத்திரிகை உலகில்... இன்றைய பத்திரிகைகள்
பெரும்பாலானவை அரசியல் கட்சிகள் சார்ந்தும். இயக்கங்கள் சார்ந்தும் இயங்குவதால்,
அங்கே நமக்கேயுரிய நல்ல எண்ணத்தையோ, நம் சிந்தனைகளையோ, கதை, கட்டுரை என்று
எப்படியும் வெளிப்படுத்த முடியாமல் போகிறது. காரணம் அவ்வளவு கட்டுப்பாடுகள்.
இப்படி ஒரு சூழ்நிலையில் பத்திரிகை உலகுக்குள் ஒரு வித கனவோடு நுழைந்தால்
ஏமாற்றமே. இவற்றைத் தெளிவுபடுத்தி விட்டு, இவை போன்றவைகளை எதிர்கொள்ளத் தயாராக
இருந்தால் மட்டுமே பத்திரிகை உலகிற்கு வாருங்கள் என்று கனவு காணும் இளைஞர்
பட்டாளத்திடம் மனத்தை கனமாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் இப்போது ...”
என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்.
-இப்படி பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களில், அவர்களுடைய
பார்வையில் இன்றைய பத்திரிகை உலகம் மட்டுமல்ல இலக்கியம் , ஆன்மீகம், மற்றும்
சமுதாயத்தின் மேலான அவர்களுடைய எண்ணங்களைக் காண முடிகிறது. நிறைய விபரங்களைத்
தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நூலில்,
நூலாசிரியர் மதுமிதா பேச்சு வழக்கிலிருக்கும் வார்த்தைகளை
அப்படியே பயன்படுத்தியிருப்பதால் இந்த நூலைப் படிக்கும் போது மிகச்
சாதாரணமாகத் தெரிகிறது. எழுத்து நடையில் சிறிது மாற்றம் செய்திருக்கலாம்.
மேலும் நேர்காணல் கண்ட அனைவரிடமும் இன்றைய கல்வி நிலை, பத்திரிகைக்கு வர
விரும்புபவருக்கு சொல்ல விரும்புவது போன்ற கேள்விகளையே திரும்பத் திரும்பக்
கேட்டிருப்பதால், நேர்காணல் நடத்தியவருக்கு வேறு கேள்விகள் தெரியாதோ என்பது
போன்ற ஒரு எண்ணத்தை படிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது. மேலும் நேர்காணலில்
பதிலளித்தவர்களிடம் அவர்கள் மனதில் இருக்கும் பல உண்மையான விபரங்களை அறிய வேறு
புதிய கேள்விகளைக் கேட்டிருக்கலாம். கூடுதலான தகவல்கள் கிடைத்திருக்கும்.
இருப்பினும் சென்னை, ஸ்ரீ விஜயம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த
" நான்காவது தூண் "
பத்திரிகை துறையில் இருப்பவர்கள், பத்திரிகைக்கு வர
விரும்புபவர்கள், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பயின்று வரும்
மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயச் சிந்தனை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய
புத்தகம்.
-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண
