
நகைச்சுவை எழுத்தாளரான தேனி.எஸ்.மாரியப்பன்
எழுதியிருக்கும் இந்த வழிகாட்டிய மேதைகள் எனும் நூலில் அறிஞர்கள்,
தலைவர்கள் என்று முக்கியப் பிரமுகர்களின் வாழ்வில் நடந்த மனித நேய சம்பவங்கள்
சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் சிறுவர்களுக்கு மட்டுமில்லை.
தான் மட்டுமே அறிவாளி, தன்னால் மட்டும்தான் எதையும் செய்ய முடியும் என்ற
அகம்பாவத்துடன், பிறரை மட்டம் தட்டிக் கொண்டே, தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக்
கொண்டிருக்கும் பலருக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமையக்கூடும்.
உதாரணமாக,
திறமையானவர்களை மட்டம் தட்டிப் பேசுவதெற்கென்று ஒரு கூட்டம் எப்போதும்
இருக்கும். அப்படி பேசுபவர்கள் அவமானப்பட்டு நிற்பதும் அடிக்கடி நடக்கும். நம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணண் அவர்களின் வாழ்க்கையில்
நடந்த ஒரு சம்பவம்.
"டாக்டர் ராதாகிருஷ்ணண் அவர்கள் ஒருமுறை லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு
வெள்ளைக்கார கனவான் குடியரசுத் தலைவரை மட்டம் தட்ட எண்ணி வலிய வந்து பேசினார்.
“ சார், உங்கள் நாட்டில் மனிதர்கள் கறுப்பு, மாநிறம், வெளுப்பு என்று பல
நிறங்களில் இருக்கிறார்கள். உங்களுக்கு நிறத்தில் கூட ஒற்றுமை இல்லை
பார்த்தீர்களா? ஆனால் எங்களைப் பாருங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே வெள்ளை
நிறம்தான்” என்றார்.
உடனே நம் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணண், “ ஆமாம், நீங்கள் சொல்வது
உண்மைதான். உலகத்தில் குதிரைகள் பல நிறங்களில் இருக்கின்றன. ஆனால் கழுதைகள்
எல்லாம் எங்கும் ஒரே நிறத்தில் இருக்கின்றன.” என்றார்.
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட அந்த வெள்ளைக்காரர் அவமானப்பட்டு
நின்றார். "
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு பலருக்கும் அவரவர்
நம்பிக்கைதான் என்கிற பதிலே சரியானதாக இருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கையிலும்
வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.
" பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் ஒரு முறை மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது முன்று மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் “எப்படி நீங்கள் கடவுள்
இல்லை என்று சொல்லலாம்?" என்று கேட்டனர்.
அதற்குப் பெரியார், “ மூன்று பேர்களும் அவரவர் கடவுளைத்தான் ஏற்றுக்
கொள்கிறீர்களே தவிர , மற்ற இருவரின் கடவுள்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஆக
உங்களுக்கே தெரியாமல் நீங்கள் மூவருமே நாத்திகத்தைப் பரப்புகிறீர்கள்.
அதனால்தான் நான் கடவுளே இல்லை என்று சொல்லுகிறேன், புரிகிறதா? என்றார்.
மூவரும் வாயடைத்துப் போனார்கள்."
-இப்படி பல நல்ல தகவல்களையும், பல அறிஞர்களின் வாழ்க்கையில் நடந்த
நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியிருக்கும் இந்த நூலை
கோயம்புத்தூர்,
விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண
