........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-13

பக்கம்- 160     விலை-ரூ 70.00

 

 கடோபநிஷத்  

-ஸ்ரீ உமாஷக்தி-

 கிழக்கு பதிப்பகம்
- வரம் வெளியீடு -
(Varam , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.
 

பார்வை :

வாழ்க்கையின் முடிவு மரணம் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மரணத்துக்குப் பின்னாலும் எல்லோருக்கும் தனி வாழ்க்கை ஒன்று இருக்கிறது என்கிறது இந்த "கடோபநிஷத்" மரணதேவனான எமன் நசிகேதன் எனும் பாலகனிடம் மூன்று வரங்கள் அளிக்கிறான். அந்த மூன்று வரங்களில், மூன்றாவது வரம் தான் மரண ரகசியம். இந்த ரகசியத்தில்தான் மரணத்துக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று எமன் சொல்கிறான். எமன் பாலகன் நசிகேதனுக்குச் சொன்ன விஷயங்கள்தான் கட உபநிஷதம்.

யார் இந்த நசிகேதன்? இவனிடம் மட்டும் மரணத்திற்குப் பின்னால் நடக்கும் மர்மமான விஷயங்கள் ஏன் விளக்கப் பட்டன? யாரும் அறியாத ரகசியத்தை மரணதேவனான எமனே பாலகனான நசிகேதனுக்குச் சொல்ல வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது? என்பதுடன் "நித்தியம்" எனும் நமக்கு நிரந்தரமாகக் கிடைப்பது எது? "அநித்தியம்" எனும் நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவது எது? போன்ற கட உபநிஷதம் எனும் கடுமையான விஷயங்கள் இந்த கடோபநிஷத் நூலில் பகுதி ஒன்றில் விளக்கப் பட்டுள்ளது.

பிறக்கும் போது எதுவும் கொண்டு வராத நாம், மரணத்தின் போதும் எதுவும் கொண்டு செல்லப் போவதில்லை. இருப்பினும், இந்த இடைப்பட்ட வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறோம். இந்த ஆசைகள் நமக்கு வருவதற்கான காரணங்கள் என்ன?

இந்த ஆசையில் நாம் செய்வது நமக்கே தெரிவதில்லை. நம் செயல்கள் நமக்கு நியாயமாகத் தெரிந்தாலும் பிறருக்குத் தவறாகத் தோன்றுகிறது. இந்தத் தவறுகள் வராதவாறு நாம் இந்த வாழ்க்கைப் பயணத்தில் பயணிப்பது எப்படி?

நம் தேவையை விட நம் சந்ததியினருக்குத் தேவையானதைத் தேடி ஓடுகிறோம். துவக்கத்தில் சாதாரணமாக இருக்கும் நாம் , பிறரைப் பார்த்து நம் ஓட்டத்தையும் அதிகமாக்குகிறோம். இந்த ஓட்டத்தில் நமக்கு சுமைகள் அதிகமாகிறதே தவிர சுகங்கள் இருப்பதில்லை. நம் வாழ்க்கை நமக்கே சுமையாகிப் போய்விடுவது ஏன்?

நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமாகவே நம் எண்ணங்கள் இருக்கிறது. இந்த எண்ணங்கள் ஏற்படுத்தும் விரிசல்கள் நம்முடைய உறவையும்,நட்பையும் பிரித்து விளையாடி விடுகின்றன. இவ்விளையாட்டின் முடிவுகள் பெரும்பாலும் இழப்புகளாகவே இருக்கின்றன. இந்த இழப்புகள் வராமல் தவிர்ப்பது எது?

நாம் எதிர்பார்த்த எல்லாமே நடந்து விடுவதில்லை. இதனால் நம்மை அறியாமலே நமக்குள் தாங்க முடியாத கவலைகள் வந்து உட்கார்ந்து கொண்டு நம்மைச் செயல்பட விடாமல் தடுத்து விடுகிறது. கூடவே நம்மைத் தவிக்கவும் விடுகிறது. இந்த தவிப்பில் இருந்து தப்பிக்க நாம் செல்ல வேண்டியது எங்கு?

கடைசியில் இந்த வாழ்க்கையே இப்படித்தானா? நமக்கு இதிலிருந்து விடிவு கிடைக்காதா? நமக்கு மரணம் வராதா? என்று அலுத்துப் போய் மரணத்தைத் தேடினாலும், அது உடனே கிடைத்து விடுவதில்லை. அதற்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கைக் கஷ்டங்களிலிருந்து நம்மை விடுவிப்பது யார்?

-என்பது போன்ற நம் வாழ்க்கையில் வரும் பல கேள்விகளுக்கு கடோபநிஷத்தின் உட்பொருளில் விடை இருக்கிறது.

இந்நூலின் இரண்டாம் பகுதியில் மரணத்திற்குப் பின்னாலும் நாம் வாழ இப்போதைய வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்? கட உபநிஷதம் இந்த வாழ்க்கைக்குக் கூறும் வாழ்வியல் கருத்துகள்தான் என்ன என்பதை எளிமையாக சுவையான குட்டிக்கதைகளுடன் விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர் ஸ்ரீ உமாஷக்தி.

கிழக்குப் பதிப்பகத்தின் வரம் வெளியீடான கடோபநிஷத் எனும் இந்நூல் மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கும்? என்பதை விட இப்போதைய வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை சுவையாக விளக்குகிறது.

 

-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.