|
புத்தகப்பார்வை-16

பக்கம்- 168 விலை-ரூ
70.00
|
ஆபிரஹாம் லிங்கன்
-பாலு சத்யா-

கிழக்கு பதிப்பகம்
(Kizhakku , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701.
|
|
பார்வை :
1

இதுவரை துணுக்குகளாகவும், ஒரு பக்க
கட்டுரைகளாகவும், தன்னம்பிக்கை புத்தகங்களுக்குள்ளும் இடம் பெற்று வந்த
ஆபிரகாம் லிங்கன், இம்முறை கிழக்குப் பதிப்பகத்தின் உபயத்தில் முழுப்
புத்தகம் முழுவதும் இடம் பெற்றுள்ளார். தோல்விகளை நிறைய சந்தித்து அமெரிக்க
ஜனாதிபதி ஆனவர் ஆகையால் மேடைப் பேச்சாளர்களுக்கு உடனடியாக கை கொடுப்பவர்.
ஆபிரகாம் லிங்கன் பிறந்தது முதல் சுடப்பட்டது வரையிலான முழுச் சித்திரத்தை
சுவாரஸ்யமான நாவல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்
பாலு சத்யா.
முன் தோன்றிக் காலத்து மூத்த குடியில் பிறந்த தமிழ் வாசகர்கள் அனைவருக்கும்
வெவ்வேறு வடிவங்களில் அறிந்திருந்த விஷயங்களை மிகவும் கவனமாக குறைத்துக்
கொண்டு லிங்கன் பற்றிய புதிய வாழ்க்கை குறிப்புகளையும், நிகழ்வுகளையும்
வாசகர்களுக்கு அளித்துள்ளமை மிகவும் பாராட்டுகுரியவையாகும். லிங்கனின்
வாழ்க்கைப் போக்குகளை விவாதிக்கும் வேளையில் வந்து குவியும் 18-ஆம் நூற்றாண்டு
அமெரிக்க கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும் வாசகர்களுக்கு Extra Bonus.
ஒரு சட்டமன்ற தேர்தலின் பொழுது ஒரு அமெரிக்க குடியானவன். லிங்கனிடம்
வாக்களிப்பதற்கு காசு கேட்டுள்ளான் என்ற தகவல் அரசியல் ஆய்வு நிபுணர்களுக்கு
மிகவும் வேண்டிய ஒன்றாகும்.
வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் அவரைப் பற்றி இந்திரன், சந்திரன், வல்லவன்
தர்மயோகி முடிந்தால் கடவுளின் நேரடி பிரதிநிதி ரேஞ்சுக்கு புகழ்ந்து
தள்ளுவார்கள். ஆனால் அந்த ஆபத்து நேர்ந்து விடாமல் லிங்கனின் சாதி, தவறுகள்,
இயலாமை, முயற்சிகள், தோல்விகள் ஆகியவைகளுடன் அருகில் இருந்து உற்றுப்
பார்த்தது போல் எழுதப்பட்டிருக்கின்றது. அதே வேளையில் அந்த புத்தகத்தைப்
படிக்கும் போது ஏற்படும் சில சிரமங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
1. ஜான் வில்கிஸ் பூத் தன் மனைவி லூஸி ஹேஸிடம் சொல்லிவிட்டு புக்கர் அண்ட்
ஸிபீவர்ட் என்ற சலூனுக்குப் போய் அங்கிருந்த சார்லஸ் வுட் என்பனிடம்
முடிவெட்டிக் கொண்டான். அங்கிருந்து சூரட் போர்டிங் ஹவுஸ் என்ற ஹோட்டலின்
உரிமையாளர் மோதி சூரட் என்பவரைப் பார்த்து பேசினான். லிங்கனின் கொலைக்கு
அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு சின்ன நிகழ்வை சொல்வதற்கு ஏன் இத்தனை
அமெரிக்க பெயர்கள் சராசரி வாசகன் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்வானா?
2. லிங்கன் ஜனாதிபதி பதவி ஏற்றபின் அடுத்த தேர்தல் வருவதற்குள் இடைப்பட்ட
வருடங்களில் லிங்கன் உள்நாட்டுப் போர்களை சந்தித்ததை தவிர வேறு முக்கிய
காரியங்கள் ஏதும் செய்யாததைப் போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. ஏறத்தாழ 40
பக்கங்களை முழுவதும் ஏறக்குறைய போரடிக்கும் வரலாறு வகுப்பு.
3. கறுப்பர் விடுதலையை முதன்முதலாய் யோசித்த முதல் அரசியல் தலைவர் உலகிலேயே
லிங்கன்தான். ஆனால் லிங்கன் - கறுப்பின மக்கள் - அமெரிக்கா ஆகியவைபற்றி
மேலெழுந்த வாரியாக மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி மட்டும் தனியாய்
ஒரு புத்தகம் போகும் ஐடியா ஆசிரியருக்கு உள்ளதா? என்று தெரியவில்லை.
இருப்பினும்கூட தனக்கென எந்த ஒரு ரோல் மாடலையும் பாவித்துக் கொள்ளாமல் சுயமாக
உழைத்த , வெற்றியையும் தோல்வியையும் ஒரே உணர்வுடன் ஏற்றுக் கொண்ட ஆபிரகாம்
லிங்கனைப் பற்றிய பிரத்யேகமான, முழுமையான புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.
இப்புத்தகம் முழுமையடைவதற்காக வலையகங்களிலும், புத்தகங்களிலும் மூழ்கி
முத்தெடுத்துள்ளார். ஆரம்ப நிலை வாசகன் முதல் ஆய்வு நிலை வாசகன் வரை
அனைவருக்கும் பொருந்தும் நூல் இது.
- எஸ்.எஸ்.பொன்முடி.
பார்வை : 2

மரத்தை வெட்டி, வேட்டையாடிப் பிழைக்கும் சாதாரண
குடும்பத்தில் பிறந்த ஆபிரஹாம் லிங்கனுக்கு சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும்
ஆர்வம் தொற்றிக் கொண்டு விட, அதற்காக அவர் பல முறை புத்தகங்களைத் தேடி பல
இடங்களுக்கு நடந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தால் அவ்வப்போது பார்த்து வந்த
வேலையைக் கூட இழந்திருக்கிறார்.
பல்வேறு புத்தகங்களைப் படித்ததாலோ என்னவோ, தனக்கென்று ஒரு நியாயமான கொள்கையை
மனதிற்குள் வகுத்துக் கொண்டு, நேர்மையாக நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
தான் முதலில் வேலை செய்த கடையிலும் சரி, பின் சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணி
புரிந்த போதும் சரி அவருடைய எண்ணம் நேர்மை வழியானதாகவும் பிறருக்கு உதவ
வேண்டுமென்கிறதாகவுமே இருந்தது. இந்தக் காலத்தில் இப்படியிருந்தால்"ஈ" ஓட்ட
வேண்டியதுதான் என்று நீங்கள் நினைக்கலாம். அந்தக் காலத்திலும் ஆபிரஹாம் லிங்கன், அவர் செய்த தொழில்களில் நட்டத்துடனும், தன் குடும்பத்திற்கென்று சம்பாதிக்க
முடியாமலும் வாழ்க்கையை ஏனோதானோவென்றுதான் ஓட்டினார்.
இவர் மேடைப்பேச்சில் பிரமாதமாகப் பேசத் துவங்கி, முதலில் உள்ளுரில் தன் பேச்சைக்
கேட்பதற்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி, அந்தக் கூட்டத்தின் வற்புறுத்தலில்
முதன் முதலாக சட்டமன்றத்திற்கான தேர்தலில் நின்று தோற்றுப் போனார். பின்னர்
நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் மேடைப் பேச்சாலேயே வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் அளவிற்கு அவருடைய பேச்சில்
வசியம் (விஷயம்) இருந்திருக்கிறது. ஆனால் ஜனாதிபதியாக பதவி ஏற்க
ஸ்பிரிங்பீல்டிலிருந்து வாஷிங்டனுக்குச் செல்லத் தேவையான பணம்தான் அவரிடம் இல்லை.
கடன் வாங்கித்தான் போனார்.
ஜனாதிபதி பதவியிலும், மாநிலப் பிரிவினை அதனால் வந்த உள் நாட்டுப் போர்,
இராணுவத் தளபதியின் அலட்சியப் போக்கு என்று பல நிகழ்வுகள் அவர் முன் வந்து
நின்ற போதும் தன்னைப் பற்றியோ, தோல்வியைப் பற்றியோ கவலைப்படாமல் தனது கொள்கையை
விட்டுக் கொடுக்காமல் சிறப்பாகச் செயல்பட முனைந்தார். அவருக்கு உள்நாட்டுப்
போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. அப்போது கறுப்பின
அடிமைகளுக்கான விடுதலைப் பிரகடனத்தை அறிவித்தார். ஜனாதிபதியாக அவர் செயல்படுத்த
நினைத்திருந்த திட்டங்கள் எதுவும் அவரால் செய்ய முடியவில்லை. அதற்குள் மீண்டும்
ஜனாதிபதி தேர்தல் வந்து விட்டது.
இதற்கு முன்பு அங்கு ஜனாதிபதியாக இருந்தவர்கள் ஒரு முறை மட்டுமே பதவி
வகித்திருக்கின்றனர். ஆனால் ஆபிரஹாம் லிங்கன் தான் நினைத்த திட்டங்களை
செயல்படுத்திட இரண்டாம் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். இரண்டாவது
முறையும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். ஜனாதிபதி பதவியில் இருந்து அவர்
நினைத்ததை ஓரளவு
செய்தார். ஆனால் முழுமையாகச் செய்து முடிப்பதற்கு முன்பாகவே ஜான் வில்கிஸ் பூத்
என்பவனால் சுடப்பட்டு இறந்து போனார்.
ஸ்பிரிங்பீல்டிலிருந்து வாஷிங்டனுக்கு ஜனாதிபதி பதவியேற்க போன அதே ரயிலில் அதே
வழியில் வாஷிங்டனிலிருந்து ஸ்பிரிங்பீல்டுக்கு கொண்டு வரப்பட்டு ஆபிரஹாம்
லிங்கன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதுதான் ஆபிரஹாம் லிங்கனின் கதை. இந்த தோல்வியைக் கண்டு சிறிதும் கலங்காத, வறுமையான நிலையிலும் தனது நேர்மை,
கொள்கைகளை விட்டுக் கொடுக்காத, ஆபிரஹாம் லிங்கனைப்
பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல கதையைப் படிப்பது போன்று, படிப்பதற்கு எளிதாக மிகவும் விறுவிறுப்போடு எழுதியிருக்கிறார் இந்நூலாசிரியர்
பாலு சத்யா.
"எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்கிறதோ?" என்று சிறு விஷயத்திற்குக் கூட
அலுத்துப் போவதும் அதற்கு பரிகாரம் தேடுவதுமாக அலைந்து கொண்டிருக்கும்
தன்னம்பிக்கை
இல்லாத கூட்டத்தினர் அனைவரும்
கிழக்குப் பதிப்பகம்
வெளியிட்டுள்ள
இந்த ஆபிரஹாம் லிங்கன் நூலை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்.
அப்படியாவது திருந்த வேண்டும்...!
-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

|