........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-17

பக்கம்- 156     விலை-?

 என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா...

"பேசுவதைப் பற்றி..."

-த.தங்கமணி-

 செல்வம் பதிப்பகம்
A.P.1243, 77 வது தெரு,
12-வது செக்டார்,
கே.கே.நகர்,
சென்னை-600 078.
மின்னஞ்சல்: thangamanit@yahoo.co.in

பார்வை :

சுற்றமும் சூழலும் சாராது ஓர் நிலையில் வாழ்வதே வாழும் வகையாம் சிறப்பு என்னும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்த புலவர் தமிழ்மணி அவர்களின் புதல்வன் தங்கமணி பொறியியல் படித்து விட்டு திரைகடலோடினாலும் திருக்குறளில் உள்ளம் நெகிழ்ந்து, நுண்மான் நுழைபுலம் கண்டு சமீபத்திய தேவைக்கும் ஏற்ற வகையில், வித்தியாசமான அளவில், உரிய வடிவங்களுடன் திருக்குறள் கையடக்க புத்தக வடிவங்களை வெளியிட்டு வருகின்றார், திருக்குறளின் அழகிய, குறுகிய வடிவமும், அதற்குள்ளேயே திணித்து வைக்கப்பட்ட பொருள் திண்மையும் உலகின் இலக்கிய ஆர்வலர்களால் உற்று நோக்கப்பட்டு வருகின்றது. பைபிள், குரான் மற்றும் மார்க்ஸின் மூலதனம் போன்ற நூல்களுக்குப் பின் உலக மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள் என்று ஆய்வுகள் கூறுகின்றன .

மதம் சார்ந்த புனித நூல்களில் காணக் கிடைக்கும் வாழ்வியல் நடைமுறைகள் திருக்குறளில் நிறைந்திருப்பது ஒருவகை ஆச்சர்யமென்றால் அவைகள் மிரட்டலின்றி தோள் மீது கைபோட்டு அசைபோட வைக்கின்ற வகையில் சொல்லப்பட்டிருப்பது இன்னொரு வகை ஆச்சர்யம் எத்தனை முறை Interpret செய்தாலும் உன்னதங்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் நூலான திருக்குறளில்    " பேசுவதைப் பற்றி " மட்டும் தனியாக, சிறப்பாக, பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் வெளியிட்டிருக்கின்றார். செயற்கரிய செயல் செய்த தங்கமணி அவர்கள் மஸ்கட்டில் வாழ்ந்து வருவதால் அவருக்கு புறம் தூய்மை நீரான் அமைந்து அகம் தூய்மை வாய்மையால் காணப்பட மனமுவந்து வாழ்த்துவோம் .

மருமகள் பேசினால் கத்திப் பேசுகின்றாள் என்றும், மாமியார் பேசினால் குத்திப் பேசுகின்றாள் என்றும், குடிகாரன் என்றால் உளறுகின்றான் என்றும், மைக்கில் பேசினால் உரை வீச்சு என்றும், பாராளுமன்றத்தில் விவாதம் என்றும், பிரதம மந்திரிகள் பேசினால் "Talk" என்றும், Management கல்விச் சாலைகளில் "Communication Technology" என்றும் பேச்சு பல்வேறு வகையில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. உலகில் காதலர்களைத் தவிர மீதியுள்ள மனித “ஜீவராசிகள்” அனைவரும் வாய்மொழி மூலம் தான் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்கின்றார்கள். தனிப்பட்ட மனிதர்களின் சொந்த திறமையும், திறன் வளர்த்தலும், குறிப்பிட்ட சமூகக் கூட்டத்தின் புரட்சியும் பேசுதல் மூலமாகவே நடைபெறுகின்றது. இவ்வளவு முக்கியமான பேசுதல் குறித்து வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் திருக்குறள்களை வெவ்வேறு அதிகாரங்களிலிருந்து சேகரித்து வரிசைப் படுத்தி உள்ளார்.
இத்தொகுப்பின் மூலம்

குடிமை, அடக்கம் உடைமை, சொல்வன்மை, இனியவை கூறல், பயன்இல சொல்லாமை, வாய்மை, புறங்கூறாமை, சுவைஅறிதல், அவை அஞ்சாமை என இத்தனை அதிகாரங்களில் பேசுதல் குறித்து, நாவன்மை குறித்து குறள்கள் விரவிக் கிடக்கின்றன என்னும் முக்கிய தகவல் நமக்கு கிடைக்கின்றத . இவற்றில் பேச்சு பற்றிய அறிவுரைகள், எச்சரிக்கைகள் மட்டும் இல்லாமல் மிகவும் நுட்பமான தகவல்களை உள்ளங்கையில் உலகத்தையே வழங்குகின்றார் வள்ளுவர். உதாரணமாக கீழ்க்கண்ட குறள்களைச் சொல்லலாம்.

" நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிடியார் சொல் "

- இதற்கு இனிய சொற்களைப் பேசினால் கேட்பவருக்கு மட்டுமல்ல பேசுபவருக்கும் மகிழ்ச்சியை தந்து புண்ணியம் சேரும் என்று அர்த்தம் .

"துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை சொல் ஏதிலார் மாட்டு "

- இதற்கு நெருங்கிப் பழகுபவரைப் பற்றியே புறம் பேசும் இவர் ஒரு நாள் நம்மைப் பற்றியும் புறம் பேசுவார் என்று பயந்து நம்முடன் யாரும் பழக மாட்டார்கள் என்று அர்த்தம் .

 "ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் சொலில்"

- அறிவில் மிகுந்தவரிடம் அவருக்கு இணையாகவும் சிறப்பாகவும் அறிவில் குறைந்தவரிடம் பேசும் பொழுது எளிமையாகவும் புரியும்படி பேச வேண்டும். கவனச் சிதறலின்றி ஆழமாக இத்தொகுப்பை படித்தால் நம்முடைய “Speaking Attitude” உடனே மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.

திருக்குறளுக்கு இதுவரை எழுதிய உரையாசிரியர்கள் அனைவரும் தம்முடைய மேதாவிலாசத்தையும், புரிய வைக்கின்றேன் பேர்வழி என்று தமது கற்பனைத் திறனையும் புகுத்தி, யானை புகுந்த பாத்திரக்கடையை போல் ஆக்கி விடுவார்கள், விட்டிருக்கின்றார்கள். ஆனால் இந்நூலாசிரியர் த.தங்கமணி திருக்குறள் வடிவத்தை புதுக்கவிதை வடிவம் போல் மடக்கிக் கொடுத்து லேசாகப் புரிய வைத்துப் பின் குறளை விட குறைந்த வார்த்தைகளில் பொருள் தருகின்றார்.

 

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கும் பதிப்பாசிரியரை முத்துக்கமலம் இணைய இதழ் அகத்தான் இன்சொல்லி வாழ்த்துகின்றது .

 

-எஸ்.எஸ்.பொன்முடி.

எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.