பார்வை :

சாதாரணமாக நம் தூக்கத்தைக் கெடுக்கும் கொசுவை விரட்ட
கொசுவர்த்தி வாங்கி வைத்திருக்கும் நாம் நம் வாழ்க்கையின் வளர்ச்சியைப்
பாதிக்கும் சில விஷயங்களை விரட்டுவதற்கு எந்த முயற்சிகளும் எடுத்துக் கொள்வதே
இல்லை.
வாழ்க்கையில் பல விஷயங்களில் நாம் முடிவெடுக்கத் தயங்குகிறோம். பல விஷயங்களைச்
செய்வதற்கு வெட்கப்படுகிறோம். பல விஷயங்களில் நம்மால் முடியாது என்று அதைச்
செய்யப் பயப்படுகிறோம். பல விஷயங்களுக்கு நம்மையறியாமலே கூச்சப்படுகிறோம்.
இவைதான் நாம் வெற்றியைத் தொடத் தடையாக இருக்கின்றன. இவற்றை விரட்டி அடித்து
விட்டால் வெற்றியைச் சுவைத்து விடலாம் என்று இந்த நூலின் மூலம் வெற்றிக்கு ஒரு
வழியைக் காட்டுகிறார் இந்த நூலின் ஆசிரியர்
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் இடம் பெற்றிருக்கும் இந்த தயக்கம், வெட்கம், பயம்,
கூச்சம் போன்ற பொதுவான விஷயங்களை விட்டுவிட்டு நம்மால் முடிந்தவரை
தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். இந்த தன்னிச்சையான செயல்பாட்டிற்கு சில
சின்னக் கதைகளையும், சில உதாரணங்களையும் மேற்கோள் காட்டும் ஆசிரியர் நான்
என்கிற ஈகோ பலரையும் ஆட்டிப் படைக்கிறது. கூடவே சகுனம், சென்டிமென்ட்கள்
போன்ற மூடநம்பிக்கைகளும் முயற்சிக்கே முட்டுக்கட்டை போட்டு விடுகிறது என்று
சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது.
குழந்தையில் துவங்கி பள்ளியில், கல்லூரியில், இன்டர்வியூவில், அலுவலகத்தில்,
குடும்ப உறவுகளில், பிரச்சனைகள் பேசுவதில், முடிவெடுப்பதில் நமக்கு வரும்
தயக்கம், வெட்கம், பயம், கூச்சம் போன்றவைகளைச் சொல்லி அதற்கு நாம் எப்படி
முடிவெடுப்பது என்று சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார். இவற்றை நாம்
தவிர்க்கும் பட்சத்தில் நமக்கு தவறான பெயர்கள், தோல்விகள் கூடவே மன அழுத்தம்
போன்றவை வரும் என்று அடையாளம் காட்டவும் செய்கிறார்.
இவை வராமல் பார்த்துக் கொள்ள நமக்கு சில வழிமுறைகளைக் காட்டி உதவும் ஆசிரியர்,
கடைசியில் தயக்கம், வெட்கம், பயம் கூச்சம் போன்றவைகளால் அவர்களுக்கு வந்த
வாய்ப்பை இழந்து வெற்றியைத் தவற விட்டவர்கள், இறுக்கமாய் பற்றிக் கொண்டு
வெற்றியை ருசித்து விட்டவர்கள் என்று சிலரை பட்டியலிட்டும் காட்டுகிறார்.
இந்த நூலில் நூலாசிரியர் சிபி கே. சாலமன் முன்பு எழுதிய புத்தகங்களின்
சில கருத்துக்களும் பல இடங்களில் தென்படுகின்றன. நூலில் சில பக்கங்களில் ஒரு
எழுத்து இல்லாததால் ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைகளுடன் வேறு சில இடங்களில் சில
எழுத்துப் பிழைகளும் இருக்கின்றன. இக்குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த விரட்டி அடி! நூலைப்
படித்தால் வெற்றியை விரட்டிப் பிடிக்க சில வழி முறைகள் கிடைக்கலாம்.
-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண
