........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-20

பக்கம்- 128     விலை-ரூ 60.00

 

ரினோ -பாகம்1

-கனிஷ்கா-

 திருமதி.கனிஷ்கா
5, முரளி பவனம்,
இந்திரா நகர்,
மேலகரம் (அஞ்சல்)
தென்காசி-627818,
திருநெல்வேலி மாவட்டம்.
கைத்தொலைபேசி : 9486453253
e-mail: kalpa2011@gmail.com.

பார்வை :

சிறுவர்களுக்கான நாவல்களில், கதையைப் படிப்பவர்களுக்கு ஒரு படிப்பினை, அதாவது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதே சமயம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தவறாகப் போகும் போதும், தவறாகப் பயன்படுத்தும் போதும் ஏற்படும் விபரீதங்கள் இப்படியிருக்கும் என்று வித்தியாசமாக, நாம் எதிர்பார்க்காத கற்பனையில் அச்சுறுத்தி அதிலிருந்து விடுவிக்க நடத்தும் போரட்டமாகவும், அதில் வெற்றி பெறுவதாகவும் கதைகள் அமைக்கப்படும். அல்லது, வெற்றிக்கான இலக்கை அடைய பல மாயஜாலம் கூடிய திகிலான சம்பவங்களோடு, பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்பது போன்று அமைக்கப்படும்.

 

ரினோ என்கிற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த சிறுவர் நாவலையும் அந்த முயற்சியில் படைக்க முற்பட்டிருக்கிறார் இந்நூலாசிரியர். ஆனால், திகிலான ஆங்கிலப் படங்களில் வரும் காட்சிகளையும், தமிழ் படங்களில் வரும் காட்சிகளையும் ஒரே படமாகச் சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ?  அப்படி ஒரு கதையாக இந்தக் கதை அமைந்து விட்டது.

 

ரினோவில் விஞ்ஞான கண்டுபிடிப்பையும் அதனோடு சம்பந்தமில்லாத  சித்தர்கள் நிகழ்ச்சி போன்ற ஏதோ ஒன்றையும் சேர்த்து கதை ஒரு மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கதையின் நாயகனான ரிஷியின் குடும்பத்தின் சில உறுப்பினர்கள், ஒரு சில எதிர்ப்பாளர்கள், கதையின் முக்கியப் படைப்பான ரினோ என்று இவர்களை மட்டும் கொண்ட  மிகக் குறுகிய வட்டத்துக்குள் கதை அமைக்கப் பட்டுள்ளது. மேலும் கதையில் ரினோ தோன்றுவதற்கான காரணம், எதிர்ப்பாளர்கள் தோன்றுவதற்கான காரணம் போன்றவை வலுவில்லாமல் ஏனோதானோ என்று இருக்கிறது. 

 

இந்தக் கதையின் கடைசியில் புதிய படைப்பான ரினோ எங்கே சென்றது என்று சொல்லப்படாமல், அது எங்கே சென்றது என்பதைத் தெரிந்து கொள்ளவும், இந்தக் கதையில் சொல்லப்படும் "கல்பா" உலகிற்கு செல்லவும்,  அந்த உலகிற்குச் செல்லும் நாயகன் அப்போது வரும் பல எதிர்ப்புகளையும்,   திகில்களையும் கடந்து வெற்றி அடைவதையும் காண நாம் ரினோவின் இரண்டாம் பாகத்திற்குச் செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரினோவின் இரண்டாம் பாகம் நாம் முன்பே சொன்ன சிறுவர்களுக்கான கதை அமைப்புடனும், குறைகள் களையப்பட்டும் புதிய ரினோவாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

 

இந்த நாவலில் சிறுவர்களுக்கு ஏற்றதான  நடை பயன்படுத்தப் படவில்லை என்கிற குறையுடன் நூலிற்கான எழுத்து வடிவமும் சிறுவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்கிற குறையும் சேர்ந்தே இருக்கிறது. ரினோ எனும் இந்த சிறுவர் நாவல் இந்நூலாசிரியர் கனிஷ்காவின் முதல் நாவலாக, ஏன் முதல் கதையாகக் கூட இருக்கக் கூடும். எனவே இந்தக் குறைகளைத் தவிர்த்து  இவரின் புதிய படைப்பான ரினோவை நாம் படித்து மகிழலாம். கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ள சிறுவர்களுக்கும் ரினோவை அறிமுகப்படுத்தி வைக்கலாம்.

 

   -தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.