........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-23

பக்கம்- 121   விலை-ரூ 80.00

 

 

ரினோ பாகம்-2
அண்டவெளியில் ஒரு அற்புத கிரகம்

-கனிஷ்கா-

 பாலம்
இ-7, பாரத் அடுக்ககம்,
ஆர்.வி.நகர்,
அண்ணா நகர் கிழக்கு,
சென்னை-600 102.
 

பார்வை :

என் மனைவியும் நானும் கடற்கரையோரம் காலாற நடந்து கொண்டிருந்த பொழுது என்னைப் பார்த்து, "உலகம் உருண்டை என்கிறார்களே... அதன் வளைவுப் பகுதிகள் உலகில் எங்கெங்கே அமைந்திருக்கின்றன?" என்றொரு கேள்வி கேட்டாள்.  இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் யோசித்து,  "பூமியின் வளைவுப் பகுதிகள் பூமிக்குள் இருந்து கொண்டு பார்த்தால் புலப்படாது. பால் வீதியில் இருந்து செயற்கைக் கோள் வாயிலாகப் பார்க்கும் பொழுதுதான் உலகம் உருண்டை என்பது தெரியும்." என்றேன்.

 

இப்படி என் மனைவிக்கும் எனக்கு மட்டுமில்லை... கிராமத்தில் டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பவர்கள் முதல் முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்கள் வரை... இந்த வான்வெளியைப் பற்றி பலத்த சந்தேகங்கள் அவ்வப்போது எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன.

சகோதரி கனிஷ்கா அவர்கள் வான்வெளி, கிரகங்கள் போன்றவற்றின் சில உண்மைத் தகவல்களை வைத்துக் கொண்டு சிறுவர்களைக் கவரும் வகையில் சுவையான புனைவை உருவாக்கி இருக்கிறார். சிறுவர்களுக்கான "Science Fiction" நாவலை பெரியவர்களுக்கும் பயன்படும் வகையில் சினிமாத்தனமான நிகழ்வுகளைக் கலந்து கொடுத்திருக்கிறார். பூவுலகில் நம் மனித சமுதாயம் சந்தித்திருக்கும் எரிமலை, சுனாமி, புயல், வெள்ளம் போன்றவைகளைத் தவிர்த்து பால்வெளியில் பலரும் அறியாத சில தகவல்களை ஆங்காங்கே வழங்கியிருக்கிறார்.

ரினோ, ரினா, ரிஷி, சுமோ என்கிற கதாபாத்திரங்கள் கதை முழுக்க உலா வருகின்றனர். இப்பெயர்கள் அனைத்தும் ஏறக்குறைய இணையான உச்சரிப்பில் இருப்பதால் படிப்பவர்களைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. "In depth reading" பழக்கங்களை உடையவர்கள்தான் அத்தியாயங்கள் பார்க்காமல் தொடர்ந்து படித்து முடிப்பார்கள். ஆனால் சிறுவர்கள், துவக்க நிலை வாசகர்கள், துணைத் தலைப்புகளின்றி படிப்பதால் திணறி விடுவார்கள். துணைத் தலைப்புகள் இல்லாத குறையைப் பதிப்பாளர்களாவது சரி செய்திருக்க வேண்டும். ரினோ -பாகம் 1 படிக்காதவர்களுக்காக சிறிய கதைச் சுருக்கத்தை ரினோ-பாகம் 2  துவக்கத்தில் நூலாசிரியர் எழுதியிருக்கலாம்.

சிறுவர்களின் அறிவுத் திறன், சிந்தனைப் போக்கு, ஆர்வம் போன்றவை ஒவ்வொரு பத்து வருட இடைவெளியில் மிகப் பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. நுணுக்கமான சிறுவர்களின் இந்த உணர்நிலை மாற்றத்தை சரியாகப் புரிந்து கொண்டு நாவல் களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இந்நூலாசிரியர். கல்பனா சாவ்லா விண்வெளியில் சாம்பலாகி போன பின்பும், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்று வெற்றியுடன் திரும்பி விட்ட பின்பும் அண்டவெளி-பால்வெளி-வான்வெளி பற்றிய ஆர்வம் இந்தியர்களிடையே இப்போது அதிகரித்துள்ளது.

இச்சூழலில் இப்புத்தகம் ஒரு நல்ல முயற்சி. இருப்பினும் பொன்னியின் செல்வன், அலை ஓசை கால கட்டத்தைப் போல் இந்தக் காலத்தில் பாகம் பாகமாய் இழுத்துக் கொண்டே செல்லாமல் ஒரே புத்தகமாக நச்சென்று எழுதி வெளியிட்டால் விஞ்ஞானக் கதை எழுத்தாளர்கள் மத்தியில் கனிஷ்காவும் ஒரு இடத்தைப் பெற முடியும்.

    -எஸ்.எஸ்.பொன்முடி. 

எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.