........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-27

பக்கம்-104                               விலை -ரூ50.00

 

சித்த ரகசியம்

-டாக்டர்.P.சுகுமாரன்-

கிழக்கு பதிப்பகம்
- நலம் வெளியீடு -
(Nalam , An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601, 42009603, 42009604
தொலைநகல் : 044-43009701
e-mail: sales@kizhakku.in

பார்வை :

 

ென்னை கிழக்கு பதிப்பகம் மருத்துவம் சார்ந்த புத்தகங்களை தனது நலம் வெளியீட்டின் மூலம் வெளியிட்டு வருகிறது. சித்த ரகசியம் எனும் சித்த மருத்துவத்திற்கான அறிமுக நூலை வெளியிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சித்த்ர்களின் தமிழ் சைவ பாரம்பர்ய மருத்துவ முறைகள், மருந்துகள் மற்றும் நோயின் தன்மைகள் குறித்து நூறு பக்கங்களுக்குள் டாக்டர்.P.சுகுமாரன் எளிமையாகவும், சுவையாகவும் விளக்கியுள்ளார். இவர் சித்த மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படித்து தமிழ்நாடு அரசு மருத்துவப்பணித் துறையில் சித்த மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வருபவர். பழைய கெட்டி அட்டை சித்த மருத்துவப் புத்தகங்களை தூசிகளுக்கிடயில் பார்த்து சலித்த நமக்கு அழகிய வடிவில் மிக முக்கியமான யோகாசன செய்முறைக் குறிப்புகளையும் இணைத்து வழங்கியுள்ளார் இந்நூலாசிரியர்.

 

 விந்து குறைபாடு, மூச்சிறைப்பு போன்றவற்றிற்கு ஓராண்டும், நீரிழிவு, சிறுநீரக நோய்களுக்கு பத்து மாதங்களும், வயிறு சம்பந்தமானவற்றிற்கு ஏழு மாதங்களும், கட்டி, இரத்தம் தொடர்பான நோய்களுக்கு ஆறு மாதங்களும் சித்த மருந்து சாப்பிடும் கால அளவாக நூலாசிரியர் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். உடல் உழைப்போ அல்லது அலுவலகப் பணியோ, தினமும் வேலைக்குச் சென்று  குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என்கிற இந்த சூழலில் சித்த மருந்துகள் எடுத்துக் கொள்வது சரியாக இருக்குமா? என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

வாதம், பித்தம், கபம் என்று மூன்று வகை உட்ற்கூறுகள் நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களால் புறத்தன்மையிலும், இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும்  துவர்ப்பு என்னும் அகத்தன்மையிலும் உடம்பு நோய்தன்மை அடைகின்றது அல்லது நீங்குகின்றது. சித்த மருத்துவத்தின் மருந்துகள்  இலை, பூ, காய், வேர், கிழங்கு போன்ற தாவரப் பொருள்களாலும், உலோகங்கள், காரசாரங்கள், பாசானங்கள், உபரசங்கள் போன்ற தாதுப் பொருட்களாலும், இறகுகள், எலும்புகள், சங்கு, சிப்பி போன்ற ஜீவப் பொருட்களாலும் செய்யப்படுகின்றது என்கிற குறிப்புகள் சித்த மருத்துவத்தின் விஞ்ஞானத் தன்மைகள் வெளிப்படுகிறது.

 

ஒரு மிகச்சிறிய பாக்டீரியாவிலிருந்து உயிர் உண்டாகி தாவரங்கள், புழு, பூச்சி, விலங்கு, மனிதன் என்று பரிணாம வளர்ச்சியில் கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலை பெற்றுள்ளோம். நமக்கு நோய் உண்டாகும் போது நம்மோடு பரிணாம வளர்ச்சியில் கலந்த உயிரிப் பொருட்களைச் சிறிய மாற்றங்களுக்குப் பிறகு மருந்தாக பயன்படுத்துவதே சரியானதும், மிகச்சிறந்த வம்ச நீட்டிப்புக்கான வழி என்பதும் சித்த மருத்துவம் நமக்கு அளிக்கும் பாடமாகும்.

 

சித்த மருத்துவத்தின் மிகச் சிறந்த அம்சமாகிய யோகாக்கலை இன்று உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. ஆனால் சித்த மருத்துவ முறைகள் ஓரளவு கிழக்காசிய நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சித்த மருந்துகளும், அவற்றின் சேர்க்கையும் நம் தேசத்தின் சொத்தாகும். இவற்றை சந்தைப் படுத்துவதையும், உலக அளவிலான அறிவு சார் சொத்துடமை ஆக்குவதையும் தனி அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

தலை வலி, உடல் வலி, எலும்பு மூட்டு வலி ஆகியவற்றிற்கு சித்த மருத்துவ தைலங்களும், எண்ணெய்களும் இன்றும் உடண்டி நிவாரணத்திற்குப் பயன்பட்டு வருகிறது. இதையும் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கலாம். இன்றைய அலோபதி மருந்துகளில் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் சித்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்கிறார்கள். இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று தெரியவில்லை.

 

குறிப்பிட்ட சில தோல் நோய்களுக்கும், நாள்பட்ட சில நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மட்டுமே சிறப்பான மருந்துகள் இருக்கின்றன என்கிற கருத்தும் நிலவுகிறது. அவை குறித்த தகவல்களையும் நூலாசிரியர் வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று மக்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக வடிவேல் குறிப்பிடுவார். ஆங்கில மருத்துவம் விஞ்ஞான அடிப்படையிலானது மற்றும் உயிர் காக்கக் கூடியது என்கிற நம்பிக்கை மக்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டது.

 

இச்சூழலில் சித்த மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவ முறையை மீண்டும் பிரபலப் படுத்துவதோடு ஆங்கில மருத்துவத்தில் ஏற்படும் தீமைகளையும் அறிவியல் பூர்வமாக விளக்கிட வேண்டியுள்ளது. சித்த மருத்துவம் நமக்கானது, நம்முடையது போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது நம் கடமை என்று உணர வைக்கின்றது இந்நூல். மேல்நிலைப் பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் இது போன்ற நூல்களை துணைப்பாட நூல்களாக அறிவித்தால் தமிழன் தன்னையும் தன் தொன்மயையும் நினைத்துப் பெருமிதம் கொள்ள முடியும்.

    -எஸ்.எஸ்.பொன்முடி. 

எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.