........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-31

பக்கம்-166                            விலை -ரூ50.00

 

 

தப்பி ஓடத் துடிக்கும் தமிழகம்

-அ.கி.வேங்கட சுப்பிரமணியன்-

உந்துனர் அறக்கட்டளை,
4/386, ராம் கார்டன்,
அண்ணா சாலை
பாலவாக்கம்,
சென்னை-600 041.
 

பார்வை :

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாக மாநில அரசிலும் மைய அரசிலும் பல பொறுப்புகளை வகித்த  அ.கி.வேங்கிட சுப்பிரமணியன் தனது அரசுப்பணி ஓய்விற்குப் பிறகு அவ்வப்போது தினமணி நாளிதழில் கட்டுரைகளை எழுதி வந்தார். இந்த கட்டுரைகளை முதலில் "மன்னரா? மனுதாரரா?" என்ற தலைப்பில் ஒரு நூலாக   வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த "தப்பி ஓடத் துடிக்கும் தமிழகம்" என்ற தனது இரண்டாவது நூலையும் சென்னை, உந்துனர் அறக்கட்டளை மூலம் வெளியிட்டிருக்கிறார். 

 

இந்நூலில் அதிகமாக இந்திய அரசியலமைப்புகள் குறித்தும் பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்தும் உள்ளாட்சிகளில் அரசியல் கட்சிகள் இல்லாத அமைப்புகள் உருவாக்கப்படுவதன் அவசியம் குறித்தும் அவ்வப்போது நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாக வைத்துப் பல புள்ளி விபரங்களுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. உண்மையில் இந்தக் கட்டுரைகள் பல முக்கியத் தகவல்களுடன் நமக்குப் பல உண்மைகளைப் புரிய வைக்கிறது.

 

தனது 22 வயதில் சங்கரன் நாயர் என்பவர் தமது ஒரு உரையில், " சாதி முறை, சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்துக்கும் எதிராக உள்ளது" என்று தெரிவித்த கருத்தை எதிர்த்து இந்து பத்திரிகையில் ஒரு வாசகர் கடிதம் எழுதினார். சங்கரன் நாயருக்கு ஆதரவாகச் சாதிக் கொடுமை குறித்து கடிதம் ஒன்றை எழுதி தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாக அறிமுகம் செய்து கொண்ட எட்டயபுரத்துக் கவிஞன் பாரதி அவர் வாழ்ந்த  38 வயது வரை தனது எழுத்தாலும், தனது வீரம் மிக்க  பேச்சாலும்  சுதந்திர வேட்கையைத் தமிழக மக்களிடம் விதைத்தது குறித்து மிகவும் சுருக்கமாகச் சொல்லி தற்காலத் தமிழ் இளைஞர்களுக்கு பாரதி ஓர் ஆதர்சம்தான் என்றும் இன்றைய இளைஞர்கள் ஏறி வெற்றி கொள்ள வேண்டிய சிகரங்களையெல்லாம் கொண்ட இமயமாக இருக்கிறான் இளைஞன் பாரதி  என்று முடித்திருக்கும் "இளமையிலேயே ஓர் இமயம்" என்கிற கட்டுரை சிறப்பாக இருக்கிறது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் கிங் கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காகக் காந்தியின் அஹிம்சை வழியைப் போல் அறவழியில் போராடியதுடன் அவர்களின் ஒப்பற்ற தலைவராகவும் விளங்கியவர். இவருடைய செயல்பாட்டைக் கண்டு வியந்த நோபல் பரிசுக்குழு இவருக்கு மிகவும் குறைவான வயதில் அதாவது 35 வயதில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கியது. இவர் தான் பெற்ற நோபல் பரிசுத் தொகை முழுவதையும் கருப்பு இன மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினார் என்பதுடன் பல அறவழிப் போராட்டங்களுக்குத் தலைமை வகித்த இவர் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது ஒரு கொலை வெறியனால் கொல்லப்பட்டார். அவருடைய வாழ்க்கையை எளிமையாக ஆனால் முழுமையாகச் சொல்லும் "அறவழிப் போராளி" என்கிற கட்டுரை அனைவரும் படிக்கும்படியாக எழுதப்பட்டிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

 

கோயம்புத்தூரில் இருக்கும் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் குறித்து எழுதி அங்குள்ள கட்டிடங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மணம் கமழும் பெயர்கள் குறித்த தகவல்கள், ஆன்மீகம், காந்தீயம் கலந்து வழங்கப்படும் உயர்கல்வி குறித்த தகவல்கள், வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதாமணி ஆகியோர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கோவில்கள், இந்த கோவில் முகப்பில் அனைத்து மதங்களிலும் சொல்லப்பட்ட உயர்ந்த குறிக்கோள்கள் கல்லில் பதிக்கப்பட்ட தகவல்கள் போன்றவை "தரமான தனித்தன்மை" என்கிற கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

"தோட்டத்தில் தொண்ணூறு சதம் கிணறா? " எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் "குறுகிய கால லாபங்களுக்காக நீண்ட காலப் பாதகம் விளைவிக்கக் கூடிய முடிவுகளை எடுப்பது அரசுகளுக்குப் பழக்கமாகப் போய்விட்டது. அதுதான் அடிப்படைப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையைப் பொதுமக்கள் கண்ணோட்டத்தில் அரசும் அரசு ஊழியர்களும் பார்க்க வேண்டும். அரசுக்குக் கிடைக்கும் வருவாய், அது மாநில அரசின் சொந்த வருவாயாக இருந்தாலும் சரி, மைய அரசின் மூலமாக வருவதாக இருந்தாலும் சரி, அது வருவது பொதுமக்களிடத்தில் இருந்துதான். அதில் பாதிக்கு மேல் அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுவது முறையல்ல என்று சுட்டிக்காட்டுவதுடன் தமிழகத்தில் கிராமங்களில் சொல்லப்படும் "தோட்டத்தில் பாதி கிணறு" என்றொரு பழமொழி உண்டு. இங்கு தமிழகத்தில் கிணறு 62 சதவிகிதத்திற்கும் அதிகமாக எடுத்துக் கொண்டு விட்டது. வட்டி என்றொரு அடியில்லாத ஆழ்குழி 20 சதவிகிதம் எடுத்துக் கொள்கிறது. பயிரிடக் கிடைப்பது 18 சதவிகித நிலம்தான். 62 சதவிகித இடத்தை எடுத்துக் கொள்ளும் கிணறு, 18 சதவிகித நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. இது சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்" என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் உள்ள பொறுப்பை இந்த நிலை தெளிவாகக் காட்டுகிறது. அரசு ஊழியர்கள் இந்த நிலையை உணர்ந்து பொதுமக்களின் மதிப்பையும் ஆதரவையும் பெறும் வகையில் செயலாற்ற வேண்டும். அவர்கள்தான் கிணறு. இந்தக் கிணற்று நீரில் "லஞ்சம்" என்ற நஞ்சும், பொறுப்பற்ற தன்மை என்ற "உப்பு நீரும்" கலந்துவிடக் கூடாது" என்று தெரிவித்திருப்பதை அரசு ஊழியர்கள் அனைவரும் படிப்பதுடன் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகமானது என்பதையும் உணர்ந்து உண்மையாகச் செயல்பட வேண்டும்.

 

மேலும் பல பயனுள்ள கட்டுரைகள் இந்த நூலில் இருக்கிறது. இதில் இருக்கும் அனைத்துக் கட்டுரைகளுமே தரமான கட்டுரைகள்தான். எந்த ஒரு கட்டுரையையும் இது சரியில்லை என்று நாம் புறக்கணித்து விடமுடியாது. அனைத்துமே ஆழ்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களைப் போல் ஆழமாகச் சொல்லப்பட்ட கருத்துக்கள். "தப்பி ஓடத் துடிக்கும் தமிழகம்" என்கிற இந்த நூலை தமிழகத்தின் ஒவ்வொரு இளைய சமுதாயமும் படித்துத் தெரிந்து கொள்வதால் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் அவர்கள் நிலை மாற்றப்படுவதுடன் எதிர்கால அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் புதிய கொள்கைகளுடன் கூடிய புதுமைகள் உருவாக்கப்படலாம். இளைய சமுதாயம் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும். ஆரோக்கியமான அரசியல் மாற்றம் உருவாக்கப் பாடுபட வேண்டும்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.