........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-32

பக்கம்-98                              விலை -ரூ50.00

 

 

இது தேனீர் காலம்

-மஞ்சுளா-

கீற்று வெளியீட்டகம்,
1/30H, அழகிய மண்டபம்-629 167,
கன்னியாகுமரி மாவட்டம்,
 

பார்வை :

"சிறு தீக்குச்சியாயினும்பெரும்
நெருப்பாயினும்
எரிதலை உணர்தலே சிறப்பு"

-என்று துவங்கும் இந்த கவிதை நூலில் நூலாசிரியர் தான் பார்த்தவைகளில் ஈர்த்தவைகளையும், பாதித்தவைகளையும் தவிர்க்க முடியாமல் அதைக் கவிதைகளாக்கியிருப்பதாக "உணர்வுகளின் வண்ணங்களில்..." எனும் தனது உரையில் தெரிவித்திருப்பது போல் நூலாசிரியரான கவிஞரின் சமூகப்பார்வை கொண்ட பல கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.

 

"சொல்லத் தெரிந்தும்

சொல்லத் தெரியாதது"

-என்று இரண்டே வரிகளில் காதலைச் சொல்லியிருக்கும் இவர்

 

அஃறிணையும் உயர்திணையும் எனும் தலைப்பிலான கவிதையில்

"சிறகுகளை

வேகமாக அசைத்தது

உடம்பின் பாரம்

குறைந்து

உயரே எழும்ப

முயற்சி செய்தும்

வானில் எழ முடியாதது

ஏன் என்று

பறவை கீழே பார்த்தது

அதன் இரு கால்களை

பிடித்திருந்தன

ஒரு மனிதனின் கைகள் "

-என்று தன்னை விட தாழ்ந்த நிலையிலிருப்பவர்கள் அல்லது தனக்குக் கீழானவர்கள் மேலே எழும்பி விடாமல் இருக்க மனிதன் மட்டும தனது பிடிக்குள் முடக்கிப் போட்டு விடுகிறான். இந்நிலையில் உண்மையான உயர்திணை மற்றும் அஃறிணை எதுவென்று நமக்கு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

 

இந்நூலில் பல கவிதைகள் இடம் பெற்றிருந்தாலும் சில குறுங்கவிதைகளில் பல தத்துவார்த்தமான  கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, "மதிப்பு" எனும் தலைப்பில்

"விளக்கை

ஏற்றும் வரை

தீக்குச்சியை

மதித்தேன்

ஏற்றிய பிறகு

என் காலால்

மிதித்தேன்."

-என்று தனது உயர்வுக்கு பிறர் உதவியை நாடும் சிலர் பின்னால் அவர்களைத் தூக்கி வீசும் நிலையை எளிமையாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

 

இது போல் "முத்து" எனும் தலைப்பில்

"அடிக்கடலுக்கே

அனுமதி கிடைத்திருக்கிறது

 அந்த

வெகுமதி

இருக்க வேண்டுமென்று

ஆழத்தில் இருந்தே

அர்த்தம் வெளிப்பட்டது."

-என்று எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாகத் தேடிச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு மதிப்பும் உயர்வும் கிடைக்கும் என ஆழமான அர்த்தம் காட்டுகிறார்.

 

"கசந்த

சொல்லுக்குப் பின்

கற்கண்டு

உறவேது?"

-என்று கடுமையான வார்ததை உபயோகங்கள் குறைக்கப்படாவிட்டால் இனிமையான உறவுகள் பாதிக்கப்படும் என எச்சரிக்கவும் செய்கிறார்.

 

"தப்பி விட்டன

குஞ்சுகள்!

பாவம்

தாயை மட்டும்

இழந்து விட்டு"

-என்கிற இந்தச் சின்ன கவிதையில் இரண்டு அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது.

1. ஆபத்து என்று வந்த பொழுது தாய் தன் உயிரைக் கொடுத்துத் தன் குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது.

2. தாய்நாட்டில் படித்து விட்டுத் தாய்நாட்டைப் புறக்கணித்து வெளிநாட்டிற்குச் சென்று அதைப் பயன்படுத்திப் பணிபுரியச் செல்லும் சிலரைச் சாடுவதாகவும் படுகிறது.

 

இயற்கையாக நடக்கும் பல விஷயங்களுக்கு எந்த அடிச்சுவடும் இல்லை. ஆனால் மனிதன் மட்டும் தான் பயணித்த பாதைகளில் சுவடுகளைப் பதித்துக் கொண்டே செல்கிறான் என்று "சுவடுகள்" எனும் தலைப்பில் கவிதையாக்கி இருக்கும் கவிஞர் மனிதனாகப் பிறந்த  ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு சுவடைப் பதித்துக் காட்ட வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறார்.

 

இதுபோல் "அவர்கள்" எனும் தலைப்பில் பார்வையற்ற, கை, காலில்லாத, வாயற்ற நிலையில் மனித பொம்மைகள் சில விளையாடுவதாகத் தெரிவித்திருக்கும் கவிதையில் "ஒன்றில்லாவிட்டாலும், அவைகளால் பயனில்லை என்று ஒதுக்கினாலும் அதுவும் பயன்படுகிறது" என்பது போன்ற பயனுள்ள கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்படி பல அருமையான கவிதைகளை மதுரையைச் சேர்ந்த பெண் கவிஞர் மஞ்சுளா எழுதி கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் இருக்கும் கீற்று வெளியீட்டகம் வெளியிட்டுள்ள "இது தேனீர் காலம்" என்கிற பெயரில் தந்துள்ள இக்கவிதை நூலுக்கு தற்போது தமிழக அரசின் சுற்றுலாத்துறைச் செயலாளராக இருக்கும் வெ.இறையன்பு முன்னுரையாக "இருத்தலின் எழுதுகோல்" எனும் தலைப்பிலும், கவிஞர் மு.செல்லா என்பவர் அணிந்துரையாக "தூரிகை துப்பிய வெளிச்சம்" எனும் தலைப்பிலும் இந்நூலைப் பற்றி எழுதியிருப்பது நன்றாக உள்ளது.

     -தாமரைச்செல்வி. 

  முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.