........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-34

ஆவணப்படம்

-இலவச வெளியீடு-

திருக்குறள்
இலக்கிய கண்ணோட்டம் ஆன்மீக கண்ணோட்டம்
விளக்கப்படம்

எழுத்து-இயக்கம்
D.ஞானசூரியன்
தயாரிப்பு, கருத்தாக்கம்
தேவாசீர் இ.லாறி

மனுஜோதி ஆசிரமம்
சத்திய நகரம்,
ஓடை மறிச்சான் அஞ்சல்,
பாப்பாக்குடி- 627 602,
திருநெல்வேலி மாவட்டம், இந்தியா.
தொலைபேசி: 04634- 274543, 274503.
e-mail: manujothi@sancharnet.in

 

பார்வை:

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளுக்கு பல அறிஞர்களால் மதிப்புரை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவர்களுக்கான கண்ணோட்டத்துடன் திருக்குறளுக்கு விளக்கம் அளித்திருக்கின்றனர். இந்தத் திருக்குறளுக்கு திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் மனுஜோதி ஆசிரமம் அமைத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வலியுறுத்திய கல்கி அவதாரமாக அறியப்பட்ட ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்துக்களின் புனித நூலான கருதப்படும் பகவத்கீதை, கிறித்துவர்களின் புனித நூலான பைபிள், இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் போன்றவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி ஒரு புதிய ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் இலக்கியக் கண்ணோட்டத்திலும் சொல்லிய விளக்கங்கள் முற்றிலும் மாறுபட்டது.

 

இந்த மாறுபட்ட கண்ணோட்டத்தை அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று இந்த திருக்குறள் இலக்கிய கண்ணோட்டம் மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டம் என்கிற விளக்கப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. D.உப்பாஸ் ராஜா என்பவரின் முன்னுரையுடன் துவங்கும் இந்தப் படத்தில் முதலில் சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள திருவள்ளுவர் திருக்கோவில், சென்னையிலுள்ள திருவள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை, மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் போன்ற காட்சிப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. திருவள்ளுவர் கோவிலில் திருவள்ளுவர் மூலவராகவும், வலது புறம் வாசுகி அம்மையாருக்கும் இடது புறம் மாரியம்மனுக்கும் தனியாகவும் சன்னதிகள் உள்ளன. மேலும் வல்லப விநாயகர், ஏகாம்பரேஷ்வர், காமாட்சியம்மன், ஆஞ்சநேயர் காலபைரவர், சனீஸ்வரர் மற்றும் பல உப தெய்வங்களுக்கும் இங்கு சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது காண்பிக்கப்படுகிறது. (வெளிப்புறத்தில் உள்ள வள்ளுவர், அவ்வையார் உட்பட சில சிலைகளில் காக்கை எச்சமிட்டு வடிந்திருப்பதும் அழுக்கு படிந்திருப்பதும் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது இவைகளைச் சுத்தம் செய்து படமாக்கி இருக்கலாம் அல்லது இந்தக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்). அடுத்து வள்ளுவர் கோட்டத்திலுள்ள பல இடங்கள் படமாக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை அழகாகப் படமாக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. இது போல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்துடன் அழகாகக் காண்பிக்கப்படுகிறது. இந்தக் காட்சிகளின் பின்னனியில் தமிழ் மொழிதான் உலகின் முதல் மொழி என்பதற்கும், திருவள்ளுவர் குறித்தும் பல சுவையான தகவல்கள் சொல்லப்படுகின்றன.

 

கடந்த 17-06-2005 முதல் 19-06-2005 வர மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டுக் காட்சிகள், மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பன்னாட்டுத் தமிழறிஞர்களுக்கான விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முதல் மாநாட்டில் நடைபெற்ற திருவள்ளுவர் மேடை நாடகம், பன்னாட்டுத் தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்க் கலை விழா, பாராட்டு நிகழ்வுகள் என்று மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் சில முக்கியக் காட்சிப் படங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறார்கள். மலேசியாவில் நடைபெற்ற அந்த உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டை நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது. இந்தக் காட்சிகளின் பின்னனியில் மாநாட்டுத் தகவல்களும், இடையிடையே ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் சொற்பொழிவாற்றிய பல உரைகளில் தெரிவித்த கருத்துக்களில் சில திருக்குறளுக்கு அவர் அளித்த இந்து மதம், கிறித்துவமதம், இசுலாமிய மதம் போன்றவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லப்படுகிறது. திருக்குறளுக்கு ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் புதிய விளக்கத்தைத் தந்திருப்பது புதுமையாகவும் அதே சமயம் கேட்பதற்கு சுவையாகவும் இருக்கிறது.

 

D.லியோ ராஜா என்பவரது முடிவுரையோடு முடிவடையும் இந்த திருக்குறள் இலக்கிய கண்ணோட்டம் மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டம் விளக்கப்படத்திற்கு பின்னனியில் வர்ணனை செய்திருக்கும் L.விஜயா மற்றும் R.வேங்கடபதி ஆகியோரின் குரல்கள் கேட்க இனிமையாக இருக்கிறது. இதற்கான படத்தொகுப்புப் பணியை V.முத்துக்கிருஷ்ணன் என்பவரும் இவருக்கு உதவியாக A.டால்டன் என்பவ்ரும் செய்திருக்கின்றனர். ஒலிப்பதிவை L.ராஜ் என்பவர் செய்திருக்கிறார். இணை இயக்கத்தை P.லாசர் என்பவரும் தயாரிப்பு மேற்பார்வையை D.உப்பாஸ் ராஜா இணை தயாரிப்பை D.லியோ ராஜா என்பவரும் செய்திருக்கின்றனர்.  இந்த விளக்கப் படத்தை கருத்தாக்கம் செய்து தயாரித்திருப்பவர் தேவாசீர் இ.லாறி. இந்தப் படத்தை எழுதி இயக்கி இருப்பவர் ஞானசூரியன்.  திருக்குறள் குறித்து புதிய விளக்கம் அறிந்து கொள்ளவும், மலேசிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளைக் காண விரும்புபவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இந்த விளக்கப்படத்தை இலவசமாக பெற விரும்புபவர்களும்  முத்துக்கமலம் இணைய இதழில் இந்த விமர்சனம் பார்த்த மற்றும் படித்த விபரத்தைத் தெரிவித்து மேற்காணும் மனுஜோதி ஆசிரம முகவரிக்கு ஒரு தபால் அட்டையில் எழுதிப் பெறலாம். வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் வேண்டுகோள் கடிதத்துடன தங்கள் தபால் முகவரியையும் சேர்த்து மனுஜோதி ஆசிரம மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிப் பெறலாம்.

 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.