........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-35

பக்கம்-276                                               விலை:ரூ.170

 

 

 

வெற்றி தரும் மேலாண்மை உத்திகள்
-டாக்டர். ஜி. வி. ராவ்-

ரோவ்சன்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
ப.எண்:180/1A, பு.எண்: 260/1A
ராயப்பேட்டை நெடுஞ்சாலை,
மைலாப்பூர்,
சென்னை- 4.
தொலைபேசி: 044- 24980603 / 24980626 / 24980611
தொலைநகல்: 044- 24980361

பார்வை:

மிகப்பெரும் நிறுவனம் ஒன்றில் 33 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தில் மேலாண்மையில் வெற்றி பெறுவதற்கான உத்திகளைக் கண்டறிந்து அதைப்  பயனளிக்கும் வகையில் நூலாக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். 

 

"எதற்காக இந்த நூல்?" எனும் தலைப்பில் ஒரு சிறு முன்னறிவிப்பு செய்து அதன் பிறகே நம்மை மேலாண்மை செய்யும் வழிமுறைகளுக்குள் அழைத்துச் செல்கிறார். பொதுவாக எப்படி? என்கிற கேள்வியை விட   ஏன்? , எதற்கு? என்கிற கேள்விகள் நமக்கு முன்னெச்சரிக்கையுடன் செல்லும் சிறந்த வழியைக் காட்டக் கூடியது. இதையும் அவரே கேள்வியாக்கி பதிலளித்து ஒரு புதிய துவக்கத்தைத் தந்திருக்கிறார்.

 

மேலாண்மை போன்ற முதன்மைப் பொறுப்பிலிருப்பவர்கள் பதவியில் மட்டுமில்லாது அலுவலகத்திற்குச் செல்வதிலும் , பணிகளைத் துவங்குவதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது சிறப்பான முன்னுதாரணம். பிறரை ஏன் என்று கேட்பதற்கு முதலில் தான் அங்கு இருக்க வேண்டும் என்பது சிறப்பான வழிமுறை. ஆனால் முதன்மையாயிருக்க விரும்பும் பலருக்கும், தன்னைக் கேட்கத் தனக்கு மேல் யாரும் இல்லை என்கிற அகம்பாவம் முதன்மையாக இருப்பதால் இதில் மட்டும் கடைசியாகவே இருக்கிறார்கள். இவர்களெல்லாம் திருந்த வேண்டும்.

 

"ஊழியர்கள் வேலையில் தவறு செய்யும் போது அவர் அந்தத் தவறைச் செய்யாதபடி திருத்தும் பொறுப்பு நிர்வாகத்துக்கு உண்டு. இதில் ஒரு சிலருக்கு ஒரு முறை சொன்னால் போதும், சிலருக்கு அதிகமான காலம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்" என்று ஊழியர்களின் நிலையைச் சொல்லி அவர்கள் தவறைத் திருத்திக் கொள்ள பல வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது உண்மையிலேயே மிகச் சிறந்த யோசனை. சிறு சிறு தவறுக்கெல்லாம் பெரிய தண்டனை அளிப்பதால் அந்நிறுவனத்திற்கு அடுத்து தேவையான ஊழியர் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும் என்பதை மேலாண்மை செய்பவர்கள் உணர வேண்டும்.

 

மாற்றம் என்பது நாளுக்குநாள் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்றத்திற்கேற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற்றம் காண முடியும். இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று எளிமையாகக் கீரை வியாபாரத்தை உதாரணமாக்கிச் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. 

 

எல்லோரிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகள் இருக்கின்றன. நம்முடைய திறமைகளில் எது நமக்கு ஏற்புடையது என்று கண்டறியும் திறனில்லாமல்தான் பலர் பாதை மாறிச் சென்று தோற்றுப் போயிருக்கிறார்கள் என்கிற கருத்துடன் தன்னம்பிக்கை இருந்தால் எந்த செயலிலும் வெற்றியைப் பெறலாம் என்கிற நூலாசிரியரின் அறிவுரை ஏற்புடையதே...

 

விளம்பரமில்லாத எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாது என்பதுடன்  விளம்பரம் சென்றடைய வேண்டியவர்களுக்கு சரியானதாகவும் அவர்களைக் கவரும் விதத்திலும் அமைக்கப்பட அக்கறை செலுத்த வேண்டும். இல்லையெனில், விளம்பரத்திற்குச் செய்த செலவு வீணாகப் போய்விடும் என்று சொல்வது உண்மை. இந்த உண்மை தெரியாமல் பலர் பணத்தையும் தொழிலையும் தொலைத்து இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

 

மேலாண்மை செய்பவர்கள் கடுகடுப்பானவராக, அதிகம் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதிகம் பேசாமல் அன்போடு அளவாகப் பேசி பணியாளர்களின் அன்பைப் பெற்றால் கூடுதலான வேலைகளை வாங்கிக் கொள்ளலாம் என்கிற நூலாசிரியரின் கருத்தை மேலாண்மை செய்பவர்கள் செயல்படுத்திப் பார்க்கலாமே...?

 

நாம் பிறரிடம் பேசுவதன் மூலம் நமக்கு பல புதிய விஷயங்கள் தெரிய வரும். இதனால் பிறரது தேவைகள் தெரிவதுடன் அந்த தேவைகளுக்கேற்ப நாம் உருவாக்கும் பொருள்கள் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று நாம் செய்யும் தொழிலில் மாற்றம் செய்யவும், புதிய தொழில்கள் துவங்கவும் வாய்ப்புகள் பொது இடங்களில் கலந்துரையாடுவதன் மூலமே தெரிய வரும்  என்கிறார்.

 

ஒரு செயலில் இறங்கி விட்டால் அதில் தயக்கம் காட்டக்கூடாது. அதில் தோல்வி வந்தால் துவண்டு விடக்கூடாது. அந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தூக்கியெறிந்து வெற்றியைத் தேட வேண்டும். ஆனால் இதற்காகக் குறுக்கு வழிகளை தேர்வு செய்யக்கூடாது. அது நிரந்தர தீர்வாகாது என்று அறிவுறுத்தவும் செய்கிறார்.

 

"பணத்திற்காக குறுகிய நோக்கத்துடன் தவறு செய்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இது போன்றவர்கள் முதலில் தங்கள் செயல் உண்மையானது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவர்கள் தவறுக்கு நாமே தெரியாமல் உடந்தையாக இருந்து விடுகிறோம். இதனால் நேர்மையானவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள். உண்மையானவர்கள் நம்மை விட்டுச் சென்று விடாமலும், தவறு செய்யும் மனப்பான்மையை யாரிடமும் வளர விடாமலும், நாம் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்." என்று மேலாண்மைப் பணியிலிருப்பவர்களுக்கு வழி காட்டுகிறார்.

 

கால நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், நேர்முகத் தேர்வு மூலம் நிர்வாகியைத் தெர்ந்தெடுக்கும் வழிமுறைகளையும், நிர்வாகிப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மூன்று தலைப்புகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

 

நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் ஊழியர்கள் எப்படிப் போனால் என்ன என்கிற எண்ணங்களை மாற்றி அவர்களுக்கும் தகுந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இக்காலத்தில் ஊழியர்களுக்கு ஊக்கம் தரும் ஆக்கங்கள் இருந்தால்தான் நிர்வாகம் சிறக்கும் என்கிறார்.

 

தோல்விகளை சிலர் தவறான முயற்சிகள் என்று சொல்வார்கள். ஆனால் அவை  ஒவ்வொன்றும் அனுபவங்கள் என்பதை உணர்ந்தால் நாம் புதிய உற்சாகத்துடன் முன்னேற முடியும் என்று சொல்கிறார். நிர்வாகியாக இருப்பவர்களுக்கு நிர்வாகப் பண்புடன் தனக்குக் கீழுள்ள குழுவை தலைமையேற்று நடத்தும் தலைமைப்பண்பு அவசியம் இருக்க வேண்டும். இப்போது பல நிறுவனங்கள் இரண்டு பண்புகளும் சேர்ந்து இருப்பவர்களையே விரும்புகின்றன என்று சிறப்பான தகவலையும் சில எடுத்துக்காட்டுகளுடன் தெரிவிக்கிறார்.

 

எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தும் நூலாசிரியர் மறதியால் வரும் விளைவுகளைக் கூறி எச்சரித்து நினைவுத்திறனை அதிகரித்துக் கொள்ள சில வழிமுறைகளையும் சொல்கிறார். கடிதத் தொடர்பின் அவசியத்துடன் எளிமையாகவும் சிறப்பாகவும் கடிதம் எழுதும் பயிற்சி மேற்கொள்வதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார். மேலும் கணக்குகளை அவ்வப்போது சரி பார்க்கும்படியான கணக்கியல் அறிவையும் கூடுதலாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

 

எந்தத்துறையில் இருப்பவர்களுக்கும், எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பொதுமக்கள் தொடர்பு அவசியமாக இருக்கிறது. பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள் அத்துறையில் பிரகாசிக்கிறார்கள் என்று சில உதாரணங்களுடன் அதன் அவசியத்தை உணர்த்துகிறார்.  இத்துடன் எதிர்மறை சிந்தனையாளர்களால் வரும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கவும் செய்கிறார். 

 

பணியாளர் நிர்வாகம் என்பது சாதாரண விஷயமல்ல அதற்கென தனியான ஒரு ராஜதந்திரமும் இருக்க வேண்டும் என்று வழிகாட்டும் நூலாசிரியர் எந்த ஒரு செயலுக்கும் இளமைத் துடிப்பின் வேகமும் முதுமையின் விவேகமும் சேர்ந்து இருந்தால் மட்டுமே உயர்வடைய முடியும் இரண்டில் ஒன்றில்லாவிட்டாலும் இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்கிறார். நம்முடைய செயல்பாடுகள் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து மற்றவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஒரு சிலரிடம் காணப்படும் குறைகளை நீக்கி, அவரை நிறுவனத்திற்கு பயனுள்ளவராக மாற்ற வேண்டும். ஆட்களை அடிக்கடி மாற்றும் போக்கு நிறுவனத்திற்கு பெரும் இழப்புகளை உருவாக்கும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார்.

 

பல செயல்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் மேலாண்மைப் பணியில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் வராமல் தடுத்துக் கொள்ள சில ஆலோசனைகளை வழங்கவும் செய்கிறார். 

 

இந்த நூலில் எனக்குப் பிடித்த கருத்து ஒன்று இருக்கிறது. அது  

 

" தாங்களாகவே முன்முயற்சி எடுத்து வேலை செய்ய எவ்வளவோ பேர் தயாராக உள்ளனர். ஆனால் அவர்களை அப்படி நாம் செய்ய விடுகிறோமா என்பதுதான் இங்கு மிகவும் முக்கியம். உண்மையாக உழைக்கத் தயாராக இருப்பவர்களின் உண்மைத் தன்மையையே சந்தேகப்படுவது, "நல்ல முடிவு", "நன்றாகச் செய்கிறாய்" என்றெல்லாம் சொல்லி அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில், "இதை ஏன் செய்தாய்?", "இதை யார் உன்னை செய்யச் சொன்னது?, எனக்குத் தெரியாதா? , நீ மேனேஜரா, நான் மேனேஜரா?" என்றெல்லாம் கேட்டு அவர்களை ஊக்கமிழக்கச் செய்வதானது, ஒரு நிர்வாகி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமமாகும்."

 

மேலாண்மை செய்பவர்கள் பலரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இதைப் படித்துத் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். 

 

அனைவரும் படிக்கக் கூடிய வகையில் எளிமையாக டாக்டர் ஜி.வி.ராவ் எழுதிய இந்த "வெற்றி தரும் மேலாண்மை உத்திகள்" எனும் நூலை சென்னை , ரோவ்சன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலாண்மைப் பணியிலிருப்பவர்கள், மேலாண்மைப் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள், மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் என்று அனைவரும் வாங்கிப் படிக்க ஒரு அருமையான நூல் இது.

 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.