........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-36

பக்கம்-136                                               விலை:ரூ.40

 

 

வசந்த மல்லிகை
-சேலம் ஆறுமுகன்-

பத்மினிப் பதிப்பகம்,
144, வி.எம்.ஆர். நகர்,
மெய்யனூர்,
சேலம்- 636 004.

பார்வை:

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவன் பொந்தனுடன் நட்புடன் பழகும் கந்தனை அவன் பெற்றோர்கள் சாதியைக் காரணம் காட்டிக் கண்டிக்கின்றனர். அதன் பிறகு அவர்களிருவரின் பெற்றோர்களுக்குமிடையே இதுகுறித்த விவாதம் அடிதடி என்று சென்று விடுகிறது. இதனால் மனம் வெறுத்த நண்பர்கள் கந்தனும் பொந்தனும் அந்த ஊரை விட்டு ஓடிப் போகின்றனர். மும்பை செல்லும் அவர்கள் அங்கு கட்டிடப் பணிகளில் தரை, தளங்கள் அமைக்கும் அன்பழகனிடம் அடைக்கலமாகிறார்கள். சிறுவர்கள் இருவரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை அன்பழகன் அறிந்து கொள்கிறான். அவனிடம் சிறுவர்கள் வந்து சேர்ந்த விபரம் தெரிந்து  போதைப் பொருள் விற்பனைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் அந்த சிறுவர்களை விலைக்குக் கேட்கிறான். அனபழகன் அந்தச் சிறுவர்களை அவனிடமிருந்து மறைக்கிறான். பின் அப்துல்லா என்பவன் நாச வேலைகளுக்காக அதிகப் பணம் அளிப்பதாகவும் அந்த சிறுவர்களை அவனுடன் அனுப்ப வேண்டுமென்று கேட்கிறான். அவர்களிடமிருந்து அந்த சிறுவர்களைக் மறைத்து முதலில் பூனா, பின்பு செங்கல்பட்டு என்று வந்து விடுகிறான். அங்கு வாடகைக்கு வீடு ஒன்று தேடி கோரியம்மாள் என்பவரின் வீட்டில் தங்குகிறான். அங்கிருந்தபடி சிறுவர்கள் இருவருக்கும் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறான். மாவட்டத்தில் முதல் இரு மாணவர்களாகத் தேர்ச்சி பெறும் அவர்கள் அதன் பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி அடைகின்றனர். 

 

இதற்கிடையே,  கோரியம்மாள் நெருப்பால் காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் அன்பழகன் கந்தன், பொந்தன் என்று மூவரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றுகின்றனர். மும்பையில் இவர்களைச் சிறுவர்களாக இருந்த போது விலை பேசிய அப்துல்லா இவர்களைத் தேடி செங்கல்பட்டு வருவதும் அவர் கோரியம்மாளின் மகன் என்பதும் தெரிகிறது. கோரியம்மாள் தன் உயிரைக் காப்பாற்றியவர்கள் இந்த மூன்று பேரும்தான் என்று சொன்னாலும் அப்துல்லா அந்தச் சிறுவர்களை மும்பைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கும் நிலையில் அன்பழகன் தடுக்கப் போக கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் இழக்கிறார். அறிவியல் ஆய்வாளரான அருமைநாதன் பெண்களான இசைவு, இயற்கை ஆகியோர் மருத்துவ வசதிக்கு உதவுகின்றனர். அன்பழகனுக்குத் தேவையான இரத்தத்தை இயற்கையும் பின்பு அன்பழகன் மேல் விருப்பமான வசந்த மல்லிகை எனும் சிற்றாள் அளிக்கின்றனர். 

 

கடைசியில் அப்துல்லாவிற்கு பணம் கொடுத்த நாசகார கும்பல் அவனைத் தேடி வருகிறது அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவரை அன்பழகன், கந்தன், பொந்தன் குழுவினர் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்து அப்துல்லாவையும் காப்பற்றுகின்றனர். இதன் மூலம் மும்பையில் நடக்க இருந்த பெரும் நாச வேலை தடுக்கப்பட்டு விடுகிறது. இதுதான் இந்த சிறுவர் நாவலின் முழுக்கதை.

பொதுவாக ஒருவரின் படைப்புகளை மற்றவர்கள் பார்க்கும் போதும் , படிக்கும் போதும் அந்த படைப்பு குறித்த கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. வேறுபாடான கருத்துக்களை ஒரு சில படைப்பாளர்கள் ஏற்றுக் கொண்டு அடுத்த படைப்புகளில் மாற்றங்கள் செய்து அனைவருக்கும் பிடிக்கின்ற படைப்பாளர்களாய் மாறி விடுகின்றனர். சிலர் தங்கள் படைப்பை இப்படி குறை கூறுவதா? என்று நினைத்து குறுகிய வட்டத்துக்குள் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்பது பொதுவானது. அதன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அனைத்துப் படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டும் என்கிற நம் கருத்தை இங்கே முதலில் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. 

இந்த சிறுவர் புதினத்தைப் படிக்கும் போது,  நூலாசிரியரின் சில குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டியது இங்கே அவசியமாகிறது. 

 

1. சிறுவர்கள் மனதில் தங்களுக்கிடையே சாதி எனும் ஏற்றத்தாழ்வு இல்லை என்றும் நட்பு எனும் உயர்வான பண்பு இருக்கிறது என்று வலியுறுத்துவது நன்றாக இருந்த போதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொந்தன் எனும் மாணவனின் பெற்றோர் போதைப் பொருள் விற்பதாகச் சொல்லப்படுவதும் பின்பு அதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு விடுவதும் ஏற்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்கள்தான் இப்படி தொழில் செய்கின்றனர் என்பது போன்ற கருத்தை இங்கே மாற்றியிருக்கலாம்.  பணத்தாசை கொண்ட சமுதாயத்தினர்தான் தவறான செயல்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

 

2. ஊரை விட்டு ஓடிப் போக வேண்டும் என்கிற மனநிலை சிறுவர்களுக்கு வராத வழியில் கதையைக் கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

3. நாசவேலைக்கு ஆள் தேடும் கும்பல் இவர்களை மட்டும் குறிப்பாக மும்பையிலிருந்து செங்கல்பட்டு வரை தேடி வருவது சரியாகத் தோன்றவில்லை.

 

4. கதையின் தலைப்பிற்காகவே வசந்த மல்லிகை எனும் கதாபாத்திரம் சிற்றாளாகத் திணிக்கப்படுவதும், அருமைநாதன், இயற்கை, இசைவு போன்ற கதாபாத்திரங்களும் இங்கே இணைக்கப்பட்டிருப்பதும் செயற்கையாக இருக்கிறது.

 

-இது போன்ற சில குறைகளை மட்டும் நூலாசிரியர் மாற்றியமைத்து இருந்திருக்கலாம். 

 

சேலம், பத்மினிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள வசந்த மல்லிகை என்னும் இந்த சிறுவர் புதினத்தை சேலம் ஆறுமுகன் எனும் சிறந்த படைப்பாளர் படைத்திருக்கிறார். இவரது மூன்று படைப்புகள் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியர்களால் ஆய்வு செய்யப்பட்டு"ஆய்வியல் நிறைஞர்" (எம்.ஃபில்) பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் "கலை முதுமணி" , ஈரோடு தமிழ்ச்சங்கம் வழங்கிய "தனித்தமிழ் பாவலர்" பட்டம் ஆகியவற்றையும்  பெற்றிருக்கிறார். இவருடைய "பறவைக்குச் சிறகேது" எனும் நூல் நாகப்பன் இராஜம்மாள் இலக்கிய விருதும் பெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.