........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-38

பக்கம்-76                                           விலை:ரூ. 50

 

 

பிரம்மா

- கோட்டை பிரபு -
- (நீதிபதி) பாண்டித்துரை -
- செல்வா-
- காளிமுத்து பாரத் -

நீர்வெளி
அருள் ஆப்செட்,
36, P . A . Y. நகர்,
புதுக்கோட்டை ரோடு,
குழந்தை இயேசு கோவில் அருகில்,
தஞ்சாவூர் - 613 005.

பார்வை:

இந்து மதத்தில் படைப்புக் கடவுளாக இருக்கும் பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த பிரம்மாவிலும் நான்கு முகங்கள் இருக்கிறது. ஆம்! கோட்டை பிரபு, (நீதிபதி) பாண்டித்துரை, செல்வா, காளிமுத்து பரத் எனும் நான்கு கவிஞர்கள் சேர்ந்து இந்த பிரம்மா எனும் கவிதைத் தொகுப்பைப் படைத்திருக்கிறார்கள். 

 

முதலாவதாக கோட்டை பிரபுவின் கவிதைகள்... அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருப்பினும் இரண்டு கவிதைகளை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 

"மெழுகுவர்த்தி" எனும் தலைப்பில் வெளியான கவிதையில் 

"நம்பிக்கை எனும் 
ஆணிவேரைப் பற்றி
இறுதிவரை
இறுகப் பிடித்தபடியே
எமது வாழ்வு
ஒளிர்ந்து முடிகிறது!!" 

- என்று முடித்திருப்பது நன்றாக இருக்கிறது. எவ்வளவு உருகி வழிந்தாலும் கீழே ஒன்று சேர்ந்து தன் வாழ்வின் கடைசி வரை ஒளியூட்டுவது தன்னம்பிக்கையில்லாத சிலருக்குப் பாடம் புகட்டுவதாய் இருக்கிறது. 

 

"ஏழ்மை" எனும் தலைப்பில் வெளியான கவிதையில் 

"அம்மா!
நம் வறுமைதான்
உன்னைப் பிழைக்க வைத்தது
இல்லையென்றால்
மம்மியாகிருப்பாய்."

 

-என்று ஆங்கிலவழிக் கல்வியின் ஆதிக்கம் இன்று அதிகரித்து வருவதை அருமையாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 

அடுத்து (நீதிபதி) பாண்டித்துரையின் கவிதைகள்... தலைப்புகளே இல்லாமல்... தலைப்புகளைத் தேடச் சொல்லித் துவங்குகிறது.

 

"நீண்டதொரு
கனவாய்
என் பயணம்
விழித்த போது
முடிவடைந்தது." 

 

-கனவுகளில் மட்டுமில்லை... வாழ்க்கையிலும் நாம் விழித்துக் கொள்ளும் போதுதான் முடிவு வந்து விடுகிறது.

 

"தட்டுங்கள்
திறக்கப்படும்
எத்தனைமுறை 
என சொல்லவில்லை
கதவில்லா
என் வீட்டிற்கு "

 

- தட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். தட்டிக் கழித்துக் கொண்டிருப்பவரைத் தட்டிக் கேட்கும் வரை திறக்கப்படாது என்பது மட்டும் உண்மை.

 

மூன்றாவதாக செல்வாவின் கவிதைகள்... இவரது கவிதைகள் அனைத்துமே சமுதாய நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும், நன்றாகவும் இருக்கிறது. எந்தக் கவிதையும் புறக்கணிக்க முடியாது. இருப்பினும் இங்கே எனக்கு மிகவும் சிறப்பாகப்பட்ட ஒரு கவிதையை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

 

"உருமாற்றம் " எனும் தலைப்பில் வெளியான கவிதையில்

 

"உழைப்புடன் மோதி
வியர்வை மழையை
பொழிந்து செல்
உன்னத வாழ்வு
செழித்தோங்கும்!
தோல்விப் படிகளை
நம்பிக்கை என்ற
கைப்பிடியால்
துன்பப்படுத்து
வெற்றி மேடைகள்
விரும்பி அமையும்!
முயற்சி என்ற
முன் உதாரணத்தை
முகவரியாக்கிக் கொள்
முற்றுகையிடும்
பாராட்டுக் கவிதைகள்!
உறுதியுடன் வரைந்து பார்
உன் வாழ்க்கை
ஓவியத்தை
உயர்ந்த "உருமாற்றம்"
அடையும்."

 

-வாழ்க்கையின் மாற்றமும் தடுமாற்றமும் அவனவன் கையில்தான் என்பதை எவ்வளவு அருமையாகச் சொல்கிறார்.

 

நான்காவதாக காளிமுத்து பரத் கவிதைகள்... இவரது கவிதைகள் முழுக்க முழுக்க வெளிநாட்டு வேலைக்குச் செல்வதில் உள்ள சுமைகள், அதனால் ஏற்பட்ட பிரிவுகள் என்பதாகவே அதிகம் இருக்கிறது. இந்த கவிதைகள் அவரது வாழ்க்கைச் சூழலுடன் ஒன்றியிருப்பதுடன் அவருடைய எதிர்ப்பார்ப்புகளையும் நமக்கு அதிகமாகச் சொல்கிறது. இருந்தாலும் அவருடைய ஒரு கவிதையை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

"படிப்பில் விட்ட இடத்தை
உழைப்பில் பிடித்திட
இளமையில் அமிலம் தெளித்து
ஆசைகளுக்கு அணை போட்டு
பீறிடும் அன்பு பிறையாக
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்
உன்னிலே மரத்துப் போக 
குடும்பத்தின் வளர்ச்சிக்கு
கடல்தாண்டி
உன்னையே தானம் செய்யும்
இந்த வாழ்க்கையில்
நிச்சயம் நீ
கடவுள்தான்!!!
உன் குடும்பத்திற்கு..."

 

-இல்லாமையின் கொடுமைக்கு கல்லாமையால் அயல்நாட்டில் அடைக்கலமாகியிருக்கும் பலரின் வாழ்க்கை அவர்களது குடும்பச் சுமைகளைக் குறைக்கவும், குடும்பத்தினரை மகிழ்விக்கவும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது உண்மை...

 

சிங்கப்பூரில் இருக்கும் இந்த நான்கு கவிஞர்களின் படைப்பான பிரம்மாவை தஞ்சாவூர், நீர்வெளி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் பிச்சினிக்காடு இளங்கோவன் இந்தக் கவிதை நூலுக்கு அணிந்துரையும், ந.வீ.விஜயபாரதி வாழ்த்துரையும் வழங்கியிருக்கிறார்கள். நான்கு கவிஞர்களும் அவர்களது கவிதைகளுக்கு "என்னுரை" அளித்திருப்பது அவர்களது கருத்துக்களையும் அறிந்து கொள்ள வழிகாட்டுகிறது. அய்யப்ப மாதவன் எழுதிய கவிதைகள் குறித்த கருத்துரை அட்டையின் பின்பக்கத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பது நன்றாக இருக்கிறது. இந்த பிரம்மா கவிதைத் தொகுப்பு , கவிதை வாசிக்கக் கூடியவர்கள் அனைவரும் சுவாசிக்க வேண்டிய ஒன்று.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.