........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-39

பக்கம்-96                                           விலை:ரூ. 70

 

 

 

பாலும் சோறும்

- முனைவர் தமிழப்பன் மெய்.மூ. -

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை,
21/11, இராமசாமி தெரு,
தியாகராயநகர்,
சென்னை-600 017.
கைத்தொலைபேசி: 9841395344, 9380765775..

பார்வை:

தமிழகத்துப் பெண்கள் தங்களது குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டி தமிழ்ப் பேச்சைச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்போது எங்கும் பார்க்க முடியாது. அவசர யுகத்திலும், ஆங்கில வழிக்கல்வி மோகத்திலும் இன்றைய நாகரீகம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு அம்மா, அப்பா என்று சொல்லிக் கொடுத்த காலமெல்லாம் கரையேறிப் போய் விட்டது. பிறந்த குழந்தைக்கே மம்மி, டாடி என்று சொல்லிக் கொடுக்கும் அவலம் கிராமத்துத் குடும்பங்களிலும் கூட வழக்கத்துக்கு வந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்மொழி மேல் பற்று கொண்ட பலரும் தமிழைக் காப்பாற்ற பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர். அந்த வழிகளில் இந்நூலாசிரியரும் இந்த நூலின் வழியில் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். 

 

இளம்பெண்கள் தங்கள் குழந்தைக்குப் பால் கொடுக்கும் போதும், சோறு அளிக்கும் போதும் அந்தக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தமிழ்ச் சொற்களை கவிதை வடிவில் சீம்பால், பருப்பு நெய்ச்சோறு என்ற இரண்டு தலைப்புகளின் கீழ் இரு பாகங்களாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். சீம்பால் எனும் தலைப்பில் மிகவும் குழந்தைப் பருவத்துக்கேற்ற வகையில் சிறு சிறு கவிதைகளாக பல சொற்களையும், சிறு கணக்குகளையும் சில வேறுபாடுகளையும் அந்தக் குழந்தைக்குப் புகட்டத் தந்திருக்கிறார். 

அவற்றில் கணக்கு சொல்லும் ஒரு சிறு கவிதை

ஒன்றும் ஒன்றும் இரண்டு
உனக்குக் கண்கள் இரண்டு
ஒன்றும் ஒன்றும் இரண்டு
உனக்குக் கைகள் இரண்டு
ஒன்றும் ஒன்றும் இரண்டு
உனக்குக் கால்கள் இரண்டு
கண்ணால் கல்வி கற்பாய்
கையால் உழைத்து நிற்பாய்
காலால் பொய்யை மிதிப்பாய்

இதேபோல் மற்றொரு கணக்குக் கவிதை

நான்கும் நான்கும் எட்டு
நல்லதை நீ எட்டு
மூன்றும் மூன்றும் ஆறு
வாழ்வில் முன்னேறு
இரண்டும் இரண்டும் நான்கு
செய்யாதே தீங்கு

என்று கணக்கையும் சொல்லிக் கொடுத்து நல்வழியைக் காட்டவும் உதவுகிறார்.

கண்டதைப் பார்க்காதே
கண்ணைக் கெடுத்துக் கொள்ளாதே
கண்டதைக் கேட்காதே
காதைக் கெடுத்துக் கொள்ளாதே
கண்டதைப் பேசாதே
கன்னத்தில் அறை வாங்காதே


என்று தீயதைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பது போன்ற அறிவுரை கூறும் கவிதைகளும் இங்கு இருக்கின்றன.

வெள்ளம் அடித்துச் செல்லும்
வெல்லம் இனிப்பை நல்கும்
கள்ளால் மயக்கம் வருமாம்
கல்லால் மாங்காய் விழுமாம்
கொள்ளே குதிரை உணவு
கொல்லல் கொடிது தம்பி
புள்ளோ வானில் பறக்கும்
புல்லோ தரியில் வளரும்


என்று ஒன்று போலிருக்கும் ஒரு சில வார்த்தைகளின் வேறுபாடுகளையும் எளிமையாக விளக்கிக் காண்பிக்கிறார். இதுபோல் காய்கறிகளின் வகைகளைச் சொல்லி அதன் உருவத்தை ஒப்புமைப்படுத்தும் கவிதை ஒன்று

 

முதலை போலப் பாகற்காய்
மூக்கைப் போல குடமிளகாய்
குண்டு சட்டியாய் பூசனிக்காய்
குடத்தைப் போல் சுரக்காய்'
அணில் வாலாய் பீர்க்கங்காய்
குடை போல பச்சை மிளகாய்
கொப்பரை போலப் பரங்கிக்காய்
குத்து வாளாய் வெண்டைக்காய்
குருதிப் புனலாய்த் தக்காளி
கடைக்குப் போய்க் கண்ணம்மா
காய்கறிகளை வாங்கி வா!
ஆத்தாடி நான் மாட்டேன்
அந்த முதலை கடிக்காதா?


என்று எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார். இந்நூல் முழுக்க பல எளிமையான, குழந்தைகளுக்கான கவிதைகள் இருக்கின்றன. 

மொத்தத்தில் குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் அனைவருக்கும் தங்கள் குழந்தைக்கு தாய்த்தமிழ் மொழியை இலகுவாகச் சொல்லிக் கொடுக்கும் வித்தையை இங்கே கற்றுத் தந்திருக்கிறார். ஆங்கிலத்தில் அதிபுத்திசாலியாகி விட்டாலும் தமிழில் தடுமாறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்த கவிதை நூல் அருமையான நூல். இந்த "பாலும் சோறும்" நூலை முனைவர் தமிழப்பன் மெய்.மூ எழுதியிருக்கிறார். சென்னை, உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.