........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-41

பக்கம்-93                                               விலை:ரூ.45

 

 

இணையமும் தமிழும்
-துரை மணிகண்டன்-

நல்நிலம் பதிப்பகம்
ஸ்கைடெக் பப்ளிகேஷன்ஸ் (இந்தியா)      பி லிட்
நெ: 7 / 3சி மேட்லி சாலை,
தியாகராயா நகர்,
சென்னை - 600 017.

பார்வை:

இணையத்தின் பயன்பாடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் படித்தவர்களிடையேயும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இணையத்தில் தமிழ் மொழியும் பல வழிகளில் தனது பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் பலரும் அறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் தமிழை எப்படிப் பயன்படுத்தலாம்? இணையத்தில் தமிழில் என்னவெல்லாம் இருக்கிறது? இப்படி ஆயிரமாயிரம் சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக இந்த நூலை நூலாசிரியர் எழுதியிருக்கிறார்.

 

முதலில் இணையம் குறித்த அறிமுகத்துடன் துவங்கும் இந்நூலில் இணையம் தோன்றிய வரலாற்றைச் சொல்லி கணினிகளில் இயக்கக் கட்டளைகள் மற்றும் மென் பொருட்கள் ஆங்கிலத்திலிருந்ததை மாற்றி தமிழிலும் கொண்டு வரப்பட்டதன் வரலாறு, புதிய தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்ட வரலாறு, இந்த எழுத்துருக்களுக்கு விசைப்பலகைகளில் ஏற்பட்ட சிக்கல்கள், இணையத்தில் தமிழ் மின்னஞ்சல் தொடர்புகள், அதில் ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவைகளுடன் தமிழ் இணையத்தின் வளர்ச்சிக்காக உலகில் நடைபெற்ற மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் போன்றவைகளையும் அழகாகத் தந்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

இணையத்தின் வழியாக அளிக்கப்படும் தமிழ்க் கல்விக்காகத் துவங்கப்பட்ட தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதற்கான பாடத்திட்டங்கள், கற்பிக்கப்படும் வழிகள் மற்றும் தேர்வு முறைகள் இங்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அச்சில் வெளிவரும் இதழ்களைப் போல் இணையத்தில் வரும் மின்னிதழ்களைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லி, குறிப்பிட்ட சில மின்னிதழ்களின் உள்ளடக்கங்களையும் அதன் சிறப்புகளையும் பயன்களையும்எடுத்துச் சொல்கிறார். இதுபோல்  அச்சில் வெளியாகும் சில இதழ்கள் தங்களின் அடுத்த கட்டத்திற்குத் தயாராக இப்போதே மின்னிதழாக மாற்றம் செய்யப்பட்டு வருவதையும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள், தமிழ் அர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் பயில விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக இணையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் மின் நூலகம், இந்நூலகத்தில் இருக்கும் தமிழ் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தகவல் திரட்டுகள், நெறி நூல்கள், உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியம் போன்றவை குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்நூலகத்தில் கொடுக்கப்பட்ட அகராதிகள், தமிழ்க் கலைச்சொற்கள் போன்றவைகளும் இங்கு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இணையம் மற்றும் கணினி வழியாக ஆய்வுக்கு உதவும் எழுத்துருக்கள், எழுதிகள் மற்றும் சொல் செயலிகள் போன்றவைகள் குறித்த தகவல்களுடன் இனையத்தில் அகராதிகளை உபயோகிக்கும் வழிமுறைகளையும் இங்கே தெரிவிக்கும் நூலாசிரியர் கடைசியில் இணையத்தில் வரும் பல இணைய இதழ்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ்க் கணிமை நிறுவனங்கள், தமிழ் இணைய வானொலிகள், தமிழ்ககணிமைச் சுவடிகள், தமிழ்த்தளம் தேடும் எந்திரம் போன்றவற்றின் இணைய முகவரிகள் பட்டியலிட்டுத் தந்திருப்பது சிறப்பாக இருக்கிறது.

 

இப்படி இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகளை விளக்கும் " இணையமும் தமிழும்" எனும் இந்த நூலை தமிழில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றும் துரை. மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்நூலை சென்னை, நல்நிலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இணையத்தில் தமிழ் பயன்பாடு அறிந்து கொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் இந்த நூலை பரிந்துரை செய்யலாம்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.