........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-45

பக்கம்-172                                               விலை:ரூ.60

 

 

 

இதயத்தினருகே
-சேலம் ஆறுமுகன்-

பத்மினி பதிப்பகம்,
114, வி.எம்.ஆர். நகர்,
மெய்யனூர்,
சேலம்-636 004.

பார்வை:

ஒரு சிற்றூரில் பள்ளியில் நண்பர்களாக இருக்கும் சிறுவர்கள் கந்தன், பொந்தன் பெற்றோர்களின் சாதிய வேறுபாட்டால், தங்கள் நட்பு பிரிந்து போய்விடக்கூடாது என்கிற எண்ணத்தில் அந்த ஊரைவிட்டு மும்பைக்கு ஓடிப்போகின்றனர். மும்பையில் இருக்கும் தீவீரவாதக் கும்பல் ஒன்று அவர்களைத் தீவீரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்த அப்துல்லா என்பவனிடம் பணம் கொடுத்து அழைத்து வரச் சொல்கின்றனர். அந்தக் கும்பலிடமிருந்து சிறுவர்கள் இருவரையும் அங்கே கட்டிடப் பணி செய்யும் அன்பழகன் என்பவர் காப்பாற்றி மூவரும் தமிழ்நாட்டுக்கு வந்து விடுகின்றனர். அந்தச் சிறுவர்கள் படிக்க விரும்பியதால் அவர்கள் இருவரையும் அன்பழகன் படிக்க வைக்கிறார். அவர்கள் படித்து நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். இவர்களின் படிப்புத் திறன் கண்டு வியந்த அறிவியல் ஆய்வாளர் அருமைநாதன், அவரது மகள்கள் இசைவு, இயற்கை ஆகியோர் அந்தச் சிறுவர்களுக்கு உதவ முன்வருகின்றனர். இதற்கிடையில் இந்தச் சிறுவர்கள், அன்பழகன் ஆகியோருக்கு தங்க இடமளித்த கோரியம்மாள் மகன் அப்துல்லா என்பவன் தாயைப் பார்க்க வருகிறான். மும்பையில் தப்பிக்க விட்ட சிறுவர்கள் அவனது வீட்டிலேயே இருப்பதைக் கண்டு அவர்கள் இருவரையும் கடத்தத் திட்டமிடுகிறான். அது முடியாமல் போகவே அங்கிருந்து போய்விடுகிறான். பின்னால் அப்துல்லாவைத் தேடி வரும் கும்பல் அப்துல்லாவுடன் சிறுவர்களைக் கடத்தவும் முயல்கின்றனர். அந்தக் கும்பலிடமிருந்து அப்துல்லாவையும் சிறுவர்களையும் அன்பழகனுடன் சிற்றாளாக வேலை செய்யும் வசந்த மல்லிகை அன்பழகனுடன் சேர்ந்து தனது ஒரு கையை இழந்து காப்பாற்றுவதாக முதல்பகுதியான வசந்த மல்லிகையில் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது பகுதியான "இதயத்தினருகே..."யில் சிறுவர்கள் இருவரும் கல்லூரிப் படிப்பு முடித்து ஆய்வாளர் அருமைநாதனுடன் சேர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அருமைநாதன் மகள்கள் இசைவு, இயற்கை ஆகியோர் அவர்களுக்கு உதவுகின்றனர். மும்பையில் செயல்படும் தீவீரவாதக் கும்பல் மீண்டும் அப்துல்லாவைக் கடத்திச் செல்கின்றனர். கந்தன், பொந்தன் ஆகியோரைக் கடத்த பல வழிகளில் முயற்சிக்கின்றனர். இதற்கிடையே கந்தன், பொந்தன் அவர்களது பெற்றோர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த முயற்சியில் தோல்வியே கிடைக்கிறது. 

அன்பழகன்,  கந்தன், பொந்தன் ஆகிய தம்பிகள் இருவருக்கும் பெற்றோரைத் தேடி அவர்களிடம் ஒப்படைத்த பின்னால்தான் வசந்த மல்லிகையைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று சொல்லி விடுகிறான். இந்நிலையில் ஆய்வாளர் அருமைநாதன் மகள்கள் இசைவு, இயற்கை ஆகியோர் கந்தன், பொந்தன் ஆகியோரை விரும்புவதாகவும் தெரிவிக்க மூன்று இணைகளுக்கும் திருமணம் செய்து வைக்க அருமைநாதன் முடிவு செய்கிறார். திருமண நாளன்று வந்த தொலைபேசித் தகவலில் தீவீரவாதக் கும்பல் கந்தன், பொந்தன் ஆகியோரது பெற்றோர்களைத் தங்கள் வசம் வைத்திருப்பதாகக் கூறி மலைப்பகுதி ஒன்றுக்கு வரும்படி தெரிவிக்கின்றனர். அங்கு செல்லும் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து பாசத்துடன் அழுகின்றனர். தீவீரவாதக் கும்பல் இந்தப் பாசநிலையைப் பார்த்து மாறிவிடுகின்றனர். முடிவில் மூன்று இணைகளது திருமணங்களும் நடக்கிறது என்பதாக இரண்டாம் பகுதி முடிவடைகிறது.

நூலாசிரியர் இந்தக் கதையில்,

  • இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான பல கருத்துக்களை வலியுறுத்தி இருப்பது நன்றாக இருக்கிறது.

  • ஒரு சில இடத்தில் திருக்குறளை இணைத்து விளக்கியிருப்பது வலிமையாக இருக்கிறது.

  • கதையின் ஆறாவது பகுதியில் கந்தனும், பொந்தனும் தங்கள் எண்ணங்களைச் சொல்வது புதுக்கவிதையைப் போல் அருமையாக இருக்கிறது.

  • நூலாசிரியர் கதையில் வரும் அனைத்துப் பெயர்களையும் தூயதமிழில் வைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது.

  • எளிமையான தமிழில் சாதாரணமான நடையில் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

இருப்பினும்,

  • ஒரு தீவீரவாதக் கும்பல் கந்தன், பொந்தன் ஆகியோரை மட்டும் விடாமல் துரத்துவதற்கான சரியான காரணம் கதையின் முதல் பாகத்திலும் சரி, இரண்டாம் பாகத்திலும் சரி சொல்லப்படவில்லை.

  • இதுபோல், தீவீர்வாதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட அப்துல்லாவின் நிலை என்னவானது என்று சொல்லப்படவில்லை.

  • தமிழ்த் திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போல் மலைப்பகுதியில் கந்தன், பொந்தன் ஆகியோரது பெற்றோர்களைக் கொண்டு வந்து மிரட்டுவதாகவும், இருவரும் அவர்களது பெற்றோர்களைத் தேடிச் செல்வதாகவும் அமைக்கப்பட்டிருப்பது படிக்கும்படியாக இல்லை.

  • தீவீரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கந்தன், பொந்தன் பெற்றோர்களை விடுவிப்பதற்கான சரியான காரணமில்லாததால் கதையும் வலுவானதாக இல்லை.

- என்பது போன்ற சில குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

 

சேலம் ஆறுமுகன் எழுதிய இதயத்தினருகே என்கிற இந்த நூலை சேலம் பத்மினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலை அனைவரும் வாங்கிப் படிக்கலாம். 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.