
மதுரையைச் சேர்ந்த ஓரி ஆனந்தன் படிக்கும் காலத்திலேயே கவிதை எழுதப் பழகியிருக்கிறார். அப்படியே மதுரையிலிருக்கும் கவிஞர்கள் சிலருடனும் பழகியிருக்கிறார். தனது கவிதைகளை உருவாக்கும் திறனை வளர்த்திருக்கிறார்.
இந்தக் கவிஞரின் கவிதைகள் அவரைச் சுற்றி நடக்கும் சமுதாய நிகழ்வுகளை ஆழமாகக் கவனித்துக் கவிதையாக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது அவரது அனைத்துக் கவிதைகளிலும் வெலிப்படுகிறது.
இவரது இந்தக் கவிதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்று... பரிணாமம் எனும் தலைப்பில்... இருக்கிறது.
ஒழுங்காய்ப் படிக்கவில்லையென்று
டீச்சரிடம்
அடி வாங்கிய அந்தோணி
ஆசிரியன் ஆகிவிட்டான்
தினமும் அடுத்தவன்
பென்சிலையும் ரப்பரையும்
திருடிப் போன இராமசாமி
போலீசாகி விட்டான்
ஊர் சுற்றி விட்டு
வீட்டுக்குப் போன போதெல்லாம்
எங்கடா போனே
எருமை மாடே
என்று கேட்கும் அப்பாவிடம்
பாலாஜி வீட்டுக்குப்
படிக்கப் போனதாய்.
பிள்ளையாரைப் பார்த்துப்
பேசிவிட்டு வந்ததாய்
டக்கென
புளுகு மூட்டைகளை
அவிழ்த்து விட்டு
அசத்திய அரங்கநாதன்
அரசியல்வாதியாகி விட்டான்
வருடத்தில் பாதிநாள்
பள்ளிக்கூடத்திற்கே வராத
மணிகண்டன்
அரசாங்க அதிகாரி
ஆகிவிட்டான்
இப்படி எல்லோருமே
பெரிய்....ய மனிதர்களாகி விட்டனர்.
நல்ல பிள்ளை
என்ரு பெயரெடுத்த
நான் மட்டும்
இன்னும்
குரங்கு நிலையிலேயே...
-என்று எழுதியிருக்கிறார். இந்தக் கவிதையில் அப்படியொன்றும் கவிதை நடை சிறப்பில்லை. ஆனால் அவர் சொல்ல வரும் கருத்து சிறப்பாக இருக்கிறது. இன்று வாழ்க்கையில் உண்மைக்குக் கிடைக்கும் மதிப்பு பூஜ்யம் என்பதை இந்தக் கவிதையில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் பரிணாம வளர்ச்சியில் எதில் மோசம்
என்று கருதப்பட்டதோ அதிலேயே பிரமாதம் என்று சொல்லுமளவிற்கு வாழ்க்கை நடைமுறை மாறிப்போய்
விடுகிறது என்பதை இந்தக் கவிதையில் உணர்த்தியிருக்கிறார்.
"திருயாத்திரை" எனும் தலைப்பிலான கவிதையில் கழிவாகி விட்ட சாக்கடை நீர் குறித்து தெரிவிக்கும் போது,
ஆனந்தமாய்ப்
போனது
எங்கள் தெருவில்
சாக்கடை
சாதி நாற்றம் இல்லாமலே!!!
-என்று சாதிகள் கழிவுநீரைக் காட்டிலும் மோசமானது என்று எடுத்துக் காட்டுகிறார்.
"இருப்பிடம்" எனும் தலைப்பில்
ஊதினால்
அணைகிறது திரி
ஊத ஊதப்
பற்றி எரிகிறது கரி
நெருப்பிடமில்லை
எரிதலும் அணைதலும்.
-என்று நெருப்பு பயன்படுத்தும் விதத்தில் மட்டுமில்லை பயன்படுத்தும் பொருளைப் பொறுத்தும்தான் என்று ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறார்.
"திட்டம் போட்டு" எனும் தலைப்பில்
அரசியல்வாதிகள்
அதிபுத்திசாலிகள்
உங்கள் நெற்றியில்
நாமம் போட்டால்
புரிந்து கொள்வீர்கள் என்று
விரலில் புள்ளி வைத்து விட்டார்கள்
கரும்புள்ளிகள்!
-எனும் தலைப்பில் அரசியல்வாதிகள் மக்களைக் கரும்புள்ளிகள் வைத்து வெறும் புள்ளிகளாக்கிய கதையைச் சொல்லியிருக்கிறார்.
இப்படி நிறைய சிறுகவிதைகள் இந்த நூலில் நிறைய இடம் பெற்றிருக்கிறது. இந்த நூலில் ஒரு பக்கத்திற்கு ஒரு கவிதை இடம் பெற வேண்டுமென்று வடிவமைத்து நிறைய சிறுகவிதைகளால் காலியிடம் அதிகமாகி விட்டது. காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் வணிகத்தில் சற்று பின்னடைவு ஏற்படலாம். மேலும் நூலகங்கள் இந்த கவிதை நூல்களை வாங்கத் தயக்கம் காட்டலாம். அடுத்து கவிதைப் புத்தகம் வெளியிடும் நிலையில் இது போன்ற குறைகளைத் தவிர்த்து வெளியிடலாம்.
இந்த "வெடிப்பூக்கள்" கவிதை நூலை சென்னை, கர்த்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கவிதைப் பிரியர்கள் வாங்கிப் படிக்கலாம்.
-தாமரைச்செல்வி.