........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

புத்தகப்பார்வை-71

பக்கம்-114                                விலை: ரூ. 65

 

 

காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர்

 -தேனி ராஜதாசன்-

மணிமேகலைப் பிரசுரம்,
தபால்பெட்டி எண்: 1447,
7 (ப.எண்-4), தணிகாசலம் சாலை,
தியாகராயநகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: 044- 24342926, 24346082.

பார்வை:

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரால் பயனடைந்த மற்றும் முன்னுக்கு வந்த பலர் அவரை மறந்து விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்தில் மயங்கிக் கிடக்கும் சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருப்பவர்களில் தேனியைச் சேர்ந்த நாகராஜ் என்கிற ராஜதாசனும் ஒருவர். இவர் எம்.ஜி.ஆர் மீது அளவற்ற பற்று கொண்டவர். இந்தப் பற்றுதலால் அவர் எம்.ஜி.ஆர் பற்றி எந்தச் செய்தி கிடைத்தாலும் அதைச் சேகரித்து வைத்துக் கொள்வார். எம்.ஜி.ஆர் படம் எந்தப் பத்திரிகையில் வந்தாலும் அதை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுவார். இப்படி எம்.ஜி.ஆர். திரைப்பட குறுந்தகடுகள், நூல்கள் என இவரது சேகரிப்புகள் ஏராளம். இதற்காக இவர் எம்.ஜி.ஆர். நினைவுக் களஞ்சியம் எனும் ஒரு அமைப்பைத் தானாகவே தோற்றுவித்துக் கொண்டார். இதன் மூலம் பல இடங்களில் எம்.ஜி.ஆர் நினைவுகளை வெளிப்படுத்தும் சேகரிப்புகளைக் கொண்டு சென்று கண்காட்சி நடத்துவார்.

இவருக்கு இந்த சேகரிப்புகளில் முக்கியமான தகவல்களைக் கொண்டு ஒர் நூலாக்கினால் எப்படியிருக்கும்? என்கிற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். இந்த நூலை உருவாக்கி விட்டார். இந்த நூலில் இந்திய அரசியல் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, எஸ்.இராதாகிருஷ்ணன், இராஜகோபாலாச்சாரியார், ஔவை தி.க.சண்முகம், அண்ணாத்துரை, ராஜீவ்காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் இடம் பெற்றுள்ளன. இது போல் பாரத ரத்னா விருது நகல், சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்ட நகல், கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் எழுதிய கவிதை நகல்கள், எம்.ஜி.ஆர் பெயரிலான பேருந்து படம், அந்தப் பேருந்துக்கான பயணச்சீட்டு நகல், எம்.ஜி.ஆர் படம் போட்ட சில தபால்தலைகள், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய முகவரி அட்டை (Visiting Card) , கடிதத் தலைப்புகள் (Letter Head) நகல்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி.ஆர் நூறு ரூபாய் கேட்டு மருதநாட்டு இளவரசி படத்தயாரிப்பாளர் ஜி.முத்துசாமிக்கு எழுதிய கடித நகல் கூட இடம் பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர் குறித்து வி.என்.சிதம்பரம், எம்.ஜி.ஆர்.முத்து, ஏ.வி.எம்.சரவணன், திருச்சி சவுந்திரராஜன், நாகை தருமன், எம்.என்.நம்பியார் ஆகியோர் எழுதிய சிறு கட்டுரைகள், கவிஞர், விஎஸ்.வெற்றிவேல் எழுதிய கவிதை போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர, எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் அவை வெளியான ஆண்டு, இயக்குனர் விபரங்கள் கொண்ட பட்டியல், எம்.ஜி.ஆரின் சொந்த நாடகங்கள் குறித்த தகவல்கள், எம்.ஜி.ஆர் படப் பாடலாசிரியர்கள் பட்டியல், எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் பட்டியல், எம்.ஜிஆர்- ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களின் பட்டியல் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.

இந்த நூலில் எம்.ஜி.ஆர் செய்திகளில்லாமல் இவர் கருணாநிதியைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும், ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இது தவிர, இந்நூலாசிரியரான ராஜதாசன் குறித்து சில இதழ்களில் வெளியான செய்திகளும் இதில் தரப்பட்டுள்ளன.

சென்னை, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் திரைப்பட இயக்குனர் விசு ஆகியோர் எழுதிய வாழ்த்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தேனி ராஜதாசன் எழுதிய அல்லது தொகுத்துள்ள காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் என்கிற இந்நூல் எம்.ஜி.ஆர் பற்றுடையவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு