புத்தகப்பார்வை-72

பக்கம்-232 விலை:
ரூ. 100
|
அய்யா வைகுண்டர்
வரலாறும் அற்புதங்களும்
-நெல்லை
விவேகநந்தா-

வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: 044- 24342810, 24310769. |
பார்வை:

புனிதர்கள் அரிதாகத்தான்
தோன்றுவார்கள். அவ்வகையில் தோன்றியவர்தான் முத்துக்குட்டி என்கிற அய்யா
வைகுண்டர்.
நம் பெண்களுக்கு இழுக்கென்றால் நாம் சகித்துக் கொண்டு இருப்போமா? திருவாங்கூர்
சமஸ்தானத்திலிருந்த பதினெட்டு சாதியினர் மன்னன் சுவாதித் திருநாளின்
அடக்குமுறைக்குப் பயந்து கொண்டு மார்பு வரி, தோள்சீலை வரி போன்றவைகளைக் கட்டிக்
கொண்டிருந்திருக்கின்றனர். உயர் சாதியினரின் முன்பு மார்பைத் திறந்து போட்டுக்
கொண்டுதான் செல்ல வேண்டும் சட்டம் போட்ட மன்னன் எவ்வளவு கொடூரமானவானாக
இருந்திருக்க வேண்டும். அவனை எதிர்த்து நின்று மக்களுக்கு எழுச்சி ஊட்டிய
அய்யாவைப் பாராட்டியே தீர வேண்டும்.
கொல்லான் புலாலை வெறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
-என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதற்கொப்ப உயிர்ப்பலியை அய்யா வெறுத்தார்.
அதற்காக அடுத்த பாராட்டு.
பேய், பிசாசு, பில்லி சூனியம் இல்லை என்றார். அதற்காக அடுத்த பாராட்டு.
மூடநம்பிக்கைக்கு எதிரான குரலல்லவா?
கடவுள் பெயரைச் சொல்லி மாய மந்திரங்கள் செய்பவர்களை நம்ப வேண்டாம் என்றார்.
அதற்காக அடுத்த பாராட்டு. நாம் கண்கூடாகக் காண்கிறோம். லிங்கத்தை வாயிலிருந்து
வரவைப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட போது லிங்கத்தை
எடுப்பதில்லையே... அது தந்திரம்தானே!
அய்யா தருமம் செய்வதுதான் சிறந்த பக்தி என்றார். அதற்கொரு பாராட்டு. நிறையக்
கடவுள் மனிதர்களைப் போல் அய்யாவிடம் படோடபம் இல்லை. அவர் உபயோகித்ததெல்லாம்
சாதாராணக் கிராமத்து வாசி உபயோகித்த வார்த்தைகள்தாம். வீண் வார்த்தை ஜாலம்
இல்லை.
வள்ளலாருக்கு முன்பே கண்ணாடியை வணங்கச் சொன்னது அய்யா என்பது அறிந்து
கொண்டதுடன் கண்ணாடிதான் ஒவ்வொருவரும் தன்னை அறிய உதவுகிறது எனும் உண்மையையும்
உணர முடிகிறது. இது ஆங்கில மாமேதை சாக்ரடீஸ் சொன்ன “உன்னையே நீ அறிவாய்!”
என்பதைப் போல் இருக்கிறது.
தருமபதி, முந்திரிக்கிணறு, திருமண், போதிப்பு, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு,
சாட்டு நீட்டோலை, அகிலத் திரட்டு போன்ற அய்யா பயன்படுத்திய சொற்கள் அனைத்துமே
எளிமையான சொற்கள். பாருங்கோ, கேளுங்கோ, காணிக்கை வேண்டாதுங்கோ என்பதெல்லாம்
எளியவர்கள் மனதில் மடை திறந்துவிட்ட நீர் போல் எளிதில் பாயக் கூடியவை.
“அக்கினியால் தண்ணீரால் அநேகச் சீமை அழியும்” என்று அன்று அய்யா சொன்னது இன்று
நடக்கிறது.
“நாள்தோறும் பூமி நடுக்கமுண்டாம்” என்று அய்யா சொன்னது போல் நிலநடுக்கத்தால்
சில நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
“வானத்து இடிகள் வருடாவருடம் நீணிலத்தில் வீழும்” என்றார். அமெரிக்காவில்
ஏற்பட்ட புயல் காற்றால் ஏற்பட்ட சேதம் அறிகிறோம்.
“பிரளயம் வரும் முன்பே பெண்கள் நிலையழிவர்” என்றார். கணினியுகத்தில் இதைக்
கண்கூடாய் நடக்கக் காண்கிறோம்.
“ஜனங்களுக்கு ஆயுள் குறையும்” என்றார். இன்றைய விஞ்ஞானமும் அதைத்தான்
கூறுகிறது. மனிதனுடைய குரோமோசோம்களின் முனைகளில் “டெலோமியர்” எனும்
பாதுகாப்புக் குப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு தலைமுறைக்கும் குறைந்து கொண்டே
வருகிறதாம். அது மனித இனத்தின் அழிவுக்கு ஒரு அளவு கோலாம்.
அய்யா ஒரு சமூகப் புரட்சியாளர்; இயலாதவர்களுக்கு உதவணும் என்கிற எண்ணம் கொண்ட
தர்ம சிந்தனையாளர்; வருங்காலம் அறிந்து சொன்ன ஞானி என்பதில் ஐயமில்லை.
அன்னை தெரசா ஒரு வயிற்றுவலிக்காரப் பெண்மணியின் வயிற்றைத் தொட்டு வயிற்று
வலியைப் போக்கினார். அவருடைய மறைவுக்குப் பின்பு அவருக்கு கிறித்தவ சமயப் போப்
புனிதர் எனும் பட்டம் வழங்கினார். இதுபோல் அய்யா வைகுண்டருக்கும் அந்த அரிய
சக்தி இருந்திருக்க வேண்டும். அவரின் மறைவுக்குப் பின்பும், இன்னும் அவரை
வணங்கி வரும் மக்கள் அதிகளவில் இருக்கிறார்களே...!
சென்னை,
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள
அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் என்கிற இந்நூலின்
ஆசிரியர் நெல்லை விவேகநந்தாவிற்கு முதற்படைப்பாக இருப்பினும் இந்நூல்
அருமையான படைப்பு, எளிமையான நடை. எவரும் புரிந்து கொள்ளும்படி எல்லாத்
தகவலையும் ஆய்வு செய்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
-த.
கருணைச்சாமி.

முந்தைய புத்தகப்பார்வை காண

|