வெட்கக் குமிழிகள்
நேற்று நீ அவனை ஒதுக்கினாய்!
காற்று அவனுக்கு வீசுகிறது இனிதாய்...
ஏற்றமிகு நட்பின் இராகம் புரியாது
வேற்று மனிதனாய் ஒதுக்கினாய்! தீது!
ஊரின்றி, உறவின்றி உதித்திட்ட நேசம்
சீரியதாய் இதயத்தில் கலக்கவில்லையோ!
இது போல் ஏமாற்றுதல் பழக்கமோ!
எதுவும் தோன்றவில்லையோ உனக்கு!
உத்தம அன்பு காட்டில் மழையானது.
சத்தமின்றிக் காரியமாற்றும் ஒரு
மொத்த சுயநலப் பிறவி என்று
சித்தத்தில் தோன்றலையே முன்னமவனுக்கு.
ஒற்றுமை செயலில் இன்றி அவனிடம்
பெற்ற உதவிகள் மறந்தாய்! ஒதுக்கினாய்!
சற்றுத் தெளிவாயொரு கணம் சிந்தி!
தொற்றிடும் இது உன் வாரிசிற்கும்!
அன்பு கொடுத்து அன்பு பெறுதலே
இன்ப வாழ்க்கையை வாசித்தல். உன்னகம்
அன்பு கொடுத்து அலட்சியம் செய்தலே
அகராதியென வெட்கக் குமிழிகள் இடுகிறது....
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.