இஸ்லாமிய நீதிக்கதைகள்
ஆர்னிகா நாசர்
85.
”அல்லாஹ்வை நினைவு கூர உந்தாத ஒவ்வொரு செயலும் வீணானதும் கவனக்குறைவானது ஆகும் ; நான்கு செயல்களைத் தவிர-
* ஒருவர் தனது வில்வித்தை இலக்குகளுக்கு இடையே பயிற்சி செய்வது.
* தனது குதிரைக்குப் பயிற்சி அளிப்பது.
* தனது குடும்பத்தாருடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருப்பது.
* ஒருவர் நீச்சல் கற்றுக் கொள்வது” - நபிமொழி (ஸஹீஹ்)
ஆபிதீன் ஹுசைன் மர ஊஞ்சலில் ஆடியபடி செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார்.
ஆபிதீனுக்கு வயது 62. குறும்புக்காரர். எதைப் பேசினாலும் பொடி வைத்துத்தான் பேசுவார். நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
தாதா செய்தித்தாள் வாசிப்பதை காதுற்று நின்றான் பேரன் உமர் உஸ்மான்.
“செய்தித்தாள் வாசிக்கிறப்ப சொந்தச் சரக்கு சேர்க்காதிங்க தாதா!.”
“கூவம் நதியை கிளய்ம் பண்ணினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லைடா பேரா!”
“சரி, பேப்பர்ல வேறென்ன போட்டிருக்கு!”
“மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!”
உச் கொட்டினான் ஓமர்.
“அடப் பாவமே!”
“ஓமர்! நம்ம தெருபசங்கள் அம்புட்டு பேரையும் கூப்பிடு!”
கூப்பிட்டான் ஓமர்.
ஆறேழு விடலை சிறுவர்கள் வந்து சேர்ந்தனர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“தாதா… எதுக்குக் கூப்ட்டீங்க? எங்களைக் கேலி கிண்டல் பண்ணவா?”
“அதெல்லாம் இல்லை… ஒரு நல்ல விஷயத்துக்குத்தான் கூப்ட்டேன்!”
“சொல்லுங்க!”
“என் பேரனையும் சேத்து இங்க ஏழு பேர் நிக்றீங்க. உங்கள்ல யாருக்கு நீச்சல் தெரியும்?”
அனைவரும் உதடு பிதுக்கினர். “எங்க யாருக்கும் நீச்சல் தெரியாது!”
“நம்ம தெருல 20 வீடு இருக்கு. அதில இருக்கற பசங்கள்ல யாருக்கு நீச்சல் தெரியும்?”
“யாருக்குமே நீச்சல் தெரியாது!”
“இப்படிச் சொல்ல உங்க யாருக்கும் வெக்கமாயில்லையா?”
“இவ்வளவு பேசுறீங்களே ஆபிதீன் தாதா….உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”
சிரித்தார் ஆபிதீன்.
“எனக்கு நீச்சல் தெரியும். ஒரு முறை நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டால் அது வாழ்நாள் முழுக்க மறக்காது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் காரணம் உள்ளது. நம் மூளை நினைவுகளை பல்வேறு வகைகளாகச் சேமிக்கிறது. அதில் நீச்சல் அடித்தல், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற உடல் இயக்கம் சார்ந்த திறன்கள் செயல்முறை நினைவு அல்லது தசைகளின் நினைவு பகுதியில் சேமிக்கப்படுகின்றன…”
“தாதா! நீச்சல் என்றால் என்ன?”
“நீருக்குள் எந்தவிதக் கருவிகளும் இல்லாமல், கை கால்களை அசைத்து மிதந்து முன்னேறிச் செல்லும் செயலே நீச்சல் ஆகும். கற்காலம் தொட்டே மனிதன் நீச்சலில் ஆர்வம் காட்டுகிறான்….”
“உலகில் எத்தனை சதவீதம் பேருக்கு நீச்சல் தெரியும்?”
“நல்ல கேள்வி. உலக அளவில் 57 சதவீத ஆண்களுக்கும், 32 சதவீத பெண்களுக்கும் நீச்சல் தெரியும்!”
“நீச்சல் ஆண்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா?”
“நீச்சல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. ஒரு கலையை கற்றுக் கொள்வதில் ஆண் பெண் என பாகுபாடு எதற்கு?”
“ஒரு ஆணோ ஒரு பெண்ணோ நீச்சல் கற்றுக் கொண்டால் அதனால் சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன் என்ன?”
“ஒரு சாதாரண மனிதர் நீச்சல் கற்றுக் கொண்டால் அவர் தன் வாழ்நாளில் நீரில் மூழ்கும் ஒருவரையோ இருவரையோ காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது. உயிர் காப்பாளர்களாக பணிபுரிவோர் தங்கள் வாழ்நாளில் ஐந்திலிருந்து 25 பேர் வரை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றுவர். சர்வதேச கடற்கரையில் பணிபுரிவோர் தங்கள் வாழ்நாளில் நூறிலிருந்து 500 பேர் வரை நீரில் மூழ்குபவரை காப்பாற்றுவர்!”
“கடலோ ஆறோ குளமோ இல்லாத ஊர்களில் வசிப்போர் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமா?”
“உயிர் தப்பிக்கும் ஆயுதம் ஒன்றை தேவைபட்டாலும் தேவைப் படாவிட்டாலும் இடுப்பில் செருகி வைத்துக் கொள்வோமே?”
“இஸ்லாம் நீச்சல் கற்றுக் கொள்ள சொல்லி முஸ்லிம்களை வற்புறுத்துகிறதா?”
“இஸ்லாம் ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் தருகிறது. நீச்சலை வலியுறுத்தி நபிமொழி இருக்கிறது. தவிர, இரண்டாம் கலீபா உமர் ரலி ‘உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், அம்பெய்தல், குதிரையேற்றம், மல்யுத்தம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்’ என்கிறார். ஒரு முஸ்லிம் தந்தையின் கடமை என்ன தெரியுமா? தனது குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது மற்றும் நீச்சல் பயிற்றுவிப்பது!”
“ஓஹோ!”
“பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட பலமிக்க இறை நம்பிக்கையாளரே அல்லாஹ்விடம் மிகவும் சிறந்தவரும் அன்புக்குரியவரும் ஆவார்’
“சரி!’”
“ஆபத்துக்காலங்களில் தங்களையும் பிறரையும் நீரில் மூழ்காமல் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புக்கலை நீச்சலுக்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை விதிக்கிறது.
1. அப்ரத் என்கிற ஆடை ஒழுக்கம்.
நீச்சலடிக்கும் ஆடவரும், பெண்டிரும் உடலை மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்கும் ஆடை அணிய வேண்டும். ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால் வரை ஆடை. பெண்கள் முகம் மணிக்கட்டு தவிர மீதி உடல் பகுதிகளை மறைத்து ஆடை அணிய வேண்டும்.
2. பாலின கலப்பு இன்மை
ஆண்களும் பெண்களும் சேர்ந்து நீச்சலடிக்கக் கூடாது. ஆணுக்கு தனி நீச்சல் குளம். பெண்ணுக்கு தனி நீச்சல் குளம்”
“சபாஷ் சரியான நிபந்தனைகள் தாதா!”
“ஆரம்பக்கட்ட நீச்சல் பயிற்சியை சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் வைத்து தான் மேற்கொள்ள வேண்டும். முழு நீச்சல் நேரத்திற்கும் பெரியவர் கண்காணிப்பு தேவை…”
“ஓவ்!”
“நீச்சல் பயிற்சிக்கு சுரைக்குடுக்கை பற்ற வைத்த கெரஸின் டப்பாவை முதுகில் கட்டிக்கொண்டது அந்த காலம்.
இப்ப காலம் நவீனமாகி விட்டது.
நீச்சல் ஆடை, நீச்சல் கண்ணாடி, நீச்சல் தொப்பி, காது மற்றும் மூக்கு அடைப்பான்கள், மிதவை, கால் நீச்சல் துடுப்பு, கை நீச்சல் துடுப்பு முதலியவற்றை நீச்சல் பயிற்சிக்கு பயன்படுத்தலாம்…”
“ரொம்ப காஸ்ட்லியா இருக்குப் போகுது!”
“ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட் தானே?”
“ஆமாமா… அதுவும் உண்மைதான்…”
“நீச்சலின் பயன்பாடுகளை அட்டவணைப்படுத்துகிறேன் கேளுங்கள்.
1. ஊளை சதையை குறைத்து கச்சித உடல் பெறலாம்.
2. இறுக்கம் தவிர்த்து உடல்தசைகள் நெகிழ்ச்சி பெறும்.
3. ஆஸ்துமா பிரச்சனை நீங்கும்.
4. பதட்டம் மன அழுத்தம் குறையும்.
5. உடலின் தோல் பளபளக்கும்.
6. சமூக பிரக்ஞை கூடும்.
7. குறிக்கோள் நுண்ணிப்பு அடையும்.
8. மாற்று உடற்பயிற்சி.
9. இதயமும் சுவாச மண்டலமும் வலுப்பெறும்.
10. நோய் எதிர்ப்பு சக்தி மிகைக்கும்.
11. ஆயுட் கால உடற்பயிற்சி இது.
பத்து நிமிடம் நீந்தினால் 100 கலோரி செலவாகும். 30 நிமிட நீச்சல் 5 கிமீ ஓட்டத்திற்கு சமம்…”
“இவ்வளவு தூரம் சொல்லிட்டீங்க. தெருச் சிறுவர்கள் அனைவரும் நீச்சல் கற்றுக் கொள்ளக் கிளம்புகிறோம். எங்கே கற்றுக் கொள்வது?”
“ராமநாதபுரத்தில் ஸ்டெல்லா ஸ்விமிங்புல் இருக்கிறது. பேசிச் சேர்த்து விடுகிறேன். நீங்கள் கற்றுக்கொள்ளும் நேரத்தில் நான் உடனிருப்பேன்!”
ஆறு மாதம் கழித்து -
ஆபிதீன் ஹுசைன் செய்தித்தாளை வாசித்தார். “குற்றாலத்து நீரில் மூழ்கிய மூன்று வயது சிறுவனைக் கோயம்புத்தூர் உக்கடத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓமர் உஸ்மான் காப்பாற்றினான்!”
“மாஷா அல்லாஹ்!” என்றார் ஆபிதீன்.
(தொடரும்...)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.