“மறை வேதம் ஓதுபவரெல்லாம் வாயால் ஓதுதல் போதா; மனதில் நிறைத்து குணத்தில் கரைத்து பொய்யும் கள்ளமும் ஒழித்து கற்றதனைத்தையும் நிகழ்வில் வாழ்ந்து வழிகாட்டுதல் அறம்” - மீரா அகமது
பேரன் ரூமி ரயானுடன் மாடிப் படிக்கட்டுகளில் இறங்கினார் அன்சாரி ஜாவேத். ரூமி ரயானுக்கு வயது 10. ரோஸ் பப்ளிமாஸ் பையன். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அன்சாரி ஜாவேத்துக்கு வயது 65. பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜாவேத்துக்கு மொத்தம் ஐந்து பேரன் பேத்திகள். ரயான் மகன் வழி பேரன்.
ஒரு நாளில் விழித்திருக்கும் நேரம் எல்லாம் பேரன் ரூமி ரயானுடன்தான் செலவழிப்பார். கடந்த இரண்டு வாரங்களாக ரயான் தாத்தாவை நச்சரித்துக் கொண்டே இருந்தான்.
“தாத்தா! என்னை மதீனா செஸ் அகாடமிவில சேர்த்து விடு… அகாடமில சேர்ந்து நான் பெரிய கிராண்ட் மாஸ்டரா புகழ் பெறனும்…”
யோசித்து அவனுக்கு ஒரு செஸ் போர்டு வாங்கிக் கொடுத்தார். இரண்டு வாரங்களாக அவனுடன் செஸ் விளையாட்டினார். ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தாத்தா தோற்று பேரன் ஜெயித்தான்.
பேரன் கேட்டுக்கொண்டபடி பேரனை செஸ் அகாடமியில் சேர்க்க இதோ கிளம்பிவிட்டார் ஜாவேத். இரண்டு சக்கர வாகனத்தை நெருங்கியவர் ஹெல்மெட் அணிந்து கொண்டார். பேரனுக்கும் ஒரு ஹெல்மெட் அணிவித்தார்.
“போலாமா பப்ளிக் குட்டி?”
“போலாமே தாத்தா!”
இருவரையும் இடைமறித்தது அப்துல் சுபானின் குரல். சகுனி, கூனியின் நவீன அவதாரம். பேச்சு முழுக்க அல்லாஹ் அல்லாஹ். மனம் முழுக்க பழிவெறி, பொறாமை வன்மம்தான்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“எங்க தாத்தாவும் பேரனும் ஜோடி போட்டு கிளம்பிட்டீங்க?”
நொடி தாமதித்த அன்சாரி ஜாவேத். “பாய்! பேரனை மதீனா செஸ் அகாடமில சேக்கப் போறேன்… டெய்லி இரண்டு மணி நேரம் பயிற்சி. மாதக் கட்டணம் 2000 ரூபாய்!”
“த்சௌ த்சௌ… தப்பாச்சே…”
“எது?”
“முஸ்லிம்களுக்கு செஸ் விளையாட்டு ஹராம் ஆச்சே?”
“அல்லாஹ் சொன்னானா? நபிகள் நாயகம் சொன்னாரா?”
“மெக்கா மதீனாவில் சதுரங்க ஆட்டத்துக்கு ‘நர்தஷீத்’ என்கிற பெயர் இருக்கிறது. ‘யார் நர்தஷீத் விளையாடுகிறாரோ அவர் தனது கைகளைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவர் ஆவார்’ என்கிறார் நபிகள் நாயகம்…”
சிரித்தார் அன்சாரி ஜாவேத்.
“தவறாக ஒரு ஹதீஸை பயன்படுத்திகிறீர்கள் சுபான் பாய். நர்தஷீத் விளையாட்டு ஒரு பகடைக்காய் விளையாட்டு. நர்தஷீத் பேக்காமன் விளையாட்டின் முன்னோடி. நர்தஷீத் பலகையில் 24 கோடுகளும் நான்கு பிரிவுகளும் இருக்கும். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 15 வட்ட வடிவக் காய்கள். இரு ஆட்டக்காரர்கள் இரு பகடைகளை வைத்து விளையாடுவர். இந்த விளையாட்டைப் பற்றி தான் நபிகள் நாயகம் கூறினார்.
“நபிகள் நாயகம் உயிர் வாழ்ந்த காலம் கிபி 570 லிருந்து கிபி 632 வரை. நபிகள் நாயகம் காலத்தில் சதுரங்க ஆட்டம் மக்கா மதீனா நகரில் அறிமுகமாகவில்லை. அது இரண்டாம் கலீபா உமர் இப்னுல் கத்தார் பாரசீகத்தைக் கைப்பற்றிய போது தான் அரேபிய தீபகற்பத்திற்குள் நுழைந்தது. சதுரங்கம் மக்கா மதீனாவில் நுழைந்த காலம் கிபி ஏழாம் நூற்றாண்டின் பாதியில் அதாவது கிபி 640-கிபி 650 காலகட்டத்தில் நபிகள் நாயகம் மறைவுக்குப் பின்னே அரேபிய மக்களுக்குச் சதுரங்கம் அறிமுகமானது!”
“பொய் சொல்றீங்க ரயான் தாத்தா!”
“ஹக்கீம் தாத்தா! இன்னும் விளக்கமா சொல்றேன் கேளுங்க… நர்தஷீத் அட்டைக்கும் சதுரங்க அட்டைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சதுரங்க அட்டையில் 64 கட்டங்கள் உள்ளன 8 x 8 என்ற அளவில் கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கிடையாக 8 கட்டங்கள் நிலைக்குத்தாக 8கட்டங்கள். 64 கட்டங்களும் இரண்டு மாற்று நிறங்களில் கருப்பு வெள்ளை நிறங்களில் காணப்படும். இங்கு பகடை கிடையாது.
“இரண்டு ஆட்டக்காரர்கள் எதிரெதிரே அமர்ந்து விளையாடுவர். ஒருவருக்கு ஒரு ராஜா, ஒரு ராணி, இரண்டு யானை (கோட்டை ரூக்), இரண்டு மந்திரி (பிஷப்), இரண்டு குதிரை (நைட்), எட்டு சிப்பாய்கள் இருக்கும். இதே செட் வேறு நிறத்தில் எதிரில் விளையாடுபவருக்கும்.
“சதுரங்க ஆட்டம் கிபி 520ல் இந்தியாவில் தோன்றியது. இந்தியாவின் வல்லாட்டம்தான் சதுரங்கமானது. இந்தியாவிலிருந்து சதுரங்கம் ஐரோப்பா மற்றும் கொரியாவுக்குப் பரவியது. மங்கோலியா வழி ரஷ்யாவுக்குப் போனது. இந்தியாவிலிருந்து பாரசீகம் தாவியது. பத்தாம் நூற்றாண்டில் சதுரங்கம் ஸ்பெயினில் அறிமுகமானது. பதினோராம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சதுரங்கம் காலை வைத்தது!”
“இட்டுக்கட்டிப் பேசாதீர்கள் ரயான் தாத்தா. சதுரங்க ஆட்டம் ஹராம் என்று இமாம் அபூஹனீபா, மாலிக், அஹ்மது மற்றும் ஷியா பிரிவின் அயதுல்லா சிஸ்தானி தடை விதித்துள்ளனர்.
“சதுரங்க அட்டையில் வரும் ராஜா, ராணி, குதிரை உருவ அமைப்புகள் உருவ வழிபாட்டுடன் தொடர்புடையவை. கால விரயம் மற்றும் தொழுகை குடும்பக் கடமைகளுக்கு இடையூறு சதுரங்கத்தால் உருவாகிறது. சதுரங்கத்தில் பணமோ பந்தயப் பொருளோ வெற்றி பெற்றவருக்குக் கிடைப்பதால் அது ஒரு சூதாட்டம். சதுரங்க விளையாட்டின் போது பொய் சொல்வது, திட்டுவது, பகை வளர்ப்பது நடக்கிறது”
சிரித்தார் ஜாவேத்.
“உண்மையைத் தெரிந்து கொண்டே பேசுகிறீர்கள். அது ஹராம், இது ஹராம் எனக் கூறி முஸ்லிம்களை முடக்கிப் போடாதீர்கள். சதுரங்க ஆட்டத்தால் மூளைக்குப் பயிற்சியும் சிந்தனைத் திறன் வளர்ப்பும் கிடைக்கிறது. வடிவ அங்கீகாரம், நினைவாற்றல், மனவொன்றிப்பு, ஆழமான அர்ப்பணிப்பு கூடுதலாக ஆயிரம் மணி நேர பயிற்சியே சதுரங்கம்… சதுரங்கம் ஆடுவதால் சிறுவர் சிறுமியரின் ஐக்யூ கூடுகிறது!”
“ஐக்யூ கூடுவதை ஆதாரத்தோடு நிரூபியுங்கள் ரயான் தாத்தா!”
“சாதாரண மனிதனின் சராசரி ஐக்யூ 90லிருந்து 109 வரை. சதுரங்கக் கிராண்ட் மாஸ்டர்களின் சராசரி ஐக்யூ 120 லிருந்து 130 வரை. சதுரங்கம் ஒரு மனிதனுக்குத் திட்டமிடல், பொறுமை, இராணுவ யுக்திகளை கற்றுத் தருகிறது!”
“சதுரங்க விளையாட்டு ஓர் ஆணையோ ஒரு பெண்ணையோ கிரிமினல் ஆக்குகிறது!”
“நோ வே. உலகில் இதுவரை 2143 கிராண்ட் மாஸ்டர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் 1879 கிராண்ட் மாஸ்டர்கள் உயிரோடு இருக்கிறார்கள். அதில் 1400 கிராண்ட் மாஸ்டர்கள் இன்னும் தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த 1400 கிராண்ட் மாஸ்டர்களில் 44 பேர் பெண்கள்.
“சதுரங்கத்தின் 1500 வருட சரித்திரத்தில் ஒரு ஏழெட்டு பேரே குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நார்மன் ட்வீட் விட்டேக்கர் - கடத்தல் மற்றும் கார் திருட்டு.
அலெக்ஸ் ஷெர்சர் - சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள்.
கிறிஸ்டோபர் யூ - வன்முறை.
ஹாங் ஜி - மேட்ச் பிக்ஸிங்
டேவிட் டோஸ்கா - வங்கிக் கொள்ளை
“செஸ் போர்டு சீரியல் கில்லர் அலெக்சாண்டர் பிச்சுஷ்கிங் சதுரங்க அட்டையின் 64 கட்டங்களை கணக்கு வைத்து 60க்கும் மேற்பட்ட தொடர் கொலைகள் செய்தான். அந்தச் சீரியல் கில்லர் சதுரங்க ஆட்டக்காரன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது… 1500 வருடச் சதுரங்கச் சரித்திரத்தில் லட்சக்கணக்கான ஆட்டக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஏழெட்டு பேர் கிரிமினல் குற்றவாளிகள். கணக்கிட்டால் சொற்ப சதவீதம்…”
“இவ்வளவு பேசுகிறீர்களே… முஸ்லிம் கிராண்ட் மாஸ்டர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா? யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறீர்கள்?”
“யார் சொன்னது? முஸ்லிம் கிராண்ட் மாஸ்டர்கள் பலர் இருந்திருக்கின்றனர். ஈரானைச் சேர்ந்த அலிரெஸா பைரோஸா. அஜர்பைஜானை சேர்ந்த ஷக்ரியார் மேம்தியாரோவ். ஈரானைச் சேர்ந்த நோடிபெக் அப்துஸ்சத்ரோவ். அரபு நாடுகளைச் சேர்ந்த சலீம் சலா. உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்த ஜவோகிர் ஸிந்ரோவ். பங்களாதேஷைச் சேர்ந்த நியாஸ் முர்ஷித். பாகிஸ்தானைச் சேர்ந்த சுல்தான்கான். இவர்கள் எல்லாம் முஸ்லிம் கிராண்ட் மாஸ்டர்கள் தான்!”
“என்னதான் சொல்ல வருகிறீர்கள் ரயான் தாத்தா?”
“அரைகுறை மார்க்க அறிவாலும் அறியாமையாலும் பொறாமை மற்றும் பழிவெறியாலும் மார்க்கத்தைத் திரித்து பேசாதீர்கள். இஸ்லாமிய சிறுவர் சிறுமியர் மார்க்கத்திற்கு உட்பட்டு இம்மையில் சகல துறைகளிலும் கால் ஊன்றி ஜெயிக்கட்டும். நம் இஸ்லாமிய சிறுவர்சிறுமியரில் மேக்னஸ் கார்ல்ஸன், கேரி காஸ்பரோவ், பாபி பிஷ்ஷர், ஹிகாரு நகமுரா, பேபியானோ கருனா, விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்னானந்தா, அர்ஜுன் எரிகைசி, வைசாலி, கொனரு ஹம்பிகள் இருக்கக்கூடும். அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிச் சாதனைகளைப் பெருகச் செய்வோம்!”
“நீங்கள் ஆயிரம் சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். என் பேரக் குழந்தைகள் ஒரு நாளும் சதுரங்கம் கற்றுக் கொள்ளாது!”
“மார்க்கம் இனிமையானது. அதில் பின்பற்றும் சிலர்தான் கெடுதியானவர்கள். என் பேரன் ரூமி ரயான் சதுரங்கம் கற்றுத் தேறுவான். இன்ஷா அல்லாஹ் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் ஒரு செஸ் கிராண்ட் மாஸ்டர் உருவாக்கிக் காட்டுகிறேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!”
அப்துல் சுபானின் அதிக பிரசங்கித்தனமான வாயை மலக்குகள் மானசீகமாக தைத்தனர்.