“தன் கணவருக்குப் பிறக்காத ஒரு குழந்தையை அவர் தான் தந்தை என்று (பொய்யாக) இணைக்கும் பெண்ணுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது. அதேபோல தன் குழந்தையை தன்னுடையது அல்ல என்று மறுக்கும் தந்தைக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்” - நபிகள் நாயகம்
முந்தினநாள் இரவு இருகைகளில் வைத்த மருதாணியைக் கழுவி விட்டு கைகள் போதுமான அளவு சிவந்திருக்கிறதா என ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நஸ்ரியா.
நஸ்ரியாவுக்கு வயது 27. 170 செமீ உயரம். ரோஜா நிறம். ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றவள். முஸ்தபா ஹம்சாவைத் திருமணம் செய்து 5 ஆண்டுகள் ஆகின்றன. நான்கு வயதில் மகன்.
நஸ்ரியா பேரழகுடன் கூடிய ஒரு சுயமோகி. தனது பேரழகிற்குக் கவிதை நியாயம் வழங்கும் விதமாய், தான் ஒரு எலான் மஸ்க்கையோ அல்லது அவனின் மகனையோ மணந்திருக்க வேண்டும் என்கிற ஆவலாதி கொண்டவள் நஸ்ரியா.
பங்களா போல வீடு. கிலோக்கணக்கில் தங்க வைர நகைகள். கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்து பணிவிடை செய்ய நூற்றுக்கணக்கான வேலையாட்கள். 20 கார்கள். சொந்தமாய் ஜெட் விமானங்கள். மாமியார் மாமனார் நாத்தனார் கொழுந்தனார் இல்லாத கணவன்- இவையே நஸ்ரியாவின் கனவு. ஆனால் நிஜத்தில் நஸ்ரியாவுக்கு உடல் சுகவீனமான ஒரு மாமியார், அவ்வப்போது வீட்டுக்கு வந்து போகும் இரு நாத்தனார்கள் உண்டு. கணவன் முஸ்தபா ஹம்சா கண்ணாடிக்கடை வைத்திருக்கும் தொழிலாளி. மாதம் 40, 000 சம்பாதிப்பான்.
படுக்கையில் படுத்திருந்தவாறே மாமியார் உரத்தக்குரல் கொடுத்தாள்.
“அம்மா நஸ்ரியா!”
‘என்ன?” (சனியனே)
“பசிக்குது. பணியாரமும் கெட்டி சட்னியும் செஞ்சு குடும்மா!”
“ம் (எலிவிஷம் தரேன்… சாப்டுறியா கிழவி)”
எழுந்தாள். ஒரு சட்டியில் பழைய சோறும் ஒரு கிண்ணத்தில் ஊறுகாயும் கொண்டு போய் நீட்டினாள் நஸ்ரியா.
“உங்க மகன் சம்பாத்தியத்திற்கு இதைத்தான் தரமுடியும். கபுர் வா வாவென அழைக்கும் போது உனக்குப் பணியாரம் கேக்குதோ? நப்ஸை புறந்தள்ளிட்டு கொடுத்ததை சாப்பிடு. உன் மகன்கிட்ட ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணினே வாயை டாரா க்கிழிச்சிருவேன்…”
கணவன் முஸ்தபா ஹம்சா வந்துவிட்டான்.
“என்ன நஸ்ரியா. எங்கம்மாகிட்ட இவ்ளவு மோசமா பேசிக்கிட்டுருக்க?”
“உங்காத்தாளுக்கு வெள்ளைப் பணியாரமும் கெட்டி சட்னியும் வேணுமாம்!”
“செஞ்சுதான் கொடேன்!”
“நீ மாசம் 2 லட்சம் சம்பாதிச்சிட்டு வா. கிழவிக்கு பணியாரம் செஞ்சு ஊட்டி விடுறேன்!”
“கிடைக்கும் வருமானத்தில் திருப்திப்படு. உண்ட உணவில் உடுத்திய உடையில் கட்டிய வீட்டில் மணந்த வாழ்க்கைத் துணையில் திருப்தி படு…”
“இது கையாலாகாதவன் பேச்சு... உன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு நண்டானை, ஒரு சுண்டானை கல்யாணம் பண்ணாம பேரழகியான என்னை ஏன் கல்யாணம் பண்ணின?”
“உடலழகு கொஞ்ச நாள்தான். மன அழகே நிரந்தரம்!”
“உன் பயானை வேறெங்கயாவது போய் கொட்டு!”
“உன் துர்நடத்தை என்னை மிகவும் துன்புறுத்துகிறது!”
“கௌதம புத்தர் பாவனையில் பிலிம் காட்டாதே!”
போன் எடுத்து அம்மாவுக்கு வெள்ளைப் பணியாரமும் காரட்சட்னியும் ஆர்டர் பண்ணினான் ஹம்சா.
“காசை கரியாக்கிறியேடா….”
“கொஞ்சம் மரியாதையா பேசேன்!”
“அம்மா புடவையைப் பிடிச்சுக்கிட்டு சுத்ற ஒரு பொண்டுவசட்டிக்கு என்னடா மரியாதை?”
சண்டை போடும் தாய் தந்தைக்கு இடையே கிரீச்சிட்டபடி வந்து சேர்ந்தான் நான்கு வயது மகன் உஸ்மான்.
“அத்தா அம்மா சண்டை போடாதீங்க!”
“நம்ம மகன் மூஞ்சிக்காவது நீ சமாதானமாக இருக்கலாம்!”
“நம்ம மகன்!” இழிவாக உச்சரித்து ‘ஹிம்’ கொட்டி இளக்காரமாக சிரித்தாள் நஸ்ரியா.
“இவன் நம்ம மகன்னு யார் சொன்னா? அல்லாஹ் வந்து உன் காதில சொன்னானா?”
அழுதான் ஹம்சா.
“என்ன இப்டி பேசுற?’
“யோவ்! இவன் உனக்கு பிறக்கலைய்யா. உறவுல நட்புல இருபது ஆண்களாவது நம்ம வீட்டோட பரிட்சயம். அதில ஒருத்தனுக்கு பிறந்தவன்தான்ய்யா இவன். அந்த ஒருத்தன் பெயரைக் கேட்காதே. சொல்ல மாட்டேன்!”
“என் ஆண்மையை இழிவுப்படுத்தாதே. இமாம் தஹபி (ரஹ்) கிதாபுல் காபாயிர் என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். பாவங்களை அவர் இரு வகைகளாகப் பிரிக்கிறார். கபாயிர் என்கிற பெரும்பாவங்கள். சகாயிர் என்கிற சிறு பாவங்கள். நம் குழந்தையை பற்றி நீ அவதூறு பேசுவது பெரும் பாவமாகும்!”
“நான் சொல்வது கசக்கும் உண்மை!”
“கத்ஃப் எனப்படும் அவதூறு பரப்பும் செயல் பாவத்துக்குரியது நஸ்ரியா. இஸ்லாமியச் சட்டப்படி ஒரு பெண்ணின் மீது விபச்சாரி என ஆதாரமின்றி அவதூறு கூறுவது எவ்வளவு பெரிய பாவமோ, அதே போல தன்னைத்தானே அல்லது தன் குழந்தையை தவறான முறையில் சித்தரிப்பதும் பெரும் பாவமாகும்.
இஸ்லாம், குடும்ப அமைப்பையும் குழந்தையின் வம்சாவளியையும் பாதுகாப்பதற்கு மிகவும் உயர்ந்த முக்கியத்துவத்தை வழங்குகிறது.
உன்னுடைய அவதூறுப் பேச்சு குடும்பத்தின் கண்ணியத்தையும் கணவனின் மானத்தையும் குழந்தையின் எதிர்காலத்தையும் சீரழிக்கும்”
“நீயே மனைவியின் திருப்திக்கு சம்பாதிக்காத ஆண்மையற்றவன். மனைவியின் சந்தோஷத்திற்காகத் தன் வீட்டு உறவுகளைத் துறக்காத மலுமட்டை நீ. மனைவியின் பேரழகை ஆராதிக்கத் தெரியாத துன்மார்க்கன் நீ”
“உன்னுடைய பொய் ஒட்டுமொத்த குடும்பக் கட்டமைப்பை உடைத்து விடுகிறது. வாரிசுரிமை, வம்சாவளி உரிமை பிறழ்கிறது. உளவியல் பாதிப்பும் கணவனுக்குத் துன்பமும் மிகைக்கிறது!”
“நான் சொல்வது பொய்யோ அவதூறோ அல்ல. உண்மை குர்ஆனின் மீது சத்தியம் பண்ணவா?”
“நம்பிக்கையாளர்களான ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்திற்காக எவர்கள் துன்புறுத்துகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும் பகிரங்கப் பாவத்தையும் சுமக்கிறார்கள் என்கிறது திருக்குர்ஆன்!”
“அய்யய்யோ… என் கிறுக்கு புருஷன் நான் சொன்ன உண்மையை ஒத்துக்கத் திராணி இல்லாமல் திருக்குர்ஆன் வசனங்களை ஒப்பிக்கிறானே?”
“உலகம் அனைத்தும் ஒரு செல்வம். அந்தச் செல்வத்திலேயே மிகச் சிறந்த செல்வம் நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணானவள்’- என்கிறது ஸஹீஹ் முஸ்லீம். நீ நல்லொழுக்கமில்லாத பெண் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாயா நஸ்ரியா?”
“ஒரு நல்ல கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறிய ஆண்மையற்றவன் நீ, என உலகிற்கு அறிவிக்கிறேன். தேவைகள் நிறைவேறாத போது தேவைகள் நிறைவேறும் இடத்தைத் தேடி போவது தப்பில்லை தானே?”
“நம் பெரும்பாலான சண்டைகள் என் அம்மாவை முன் வைத்தே வருகின்றன. ‘பெண்ணின் மீது மகத்தான உரிமையுள்ளவன் கணவன், ஆணின் மீது மகத்தான உரிமையுள்ளவள் தாய்’- என்கிறார் நபிகள் நாயகம். பெற்றத் தாயை உதாசீனப்படுத்தி மனைவியின் காலடிகளில் விழுந்து கிடப்பது ஆண்மையா?”
“ஓர் ஆணின் முதல் 25 வருடங்கள் பெற்ற தாய்க்கு. அடுத்த 25 வருடங்கள் கட்டின மனைவிக்கும் பெற்ற குழந்தைகளுக்கும். மூன்றாவது 25வருடங்கள் பேரன் பேத்திகளுக்கு!”
“எந்தப் பெண் கணவர் திருப்தியுற்ற நிலையில் இறக்கிறாளோ அவள் சொர்க்கம் புகுவாள்!”
“இது ஆண்களின் பசப்பு மொழி. எந்த ஆண் மனைவி திருப்தியுற்ற நிலையில் இருக்கிறானோ அவன் சொர்க்கம் புகுவான் என்பதே உண்மை..”
இறுகினான் முஸ்தபா ஹம்சா.
தீர்க்கமாக யோசித்தான்.
“உஸ்மான் பிறந்த நான்கு வருடங்களில் 40 தடவையாவது அவன் எனக்கு பிறந்த மகன் அல்ல என அவதூறு சமைத்திருக்கிறாய், இதையெல்லாம் ‘குலா’ முறை விவாகரத்து பெற செய்கிறாயா? அல்லது வெறுமனே என்னை கோபமூட்டும் சாகச செயலா?- நான் அறியேன்… இனியும் வாளாதிருக்க மாட்டேன்…. நம் விவகாரத்தை நம் ஜமாஅத் விசாரிக்கட்டும்! பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு நஸ்ரியா… விவாகரத்துக்குப் பிறகு நீ மகாராணி போன்றதொரு வாழ்க்கை வாழ்ந்தால் எனக்கு பெருமகிழ்ச்சியே…”
- எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை ஜமாஅத்திடம் கொடுத்தான் முஸ்தபா ஹம்சா.
முத்தவல்லியின் உத்தரவின் படி ஹம்சாவுக்கும் உஸ்மானுக்கும் பித்ருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் உஸ்மானின் உயிரியல் தந்தை ஹம்சா என்பது உறுதி செய்யப்பட்டது.
மஹர் தொகையைக் கொடுத்து முறைப்படி நஸ்ரியாவை விவாகரத்து செய்தான் ஹம்சா.
ஹம்சா மறுமணம் செய்து சந்தோஷமாக அம்மா மகனுடன் வாழ்கிறான்.
தீ விபத்தில் சிக்கி முக அழகை இழந்த நஸ்ரியா இட்லி வியாபாரம் செய்கிறாள்.